திங்கள், 28 ஆகஸ்ட், 2017

# என்னை யாருக்கும் பிடிப்பதில்லை. #

காரணம் எனக்கும் தெரியும்.
உன் குரலிலும் பேசுவேனாம்,
ஊரைச்சுற்றி திரிவேனாம்,
தூண்டில் போட்டு பாம்பு பிடிப்பேனாம்,
ஊர் மரமேறி இளனி குடிப்பேனாம்,
மான் கொம்பு சுழற்றுவேனாம்,
மாமன் மகனை அடிப்பேனாம்,
அற்றைத்திங்களற்ற அமாவாசையில்
அடிவயிற்றை கிழித்து பிறந்தேனாம்.
என்னை யாருக்கும் பிடிப்பதில்லை.

உன்னை எல்லோருக்கும் பிடிக்குமாம்
என்னிடமே பட்டியலிடுகிறார்கள்.

எங்காத்தாவுக்கும் ஒங்காத்தாவுக்கும்
இரண்டு சொம நாத்துக்கட்டு
இளைய கோனார் வயல் வரைக்கும்
எசப்பாட்டும் இளஞ்சிரிப்புமாய்
சுமந்து கொண்டு சேர்த்தாயாம்.
அடியே மாமியாளே,
அயினி தேய்க்கறப்போ
சண்ட வருமில்ல
அன்னிக்கு வச்சிக்கறேன்டி
உங்க இரண்டு பேர்த்தயும்.

சுருட்டுக்கட்டும் சுருள் புகையிலையும் எங்கப்பனுக்கு பிடிக்குமென்பது
என்னையடுத்து உனக்கும்
தெரிந்திருக்கிறது.
யோவ் மாமனாரே,
சம்மந்தி சண்ட வரப்ப சொல்லு
நான் உம் பக்கம் சேந்துக்கறேன்.

குரங்கு பெடல் சைக்கிளை ஒட்ட
எந்தம்பிக்கு சொல்லிக் குடுத்து
பாராட்டு பத்திரம் வாசித்து
என்னைவிட்டு அவனை விரட்டியது
ஏனோ அவனுக்கு பிடிக்கிறது.
வீட்டுக்கு வாடா
குரங்கு பெடல் போட்ட கால
குரங்கு காலாக்கிடறேன்.

என் வீட்டு செவலை இரண்டும்
ஓர் நாள் இரவல் வாங்கினாய்,
அய்யர் வயல் வரைக்கும்
உழவு நுகத்தை நீ சுமந்து
மேய்ச்சலிலேயே ஓட்டி போனாயாம்.
அசை போடும் சாக்கில்
அளவளாவிக் கொண்டிருக்கிறது.
புண்ணாக்கு தண்ணில
புளிய கரைச்சு ஊத்தரேன்
வாங்கடியேய் காளைகளா !

அழகரசன் டீக்கடையில்
அக்கவுன்டில் ரொட்டி வாங்கி
அன்னாடம் கோவில் நாய்க்கு
கொண்டு வந்து கொடுப்பாயாம்.
மீன் முள்ளு கலந்த சோத்துக்கு
உறுமி குலைக்கும் சாக்கில்
என்னிடமே சொல்கிறது.
என் வீட்டு ஜிம்மி
அடி செருப்பால நாயே!

ஆத்துமீனுக்கும் ஒன்ன பிடிக்குதாம்.
என்ன கடிச்ச வாயோட
ஒன்ன வந்து கடிக்கச் சொல்லி
கத்துக்குடுத்திருக்கியாம்ல.
அன்னன்னிக்கு சாயங்காலம்
அரிச்சி புடிச்சி அவிச்சி திங்கறேன்.
அடுத்த நாளும் கடிக்கும் மீனுக்கு
பாடம் நடத்தும் பாசக்காரா
பாவம் மீனு. பாடத்த மாத்து.

அடேய் சரவணா .............
பிரியங்களால் பிடித்து வைத்து
பிரியாமல் நடத்தி வைத்து
புரியாமல் நடந்து கொள்ளும்
புதிரான மனசுக்காரா,
நீயிருக்கும் மனசுக்கு உன்னப் போலவே
ஊர் மரத்து இளனி பிடிக்குது.
ஊந்து போகும் பாம்பு புடிக்குது.
மான் கொம்பு புடிக்குது - வருங்கால
மாமம் மகன் ஒன்னயும் பிடிக்குது.
ஆனால்
என்னை யாருக்கும் பிடிப்பதில்லை.
ஆமாம்
உன்னைத் தவிர............!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக