வியாழன், 18 மே, 2017

# நிர்வாணம் அழகானது #
குழந்தைகள் நிர்வாணம்
குதூகலமான அழகு.
கால்நடைகள் நிர்வாணம் 
கடவுளின் அழகு.
கட்டிலறை நிர்வாணம்
காமத்தின் அழகு.
பைத்தியக்காரன் நிர்வாணம்
காலத்தை வென்ற அழகு.
குடிகாரன் நிர்வாணம்
கொழுப்பெடுத்த அழகு.
அவுசாரி நிர்வாணம்
அந்தப்பொழுதுக்கு அழகு.
மரங்களின் நிர்வாணம்
மங்கலமான அழகு.
பொழுதுகளின் நிர்வாணம்
பொதுவாகவே அழகு.
காற்றின் நிர்வாணம்
காலத்துக்கும் அழகு.
நெருப்பின் நிர்வாணம்
பொறுப்பான அழகு.
நீரின் நிர்வாணம்
நிலத்திற்கு அழகு.
ஆகாயத்தின் நிர்வாணமே
அனைத்திலும் அழகு.
ஆடைகளால் மறைக்கப்படும்
நிர்வாணங்களின் அழகை
குடைகளால் தடுக்கப்படும்
தூறலோடு ஒப்பிடுங்கள்.
அழகில்லாத நிர்வாணம்
ஆண்டவனுக்கும் கிடையாது.
இதோ,
இன்று முதன்முதலாக
ஒரு அவமான நிர்வாணம்.
உன் ஒரு ஜாண் வயிற்றுக்கு உணவளித்த
அந்த உழவன் உடையவிழ்த்த நிர்வாணம்.
அவன் நின்றது,
ஆடை வேண்டிய நிர்வாணமல்ல,
ஆசைப்பட்ட நிர்வாணமல்ல.
வேண்டுதலுக்கான நிர்வாணம்
வீரியமான நிர்வாணம்.
நியாயத்திற்கான நிர்வாணம்.
நியாயமான நிர்வாணம்.
ஆளும் வர்க்கத்து ஆண்டைகளே.
நினைவில் வையுங்கள்.
சேற்றில் அமர்ந்து நாற்று பிடுங்கிய
அவன் உறுப்புகளில் கசிந்த
வியர்வை பட்ட வீரியத்தில் தான்
உங்களுக்கான உணவுகள்
உருவாக்கப்பட்டது.
இப்போதும் அந்த நிர்வாணம்
உங்களுக்கு புனிதமாக
தெரியவில்லையா?
உங்கள் ............. ஒரு ........... என்பதை
ஒத்துக் கொண்டு ஓடிப் போங்கள்.
கோபங்களுடன்
கவிதாயினி எழில்விழி.
# சாதி இரண்டொழிய...... #
ஜாதி இரண்டுதான் - ஆனால்
காக்கை குருவியை தன் ஜாதி என்ற
பாரதிக்குத்தான் தெரியவில்லை.
மனிதனுக்கு இது பொருந்தாதென்பது.
ஜாதி இரண்டுதான்
ஆணும் பெண்ணும்.
துணைப்பிரிவு இரண்டுதான்.
உயர்வும் தாழ்வும் .
உட்பிரிவும் இரண்டுதான்.
பணக்காரன் ஏழை.
ஆனால் சிறப்புப்பிரிவு ஒன்றுண்டு
ஓங்கியது ஒடுக்கியது.
அன்னம் தண்ணி அனுமதி உண்டு.
அவன் அங்கும் இவன் இங்கும் மட்டும்.
மேலாடைகள் கூட பொதுதான்.
அவனுக்கு இடுப்பு இவனுக்கு கக்கம்.
இடுப்புக்கு கீழே அம்மணமாயினும்
கக்கம் விட்டு இறங்கக்கூடாது.
உங்கள் தூண்டில் மீன்களுக்கு
நாங்கள் புழுவானோம்.
உங்களுக்கு அறுத்த ஆடு உரித்து தந்த
எங்களுக்கு எலிகளை பிடித்துத்தர
உங்கள் நாய்களுக்கு உத்தரவு போட்டீர்கள்.
நாட்டுச்சக்கரை காப்பி தந்து
கார்பன் இனிப்புகளை
எடுத்துக்கொண்டீர்கள் என்று சிரித்தோம்.
நாட்டுச்சக்கரை பலத்தையெல்லாம்
உழைப்பென்ற பெயரில் நீங்கள்
உறிஞ்சிக் கொண்டதை
உணர்ந்த போதில் நாங்கள்
சக்கையாய் ஆகியிருந்தோம்.
எங்கள் திருமணங்களுக்கு பரிசப்பணம்
தந்து விட்டு முதலிரவுப்பாய்களை
உங்கள் அறைகளில் ஒளித்து வைத்தீர்கள்.
உறை பிரித்த சோப்பு வாசத்தை
நீங்கள் நுகர்ந்து விட்டு கறைபடுத்தி
கழுவி அனுப்பினீர்கள்.
உறை பிரிக்க நாங்கள் கை நீட்டும் முன்பே
எங்கள் நாசிகளை நாசமாக்கினீர்கள்.
சமநிலை மீறலாக சில சமயம்
உங்கள் சோப்புகள் எங்களை
குளித்துக்கொண்ட போது - எங்கள்
பரம்பரை வேர் வரை
பாதரசம் ஊற்றினீர்கள்.
பட்ட மர நிழலமர்ந்து உங்களுக்குள்
பாக்கு வெற்றிலை மாற்றினீர்கள்.
எங்கள் கூன் நிமிர்ந்து விட
கூடாதென்று உங்கள்
சுமை தாங்கி கற்களை
உடைத்துக்கொண்டீர்கள்.
கல்வி மறுத்தீர்கள் - எனவே
கேள்விகளை மறந்து விட்டோம்.
உண்ணுவதற்கு உமி தந்தீர்கள்.
தவிடே தங்கமென்று ஒத்துக் கொண்டோம்.
எங்கள் புஜத்திற்கு கீழே
கோடாரிக் காம்புக்கான
எழுத்து மரங்கள்
வளர்வதையும்
கூப்பிய கைகளுக்குள் கல்விக்
கோடாரிகள் இருப்பதையும்
எத்தனை காலத்திற்கு
மறைக்க வேண்டுமோ?
இனியுமிந்த ஒரு பிறவி
பிறக்கவும் வேண்டுமோ .
என் சிவனே !!!
எழுத்தை எனக்கு தந்த நன்றிக்கு - இனி
உன் கழுத்து நீலத்திற்கு களிம்பு தருவேன்.
கல்வி வேண்டி
கவிதாயினி எழில்விழி.
# பொய்மையும் வாய்மையிடத்து.... #
உலகத்து பொய்களின்
ஒட்டுமொத்த கை காட்டி.
உள்ளதை உள்ளபடி
ஒளித்து வைத்து விட்டு
கள்ளத்தை கருவாக்கி
காகிதத்தில் நிஜமெழுதும்
உலகபுகழ் பெற்றவர்கள்
தினமெழுதும் நாட்குறிப்பு.
உலகின் முதல் பொய்
கடவுள்தான் சொன்னார்.
விலக்கப்பட்ட கனி உண்டதால்
ஆதாம் அவராகவில்லை.
ஏவாள் ஏமாறியது தான் மிச்சம்.
ஆனால் கடவுள் தன்னை
காப்பாற்றிக்கொள்ள
ஒரு சாக்ரடீசை சாத்தான்
என்று சொன்ன பொய்
அங்கேதான் அரங்கேறியது.
புத்தன் பசி துறந்தான்.
பெண் துறந்தான். மண் துறந்தான்.
வீடு துறந்தான்.
நாடு நகர் ஆள் படை அம்பு
அத்தனையும் துறந்தான்.
ஆசையையும் துறந்தான்
என்பவரை நான்
கன்னத்தில் அறைவேன்.
ஆசைகளை துறந்து விட்டதை
நான் அறிந்து கொள்ள
ஆசைப்பட்ட எத்தனவன்.
ஷாஜகானின் பொய்களில்
தலையாய பொய்
மும்தாஜை காதலிப்பதாக
சொன்ன பொய்தான்.
வெட்டப்பட்டு வீசிய பின்
சாவதற்கு முன் என்னிடம்
சொல்லி விட்டுத்தான் செத்தான்
மும்தாஜின் காதல் கணவன்.
கோள்களின் பொய்யில்
ஜோசியன் வாழுகிறான்.
கோள்கள் சொல்லிய பொய்யில்
மனிதன் கோள்மூட்டி வாழுகிறான்.
சாகும் நாள் சமீபம் என்று
பொய் சொல்லித்தான் இங்கே
கடவுளும் வாழுகிறார்.
ஜாதியின் பொய்களில்
பல சமூகம் வாழ்கிறது.
கல்வியின் பொய்களில்
சில திறமைகள் வாழ்கிறது.
வீரத்தின் பொய்யில்
வீணர்கள் வாழும் போது
சரித்திரப் பொய்களில்
பல சக்கரவர்த்திகள்
வாழ மாட்டார்களா என்ன?
கடவுளின் பொய்யில்
சாத்தான் வாழும் போது
காதலின் பொய்யில்
சரவணன் வாழட்டும்,
அடேய் சரவணா..........
காதல் பொய் என்றாலும் நீ நிஜம்.
ஆமாம்.
பொய்மையும் வாய்மையிடத்து...........
காதலில் பொய்யில்லாத
கவிதாயினி எழில்விழி
# புத்தக தினம் #
அடேய் சரவணா ...............
அப்போது என் பெயர்
எழில்விழி என்று தான் இருந்தது.
உன்னை படிப்பதற்காக
புத்தகப்பூச்சியாக
உன்னில் நுழைந்தேன்.
வெளிவர மனமின்றி
படித்துக் கொண்டே
இருக்கிறேன்.
இப்போது என் பெயர்
பட்டாம்பூச்சி என்கிறார்கள்.
இனியும் படிக்கவே விரும்பும்
கவிதாயினி எழில்விழி.
# உள்ளம் பேசும் காதல் மொழி #
காதலின் முதல் மொழி மெளனம்
என்பதில் காதலர் எவருக்கும்
மாற்றுக்கருத்து கிடையாது.
சொல், வரி, எழுத்து வடிவம்
எதுவுமற்ற மொழியென்பதில்
மீதமுள்ளவருக்கு மறுப்பும் கிடையாது.
மௌன மொழிகளுக்கு
வடிவங்கள் பலவுண்டு.
கடவுளுக்கே தெரியாத
காதல் மொழி அதில் ஒன்று.
முத்தங்களின் போது மட்டும்
சிறு சத்தம் தரும் சந்த மொழியது.
உதடு பேசாமல் ஒரு மொழி பேசும்.
கண்களோ பார்வையால்
பல மொழி பேசும்.
நடக்கும் நடையோ
நானூறு மொழி பேசும்.
விரல் தொடங்கி விழிமுடிய
நாலாயிரம் மொழி பேசும்.
கொட்டாங்கச்சி, குரும்பை
தொடங்கி ஆறு நாள் வயதான
தாமரை மொக்கு காட்டி - அவன்
தண்ணீரில் மூழ்கி கொள்வான்.
என் கை மார் மறைக்கும்
மாராப்பை மறுபடியும் சரி செய்யும்.
கோட்டை நெல் குவியலில் இருந்து
நாழி நெல்லெடுத்து
நற்குவியல் செய்து வைத்து
அவன் பார்க்கும் போதெல்லாம்,
என் பருவத்திற்கு - ஏழாயிரம்
மொழிகள் எளிதில் புரியும்.
இரண்டு விரல்களை பின்னி காட்டும்
அவன் ஒவ்வொரு சைகையிலும் எனக்கு
இரண்டு இடங்களில் துன்ப வலியும்
இருபது இடங்களில் இன்ப வலியும்
வந்து வந்து மொழி பேசி
வரலாறு படைத்து செல்லும்.
நடந்து சொல்லும் உடல் மொழியின்
நளினத்தில், நிழலில், வழியில்,
திசையில், நேரத்தில்
உணர்த்தி விடும் விசயங்கள்
காதலர்கள் எமக்கின்றி
கடவுளுக்கு கூட தெரியாது.
காதல் மொழிகளால் உணர்த்தப்படுவதன்று.
காதல் பாஷைகளால் பரிபாலிப்பதன்று.
காதல் பேச்சுகளால் பேசிக்கொள்வதன்று
காதல் வார்த்தைகளால் வாசிப்பதன்று.
காதல் மெளனங்களால் கரம் இணைப்பது.
காதல் சைகைளால் சாகாமல் வாழ்வது.
காதல் நேசங்களால் நேசிக்கப்படுவது.
காதல் வாசிப்புகள் இன்றி வரலாறாவது.
பாஷைகளுக்கு புரியாத
பாசங்களை தெரிந்து கொள்ள,
மொழிகளுக்கு புரியாத
வழிகளை கண்டு கொள்ள ,
வார்த்தைகளின் வீரியத்தில்
வாழ்க்கையை கடந்து செல்ல,
காதலின் உச்சத்தில் யாரோ ஒருவர்
தன்னை கடவுளிடம் ஒப்புக்கொடுங்கள்'
ஆமாம். சரவணனைப் போல.
மெளனங்களோடு மொழிபேசும்
கவிதாயினி எழில்விழி.
# காதலென்பது யாதெனில் #
துரோகமென்பது யாதெனில்,
துரோணர் ஏகலைவனிடம்
துணிந்து கேட்டது.
வீரமென்பது யாதெனில்,
துரோணரிடம் ஏகலைவன்
தன் கட்டைவிரல் வெட்டி வீசியது.
தியாகமென்பது யாதெனில்,
களப்பலிக்கு காவு கொடுக்க
அரவான் தன்னையே தந்தது.
தானமென்பது யாதெனில்,
கண்ணனுக்கு கர்ணன் ரத்தத்தால்
தாரை வார்த்து கொடுத்தது.
பிச்சையென்பது யாதெனில்,
கர்ணனிடம் கண்ணன்
கையேந்தி நின்றது.
நட்பென்பது யாதெனில்,
எடுக்கவோ கோர்க்கவோ என்று
கெளரவர் தலைவன் கேட்டது.
சூட்சுமம் என்பது யாதெனில்,
சகுனியின் பகடைக்கு கண்ணன்
பாண்டவர் தலைவனை காயாக்கியது.
தருமம் என்பது யாதெனில்,
மாத்திரிக்கு மகன் வேண்டி தருமன்
சகாதேவனை உயிர்ப்பிக்க கேட்டது.
சபதம் என்பது யாதெனில்,
கெளரவர், பாண்டவர், பாஞ்சாலி
நாக்கினால் கண்ணன் நாடியது.
போரென்பது யாதெனில்,
குருச்சேத்திரக் களத்தில் கண்ணன்
கீதை சொல்லி முடித்தது.
தோல்வியென்பது யாதெனில்,
இலக்கணம் மீறிய தாக்குதலில் துரியன்
தொடை உடைத்ததில் பீமன் பெற்றது.
இனி
இந்த இதிகாச மாந்தருக்கு
இதுவரை தெரியாத ஒன்றை
சொல்லிக்கொடுப்போமா?
காதலென்பது யாதெனில்
................................
உங்களுக்கு வகுப்பெடுக்க
எனக்கு வாய்ப்பில்லை.
கண்ணா -
அவனை சற்று அனுப்பி வை.
அத்தனையும் கற்றுத்தந்து
அனுப்பி வைக்கிறோம்.
அடேய் சரவணா..........
கால இயந்திரம் ஏறி வந்து
என்னை ஒரு நொடி மட்டும்
சந்தித்து விட்டுப்போ.
காதல் என்பது யாதென்பதை
கண்ணனும் கூட கற்றுக்கொள்ளட்டும்.
என்றும் காதலுடன்
கவிதாயினி எழில்விழி.
# அன்பு #
வரையறைக்குள் சிக்காத
வார்த்தைகளின் வனப்பு.
மூளையின் முனைகளில்
வேரோடும் அமைப்பு .
மூளை தாண்டி வரும் போது
விற்பனை பொருளாவதில்
இனியும் இல்லை வியப்பு.
பிரபஞ்ச உணர்ச்சிகளின்
முதல் பெரும் பரிமாணம்.
பின்னொரு நாளில்
பண்டமாற்றாகி
பரிணாமம் ஆனதில்
கிடைத்ததொரு அவமானம்.
ரொட்டிக்கு வாலாட்டும் நாயின் அன்பு
கல்லால் அடிபடும் வரையில் தான்.
மகுடிக்கு ஆடும் பாம்பின் அன்பு
மயிலின் பார்வையில் படும் வரைதான்.
முதுமையின் கவனிப்புக்கு
இளமையில் சேமிக்கப்படும்
பொருளின் பெயர் தான்
பெற்றவர் அன்பு.
கட்டிலறை கதவுக்குள்
கண்மூடி தூங்கவும்
கட்டிக் கொண்டு தூங்கவும்
காட்டப்படுவதே கணவன் மனைவி அன்பு.
சார்பில்லாத அன்பென்பது
சாத்தியமில்லாத ஒன்று.
ஆகாயத்திற்கு நிலத்தின் மீது அன்பில்லை.
நிலத்திற்கு நீரின் மீது அன்பில்லை.
கடலுக்கு அலை மீது அன்பில்லை.
அலைக்கு காற்று மீது அன்பில்லை.
காற்றுக்கு மரம் மீது அன்பில்லை
மரத்துக்கு மழை மீது அன்பில்லை.
மழைக்கு நிலம் மீது அன்பில்லை.
இதையெல்லாம் எண்ணும் போது
இருப்பதன் பெயரே அன்பில்லை.
அழகான வார்த்தையில்
சொல்லப்போனால்
" அன்னை " க்கும் அன்பில்லை.
அட, அந்த ஆண்டவனுக்கும் அன்பில்லை.
அன்னையின் அன்புக்கு பின்
ஆங்கில " மதம் " இருந்தது.
ஆண்டவன் அன்புக்கு பின்
இந்திய " மதம் " இருந்தது.
பிரதிபலன் இல்லாத அன்பு
சாத்தானுக்கும் கூட
சத்தியமாய் கிடையாது.
எல்லாவற்றின் மீதும்
எனக்கு அன்புண்டு
என்பவரெல்லாம் வாருங்கள்.
உண்மை சொல்லும் நேரமிது
உறங்காமல் கேளுங்கள்.
உங்கள் உயிரின் மீதில்
உங்கள் பற்றுதலின்
பண்டமாற்றுதலின்
பவித்திரமான பெயர்தான் அன்பு.
காதலில் அன்பில்லை - அது
காமம் என்னும் பண்டமாற்று.
பிள்ளை மீது அன்பில்லை - அது
முதுமை பாதுகாப்பின் பண்டமாற்று.
குடும்பம் மீது அன்பில்லை. - அது
சமூக பெயர் தேடலின் சரியான பண்டமாற்று.
உலகின் பிரதிபலன் பாராது
எல்லார் மீதும் எல்லாவற்றின் மீதும்
பாரபட்சமின்றி அன்பு செலுத்துவது
ஒன்றே ஒன்று. ஆனால் உன்னதமான ஒன்று.
யாருக்குமே பிடிக்காது. ஆனால்
அதற்கு நம்மை பிடிக்காமல் போகாது.
ஆமாம்.
சரவணனை கடைசி நாளில்
தனக்குள் வாங்கி மூடிக் கொண்டது.
என்னை விழுங்க அன்புடன் தன்னை
தயாராக வைத்திருப்பது.
மண்ணை வணங்கிடும் மயக்கத்துடன்
கவிதாயினி எழில் விழி
# கலைகளின் முகவரி காதல் மட்டுமே #
உலகம் நோக்கும் பல வழிப்பாதை.
உணர்ந்து பார்த்தால் ஒரு வழிப்பாதை.
வியந்து பார்க்கும் வீணர்களாலே
விவரிக்க இயலா இரு வழிப்பாதை .
அனுபவம் என்பது கடவுள் என்றான்.
அனுபவிப்பதென்பது பூசாரித்தனமோ?
வேடிக்கை வார்த்தை வேண்டவே வேண்டாம்
விபரம் சொல் விரிவாக என்றேன்.
திருடுவது ஒரு கலையே என்றான்
திருடி வந்து காட்டென சொன்னேன்.
கருத்துச்சங்கிலி திருடிச்சென்றதை
காலையில் வந்து திருப்பித்தந்தான்.
உழைப்பது ஒரு கலையே என்றான்.
உழைத்து வந்து காட்டென சொன்னேன்.
இடுப்புக்கொடி ஒன்று எடுத்து வந்தான்.
முகர்ந்ததில் தெரிந்தது உழைப்பின் வாசம்.
வீரம் என்பதும் கலையே என்றான்.
வீரம் செயலில் காட்டென சொன்னேன்.
எய்ட்சில் இறந்த எதிர் வீட்டுக்காரியை
எடுத்து சென்று எரித்து வந்தான்.
சிரிப்பென்பது கலையில் சிறந்தது என்றான்.
சிரித்துக் காட்டியதில் தெரிந்து கொண்டேன்.
அழுகை என்பதும் கலையே என்றான்
அழுது காட்டினேன். துடைத்து விட்டான்.
காதல் என்பதும் கலையே என்றான்.
காதலிக்கும் எனக்கு தெரியும் என்றேன்.
காமம் என்பதும் கலையே என்றான்.
கல்யாணம் முடிந்து காட்டு என்றேன்.
தோல்வி என்பதை கலையில் சேர்த்தான்.
ஒற்றை முத்தத்தில் ஜெயிக்க வைத்தேன்.
மகிழ்ச்சி என்பது கலையே என்றான்
மஞ்சள் கயிறு பிடுங்கி மறைத்து வைத்தேன்.
கொள்ளை என்பது கலையே என்றான்.
இல்லை என்று சிரித்து சொன்னேன்.
இடுப்புத்தாவணி கொள்ளை போனதில்
விடிந்த பிறகே ஒத்துக் கொண்டேன்.
இறப்பு என்பதும் கலையே என்பதை
எடுத்துக் காட்டி இறந்தவனே,
படைப்பு என்பது கலைதான் என்று
கருவாய் வந்து என்னில் பிறக்கிறான்.
அனுபவங்களின் அடையாளம்
நெற்றிச்சுருக்கம் எனில்
இரண்டு மட்டுமே எனக்கு சொந்தம்.
மூன்று முதல் ஏழு வரை
அடேய் சரவணா ................
அவை யாவும் உனக்கே சொந்தம்
கலைகளை காதலிக்கும்
கவிதாயினி எழில்விழி.
# பூத்தது பூந்தோப்பு #
என் ஏஞ்சல்
இன்று முதல்
ஏஞ்சலினா
என்று
அழைக்கப்படுவதாக.
ஆமென்.
என் பாசமுள்ள
பெண்குட்டி
இன்று முதல்
பாரிஜாத பூவாக
மாறக் கடவதாக.
ஆமென்.
என்
காவியங்களின்
கருவாச்சி
இன்று முதல்
கருப்பு வைரம்
ஆகக் கடவதாக.
ஆமென்.
என்
ஆசைகளின்
இளவரசி
இன்று முதல்
ராஜகுமாரி
ஆகக்கடவதாக
ஆமென்.
என்
நேசங்களின்
இளைய மகள்
இன்று முதல்
இன்ப மகள்
ஆகக் கடவதாக
ஆமென்.
என்
விழி முழுதும்
நிறைந்த மகள்
இன்று முதல்
என் விழிகளாய்
மாறக் கடவதாக
ஆமென்.
என் தாகங்களின்
நீருற்று
இன்று முதல்
திராட்சைக் கிணறாக
ஆகக் கடவதாக
ஆமென்.
நான்
சுமந்த சிலுவைகள்
இன்று முதல்
தெர்மோ கோல்
சிலுவைகளாக
மாறக் கடவதாக.
ஆமென்.
பாசமுடன்
கவிதாயினி எழில்விழி.
# தோல்வி #
இதோ,
எப்போதும் நோ்மறை
சிந்தனைகளின் வழியே
செல்லும் குதிரையின்
சேணம் அகற்றி
விரும்பிய படி
பாயச் சொல்லும்
விந்தையான வழி.
உறவுகள், பெற்றோர்
உண்மை நட்புகள்
ஊரார்களும் கூறார்.
ஒரு ஒப்பற்ற பாடம்
சொல்லித் தரும் காலம்,
வெற்றியின் விரல் விட்டு
வெளியேறும் இக்காலம்.
சுதந்திரத்தின் திறவுகோல்.
வெற்றியின் பின் வாசல்
காற்றின் சுகந்தம்
சாக்கடையில் சந்தணம்
சந்தம் மீறிய நாட்டுப் பாடல்
சத்தியமாய்
அதுவே நம் தேசீய கீதம் .
குனிவதற்கல்ல தோல்வி
குட்டுவதற்கல்ல தோல்வி
குழைவதற்கல்ல தோல்வி
குறுகுவதற்கல்ல தோல்வி
கும்பிடப்படுவதற்கே தோல்வி
கும்பிட்டுப் பார்
வெற்றிக்கே அளிக்கலாம்
ஒரு தோல்வி.
வாழ்க்கைப் பாடம்
வாலிபப்பாடம்
வலிகளின் பாடம்
வழிகளின் பாடம்
விழிகளின் பாடம்
வித்தியாசப் பாடம்.
தோல்விகளின் பாடம்
படித்துப் பாருங்கள்.
வெற்றிகளின் வில்லங்கத்தில்
வீரியங்கள் குறைந்து விடும்.
தோல்வி.
பெறுபவன் அதிர்ஷ்டசாலி.
குருடனான பின்புதான்
கண்ணப்பன் கடவுளை
சேர்ந்தான்.
என்னப்பன் துணை நிற்பான்.
எழுந்து வாருங்கள்
வாழ்வை
எதிர்கொள்வோம்.
தோல்வியில் துணிவுடன்
கவிதாயினி எழில்விழி.
# நெருப்பின் காதல்கள் #
வியர்வையின் வாசத்திற்கு
இரவு பகல் வித்தியாசம் காட்டுகிறாய்.
பகலில் உழைப்பின் வாசம்.
இரவில் ஊடலின் வாசம்.
கோழிகளின் கொக்கரிப்புக்கு
கோலமே போட்டுக் காட்டும் உனக்கு - இந்த
காளியின் கத்தல்களில் உள்ள
காதல் தெரியாதா என்ன?
வார்த்தைகளின் நிறம் உறிஞ்சி
வாசலில் விட்டெறிகிறாய் - அது
வண்ணங்களில் குளித்தெழுந்து
வாசல் திறக்கும் போதெல்லாம்
வானவில்லாகி சிரிக்கிறது.
நீ பேசாத வார்த்தைகளை எல்லாம்
மெளனம் தன் மொழியாக்கி கொண்டது.
கவிதையோ? காவியமோ?
பெயர் வைப்பது உன் பாடு
ஏரிக்கரை ஆல மரம் நீ
கரை தாண்டி கிளை விரித்து
நீர் தாண்டி வேர் வளர்த்து
கம்பீரமாய் நிற்கிறாய்
கூடடையும் ஆவலுடன் வருகிறேன்.
உன் நினைவுகளை சுமந்தபடி.
விலாங்கு மீனென்று
பாம்புக் கறி தந்தவன் தானே,
தண்ணீருக்குள் நானழுகிறேன்.
மீன்களுக்கு கண்ணீர் துடைக்கிறாய்.
அடேய் சரவணா ...........
நெருப்புக்குச்சி உன்னை
என்னில் ஒரு முறை நனைத்துக்கொண்டேன்.
தீப்பெட்டி நான் - இப்போது
எரிந்து கொண்டிருக்கிறேன்.
நெருப்பு சுடாத காயங்களுடன்
கவிதாயினி எழில்விழி.
# மழை #
அடேய் சரவணா .........
இன்று மழை பெய்தால்
நன்றாக இருக்கும் தானே?
கேட்ட கொடுமைக்கு
பிடித்து மடியிருத்தி
மழைக்கவிதை ஆரம்பிக்கிறாய்
சக்கரவாகங்கள் குடித்துச்செரித்து
வெளியிடும் எச்சில்கள்
பூமியை நனைக்கும் போது
நீங்கள் அதற்கு மழையென்று
பெயரிட்டு அழைக்கிறீர்கள்.
நீர் வற்றிய குளத்துச்சேற்றில்
உயிர்ச்சமாதி ஆகிச்செத்த
மீன்களின் கண்ணீர்
மீண்டும் பெய்து முட்டை நனைத்து
உயிரை உயிர்ப்பிக்கும் உயிர் நீராய்
பெய்வதை நீங்கள்
மழையென்று அழைக்கிறீர்கள்.
அடப்போடா.......
மடியிலிருந்து திமிறி எழுந்து
உன்னை மடியிருத்தி கொள்கிறேன்.
மழைக் கவிதை கேட்டால்
மழை தத்துவம் சொல்கிறாய் மடையா ...
மழை இயல்பானது.
உன் சிரிப்பைப் போல
உன் நடையைப் போல
உன் கிண்டல் போல
உன் காதல் போல
உன் பார்வைக்குறும்பில்
நான் பருவமடைந்ததைப்போல
மழை இயல்பானது.
விருப்பமில்லா திருமணத்தின்
முதலிரவு கனவின் போது
சொல்லப்பட்ட முத்தலாக் அது.
முதல் தலாக்கில் மேகக்கதவு திறந்து
மறு தலாக்கில் விண்வழி பறந்து
கடைசி தலாக்கில் உன்னைத் தொட்டு
பின் மண்ணைத் தொட்டு
முக்தி அடைந்த என் கண்ணீர் போன்றது.
முகத்திரை இல்லாமல் வரும்
என்னை நனைத்து மகிழ்ந்தது
நேற்று பெய்த அந்திமழை .
இன்று ஏமாறப்போகிறது
முகத்திரையுடன் நடக்கும் என்னை
இன்றும் நனைத்து மகிழ்கிறதே.
அடையாளம் என்ன?
திரும்பிப் பார்க்கிறேன்.
நேற்றைப் போலவே
பின்னால்தான் வருகிறாய்.
கண்களை மூடித்தான்
மழைப்பேச்சு பேசினேன்.
இதோ மழையில் நனைகிறேன்.
மடியை விட்டு எழுந்திருடா ....
உன் வியர்வை துடைத்து விட்டு
நான் வீட்டுக்கு கிளம்பணும்.
மாலையிலாவது மழை வேண்டி
கவிதாயினி எழில்விழி.