சனி, 5 ஆகஸ்ட், 2017

# திண்ணையும் வேர்களும். #

திண்ணை.

நாலு கட்டு வீட்டுக்குள்ளும்
நாலு வேலி வீட்டுக்கு வெளியிலும்
நீண்டிருந்த மனங்களின் சாய்விருக்கை.
அருகிருக்கும் ஆலின், வேம்பின்
நிழல்களின் ஓய்விருக்கை.
வெட்டுப்பட மாட்டோம் என்ற அதன்
வேர்களின் நம்பிக்கை.

பார்க்காத பஞ்சாயத்து கிடையாது
என் வீட்டு திண்ணை.
தீராத பஞ்சாயத்தும் கிடையாது
என்பது அதன் பெருமை.
இன்றைய பஞ்சாயத்து  இது வரை
இல்லாத கொடுமை.
ஆரம்பிக்கட்டும். ஆரம்பிக்கட்டும்.

கோலம் முடித்த கையோடு திண்ணையில்
பாய் விரித்து விட்டேன்
கோலப் பொடி துடைக்காத கையோடு
ஒருக்களித்து படுத்தும் விட்டேன்.
வசனங்களுக்கு காதையும்
கிள்ளலுக்கு கன்னத்தையும் தவிர
மீதமெல்லாம் மூடிக்கொண்டேன்.

“ என்னடி ஆச்சு உனக்கு “ கன்னம் தொட்டு
சிரித்து கன்னம் கிள்ளிப் போகிறாள்
காரணம் தெரிந்த மதினி மாராயி.
துடைப்பம் எடுக்க வந்த எங்காத்தா இருளாயி
இரண்டு மாத்து மாத்திட்டு போறா
எனக்கு இரண்டு எறும்புதான் கடிச்சது.

உள்ளங்கால் கிள்ளுனது தெரியாமலா போகும்
கண்ணு திறக்காமலே “ போடா “ சொன்னதுக்கும்
சிரித்தே செல்கிறான் மாமன் மகன் மருதமுத்து .
அய்யோ! அங்காயி கெளவி வராளே,
குனிஞ்சி மூக்கு நுனி மோந்து பாத்து
சனியன். பயமுறுத்திட்டாளே ன்னு
குண்டிய கிள்ளிபோகுது அந்த சனியன்.

பக்கம் அமர்ந்து என் இமை வலிந்து விலக்கி
ஆளக்காணாமே என்று சிரித்து அடி வாங்கி எழுந்து போகிறாள் சித்தி மவ சித்திராங்கி.
மாடு பட்டி திறக்க வந்த மாட்டுத்தாத்தா
பக்கம் வருவதற்குள், கை சைகை பார்த்து விட்டு
நடத்துடி “கண்டா…….. “ திட்டிச் செல்கிறார்.
போய்யா, போய்யா, பாட்டிகிட்ட சொல்லிராத!

திறந்து விட்ட பட்டி மாடுகளும் வந்து
கால் நக்கி கெளம்பியாச்சி.
அப்பன வரச் சொல்றேன்னுட்டு
ஆத்தாளும் கெளம்பியாச்சி.
களைபறிக்க வாடின்னுட்டு
கருப்பாயியும் கெளம்பியாச்சு.

பொழுது விடிஞ்சிடுச்சி புரண்டும் படுத்தாச்சி.
கண்ணு கூசுமுன்னு காதை திறந்தாச்சு
ஆனா, வாசத்துலயும் வருவான்னு
மூக்குக்கு மட்டும் தான் தெரிந்சிருக்கு.
சீக்கிரம்  கன்னம் கிள்ளிப் போடா - நான்
கண்ண தொறக்கணும் கஞ்சியும் குடிக்கணும்

கன்னமும் கிள்ளாம, கழுத்துக் குழி தடவாம
இடுப்புப் பள்ளம் தடவி, இளநெஞ்சி கிள்ளி
பஞ்சாயத்த முடிச்சி வச்சிட்டு
பாக்காமா போறியே பாசக்கார சரவணா.......
என் பருவத்திண்ணையை இன்று முதல்
உன்பார்வையின் வேர்கள் தாங்கட்டும்.
நான் சுருட்டிச் செல்லும் பாயையும்
தூக்கிச் செல்லும்  தலையணையும்  மீண்டும்
உன் வியர்வையின் வேர்களே
விரித்துக் கொள்ளட்டும்.

காத்திருக்கும்
கவிதாயினி எழில்விழி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக