சனி, 5 ஆகஸ்ட், 2017

# எடுத்துப்போ ....... #

வேட்டைக்காரன் நீ.
நாய் இல்லையென்று நடிக்க வேண்டாம்.
வேட்டையாடி கொண்டு வா
விறகும் கொஞ்சம் கொண்டு வா
ஆக்கி அவித்து தருகிறேன்
போதாது என்று சொல் -
போர்வைக்குள்   வந்து உன்
மீதப்பசி தீர்க்கிறேன்.
விடிவதற்குள் விடுவதென்றால்
இன்றும் என்னை எடுத்துப்போ.

குடுகுடுப்பைக் காரன் நீ
ஜக்கம்மா வாக்கென்று
ஜல்லியடிக்க வேண்டாம்
உங்கம்மாவை சம்மதிக்க வை.
எங்கம்மாவை என்னிடம் விடு.
ஜக்கம்மா வாக்கெல்லாம்
நானே சொல்கிறேன்.
பலிப்பவர்கள் பிழைக்கட்டும்.
என் காதல் வாக்கு பிழையானால்
என்னை உன்னுடனேயே எடுத்துப்போ.

கரடிக்காரன் நீ
உன் கரம் பற்றிய கரடி நான்
இடையில் மரமிருப்பதாய் சொல்லி
இந்த இடறி விழும் நடிப்பெல்லாம்
என்னிடத்தில் வேண்டாம்.
தேன் தானே வேண்டும்
இந்தா,
இதழ்.
ஊசி குத்தும் வேலை வேண்டாம்
இதழ் உறிஞ்சி எடுத்துப்போ.

பாம்பாட்டி நீ
ராஜநாகம் நான்
மகுடி ஊதி பிடிப்பதாய்
என்னிடத்தில் நடிக்க வேண்டாம்
எனக்கு செவி உண்டு
எனக்கும் ஊத தெரியும்
உன் கழுத்தைக் கொடு
பிடித்துக் கொள்கிறேன்.
நீலகண்டன் மகன் தானே நீ ,
அடேய் சரவணா ..............
என் செவியோரம் உன் இதழுரசி
என் விஷம் முழுதும் எடுத்துப்போ.

விஷமில்லா ராஜநாகமாகி
கவிதாயினி எழில்விழி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக