சனி, 24 ஜூன், 2017

# பின் தொடராதீர்கள் #

ஒரு தோளில் ஊது பத்தி பையும்
மறு தோளில் குருட்டு நண்பன்
கையும் தாங்கி நடக்கும்
நடுத்தெரு நம்பியண்ணன் மகன்
சிரித்தே கொல்லும் செவிட்டு ஸ்ரீதரனை
பின் தொடர்ந்து விடாதீர்கள்
நட்பென்றால் என்ன என்பதை
நீங்கள் தெரிந்து கொள்ளக்கூடும்.

காலைக்கடனுக்கோ
கத்திரிக்கா காட்டுக்கோ
கபடி விளையாட்டுக்கோ
கட்சி தகராறுக்கோ
காதல் தூதுக்கோ
களவு பஞ்சாயத்துக்கோ
எங்கோ செல்லும்
கனகு மாமாவை பின்தொடரும்
அவர் நாயை மட்டும்
பின் தொடர்ந்து விடாதீர்கள்
நன்றியென்றால் என்னவென்பதை
நீங்கள் தெரிந்து கொள்ளக்கூடும்.

ஆச்சரியம் ஆனால் உண்மை.
சுப்பையா தாத்தா
எப்போது கிளம்பினாலும்
அவர் கையில் பிடிக்காமலே
கழனிக்கு பின்னாலயே
செல்லும் செவலைகளை மட்டும்
பின்தொடர்ந்து விடாதீர்கள்.
உழைப்பென்றால் என்னவென்பதை
நீங்கள் தெரிந்து கொள்ளக் கூடும்.

மேலத்தெரு மணி மனைவியும்
கீழத்தெரு காமாச்சி புருசனும்
இரண்டாம் காட்சி சினிமாக்கு
தனித்தனியா போறாங்கன்னு
நெனச்சி ஒரு போதும் அவர்களை
பின்தொடர்ந்து விடாதீர்கள்.
முற்றுப்பெறாத ஒருகாமத்தின்
முகவரி காட்டாத முகவரியை
நீங்கள் தெரிந்து கொள்ளக்கூடும்.

தரையைப் பார்த்தபடி
தெருவின் ஓரமாக நடந்து
எதிர் வரும் ஆண்களின்
பார்வை தவிர்த்து
பெண்களின் பார்வை வெறித்து
வழியும் கண்ணீரை
மிட்டாய் மறைத்திருக்கும்
மஞ்சள் பையில் துடைத்து
நடந்து வரும் கணபதி அண்ணனை
பின் தொடர்ந்து விடாதீர்கள்.
குழந்தைகளை துறந்து
குழந்தைசாமியுடன் ஓடிப்போன
குப்பாயி அண்ணியின் துரோகத்தை
நீங்கள் தெரிந்து கொள்ளக்கூடும்.

கோவில் திண்ணை நிழலிலும்
ஆத்தங்கரை ஆலமர நிழலிலும்
மச்சிவீட்டு மாலை நிழலிலும்
மாந்தோப்பு மதிய நிழலிலும் நின்று
இன்றைய தன் குடிசையையும்
சென்ற வருடம் ஏலத்தில்
கைமாறிய தன் மச்சி வீட்டையும்
வெறித்துப்பார்க்கும்
வீராச்சாமி சித்தப்பாவை
பின்தொடர்ந்து விடாதீர்கள்.
கடனுக்கு கையெழுத்து போடுவதும்
கழுத்துக்கு தூக்கு மாட்டுவதும்
ஒன்றென்ற உண்மையை
நீங்கள் தெரிந்து கொள்ளக்கூடும்.

ஏரியில் நான் கண்ட
ஒற்றைத் தண்டு
இரட்டைத்தாமரையை
நான் நீருக்குள் மறைத்து
வைத்திருப்பதை தெரியாமல்
பறித்து வந்து பரிசளிப்பதாய் கூறி
பராக்கிரமமாய் செல்லும்
என் சரவணனை ஒருபோதும்
பின் தொடர்ந்து விடாதீர்கள்
காதல் என்றால் என்னவென்பதை
கணநேர இடைவெளிக்குள்
நீங்கள் கண்டு கொள்ளக்கூடும்.

என்னோடும் உள்ள காதலுடன்
கவிதாயினி எழில்விழி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக