சனி, 5 ஆகஸ்ட், 2017

# மாறி விட்டார்கள் #

தேன்மொழிகளும் செல்விகளும்
பூங்கொடிகளும் எழிலரசிகளும்
இல்லாத கிராமங்களில்
இன்று சரவணன்கள் மட்டுமே
கணணிகளில் காதலிக்கிறார்கள்.
கண் விழித்தே தூங்குகிறார்கள்.

தேன்மொழியை தேடாதீர்கள்
அவள் பெயர் இப்போது தேவதை.
ஒப்பனையில் வாழும் அந்த தேவதைக்கு
இப்போது குளிச்சசடை போட கேசமில்லை.
அள்ளி முடிக்க கூந்தலில்லை.
போனி டெய்ல் கொண்டையோடு
ஸ்கூட்டியில் விரைகிறாள்.
சரவணன் தி கிரேட் ஐ காதலிக்கிறாளாம்.
சரவணன் ஓட்டிய மாட்டு வண்டி
தேன்மொழி கழற்றி சுற்றிய
மல்லிகை சரத்துடன்
காதலின் தகனத்தில்
எரிந்து கொண்டிருக்கிறது.

செல்விகளை தேடாதீர்கள்
சரவணன் காதலுக்காய் சாட்டையடி பட்ட
செல்விகள் இப்போது ஏழைகள் இல்லை
சாயம் பூசிய தலையும் உதடுகளும்
சர்க்கஸ் காரனாக்கி விட்ட கோலத்துடன்
ஆக்டிவாவில் அலையும் அவளை
பல்சரில் தொடரகிறான்
அந்த பரட்டைத்தலை சரவணன்
லோடு கேரியர் சைக்கிளில்
உட்கார்ந்து வந்த செல்விகளின் பிட்டங்களிலும்
சைக்கிள் மிதித்த சரவணன்கள் கால்களிலும்
அந்த தழும்புகள் மறைந்து விட்டன.

பூங்கொடிகளை தேடாதீர்கள்.
புதுமைப்பெண்களாகி விட்டார்கள்.
ஆன்டிராய்ட் போனுடன் அலையும்
அவர்களிடம் சற்று ஆண்மையும்
கலந்திருப்பதாய் தெரிகிறதாம்,
தன் ஃபாரின் பைக் பயணத்தில் அவளை
முதுகில் சாய்த்தபடி பயணிக்கும்
அந்த ஸ்பைக் தலை சரவணன்களுக்கு.
காற்றில் தூக்கும் தாவணி தடுக்க
ஆறு இடங்களில் பூங்கொடிகள் குத்திய
அந்த சேஃப்டி பின்கள் துருப்பிடித்து விட்டன.
தொடை தெரிய தூக்கிய கட்டிய
சரவணன்களின் லுங்கிகள்
சாயமிழந்து கிழிந்து தொங்குகின்றன.

எழிலரசிகளும் மாறித்தான் விட்டார்கள்.
தலை விரித்து நுனி முடிச்சு இடுவதில்லை.
முழம்பூச்சரம்  முடிவதில்லை.
அப்போது  போல் இல்லாமல் இப்போதெல்லாம்
மாராப்பில் கவனம் வைக்கிறார்கள்.
மாலையிலும் குளிக்கிறார்கள்.
மாவிளக்கு ஏற்றுகிறார்கள்.
வருடத்தில் ஒரு நாள் ஊருக்கு உணவிடுகிறார்கள்.
மாதத்தின் முப்பதாம் நாளில்
சரவணன்கள் சமாதிக்கு
பூக்களுடன் போகிறார்கள்.

பூக்கூடையுடன் போகிறாள்
கவிதாயினி எழில்விழி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக