செவ்வாய், 5 ஜூன், 2018

# எனக்கும் உனக்கும் ஒரே ஆசை #

எனக்கான விடியல்களுக்கு
உன்னை சூரியனாக வேண்டுகிறேன்.
நீயோ நிலவாகி விடுகிறாய்.
அதனால் எனக்கு
இரவுகளே பிடித்துப் போனது.

எனக்கான உடைகளுக்கு
உன்னை கொக்கிகளாக வேண்டுகிறேன்.
நீயோ நூலாகி விடுகிறாய்.
கொக்கிகள் அப்படியே இருந்தாலும்
நூல் பிரிவதே எனக்கும் பிடிக்கிறது.

எனக்கான இரவுகளுக்கு
உன்னை இசையாக வேண்டுகிறேன்.
நீயோ மோகனம் மட்டுமே இசைக்கிறாய். முத்தத்திலும் உன் மோகனம் கேட்பதால்
சத்தம் இல்லாமலும் கேட்கப் பிடிக்கிறது.

எனக்கான குளியல்களுக்கு
உன்னை மஞ்சளாக வேண்டுகிறேன்.
நீயோ தண்ணீராகி விடுகிறாய்.
ஆடையோடு குளித்து நான் தோற்கிறேன்
ஆடைக்குள் நுழைந்து நீ ஜெயிக்கிறாய்.

எனக்கான உன் மூச்சை
முந்தானையில் முடிந்திருக்கிறேன்
மூச்சு முட்டுவதாய் கூறி
முடிச்சவிழ்ப்பதாய் கெஞ்சுகிறாய்.
பிரியும் போது தான் தெரிகிறது
நீ முந்தானையை அவிழ்த்திருக்கிறாய்.

உன்னால் மட்டும்  எப்படி முடிகிறது.
எங்கப்பனுக்கு யாரோவாய்,
எங்கம்மாவுக்கு வேலையாளாய்
என் தம்பிக்கு நட்பாய்
எனக்கு மட்டும் இருளிலும் நிழலாய்.

அடேய் சரவணா .....
எனக்கான ஒவ்வொன்றிலும்
ஒவ்வொரு ஆசை சொல்கிறேன்.
நீயோ உன்னாசை சொல்கிறாய்.
ஒத்துக் கொள்வதாய் நடிக்கிறேன்.
ஒன்று தெரியுமா?
உண்மையில் நான் தான் ஜெயிக்கிறேன்.

முடிவில் தோற்றுவிட்ட
கவிதாயினி எழில்விழி
# அதையும் நீயே தா சாமி #

உன் வரவுக்கு பின்னர்தான்
வர்ணங்களற்ற எங்கள் வானவில்
தனக்குள் ஆயிரம் வர்ணங்கள்
உண்டென்பதை அறிந்து கொண்டது.

உன் வரவுக்கு பின்னர்தான்
மெளனங்களால் மட்டுமே எழுதப்பட்ட
எங்கள் கவிதைகள் தமிழால் தங்களை
அலங்கரித்துக்கொண்டது.

உன் வரவுக்கு பின்னர்தான்
அன்பென்ற உணர்வுக்கு
அன்புதான் பண்டமாற்று
என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

உன் வரவுக்கு பின்னர்தான்
எங்கள் விடியல்களை
சூரியன் வந்து தொட  மறுத்தது
நிலவே வந்து தொடங்கி வைத்தது.

உன் வரவுக்கு பின்னர்தான்
 வார்த்தைகளுக்கு வர்ணம் பூசும்
 வாமன வித்தை எங்களுக்கு
 வசமாகிப்போனது.

உன் வரவுக்கு பின்னர்தான்
வாழ்க்கைச் சாரல்களில் நனைந்த
பட்டாம்பூச்சிகள் விலகிக்கொண்டது
எங்கள் விலாவில் இறக்கை முளைத்தது.

உன் வரவுக்கு பின்னர்தான்
அன்புக்கு கோபத்தையும்
கோபத்துக்கு அன்பையும்
கேடயமாக்க கற்றுக்கொண்டோம்.

உன் வரவுக்கு பின்னர்தான்
பிறப்பென்ற வார்த்தைக்கு
உன் பிறப்பே பொருளென்று
பிரம்மன் வந்து சொல்லிச்சென்றான்.

உன் வரவுக்கு பின்னர்தான்
தென்றல் எங்கள் வாசல் வந்து
இன்றுதான்  நீ பிறந்தாய்
தினமும் தினமும் சொல்கிறது.

உன் வரவே எங்களுக்கு வரமாகி
போனதென்றால் அதை தந்த நீ சாமி!
உன் உருவே எங்களுக்கு உறவாகி
போகுமென்றால்
அதையும் நீயே தா சாமி!!

அன்பு மகளுக்கு பிறந்த நாள்
வாழ்த்துக்கள் கூறுவதில் மகிழ்வது
கவிதாயினி எழில்விழி, சண்முகநாதன், சுலோச்சனா கருப்பசாமி,
சுசீந்திரகுமாரி,
எழில் ஆதித்தன்,
மற்றும்
மைக்கேல்ராஜ், ஸாம், ஏஞ்சல்,
பெற்றோர், பெரியோர்,
கற்றோர், மற்றோர்,
உற்றார், உறவினர்களுடன்
மாறாத நட்புடையோர்.
நான் இதுவரை புகைப்படங்களுக்காக பதிவுகள் எழுதியதில்லை. ஆனால் எதேச்சையாக பார்க்க நேர்ந்த இந்த புகைப்படத்தின் நேர்த்தி பிரமிக்க வைத்தது. அதனால் முதல் முயற்சி.

#  வா, என் ராஜகுமாரா! #

நீ மோதி அல்ல
நீர் மோதி வலிக்கும்
என் பாதங்களுக்கு
உன் சூடான முத்தங்களால்
சுகமாக ஒத்தடம் கொடு.

ஆடைக்குள் மறைந்தாலும்
அனலாக கொதிக்கும் என்
அந்தரங்க பெருமூச்சுகளை
உன் பாதரசப்பார்வைகளால்
மேல் மூச்சு வாங்கச்செய்!

ஒப்புக்கு கட்டியிருக்கும்
என் மார்க்கச்சை முடிச்சுக்குள்
பால் கட்டிய மார் வலியை
வலிக்காமல் வாசம் செய்
என் வாழ்நாளை மோசம் செய்!

முக்காலும் கழன்று விட்ட
என் வளையல்கள்
முத்தத்தை விட சத்தமிடும்.
முழுவதும் கழற்றி விடு.
என் உயிர் மூச்சை சுழற்றி விடு!

புஜங்களுக்கு வலிக்காமல்
என் வங்கிகளை கழற்றி
உன் மன வங்கியில் அடகு வை.
முத்தக் கடனை மொத்தமாய் தருகிறேன்.
மீட்டு எனக்கு மீண்டும் மாட்டு!

எப்படி அணைப்பாயோ?
எனக்குத் தெரியாது.
என் பச்சையின் அச்சை
உன் மார்பில் பதிய வை!

நெடுங்கழுத்தும் நீள் நாசியும்
சிறு செவியும் செவ்வாயும்
கருங்கூந்தலும் கண்மணியும்
என் அப்பன் தந்தது!

ஜிமிக்கி கம்மலும் சிறு பூ மூக்குத்தியும்
கண்களுக்குள் காதலும்
கருந்தேகத்துக்குள் காமமும்
என் கண்ணாளனே நீ தந்தது!

அடேய் சரவணா .........
நான் தனிமரமாம்.
தோப்பாகி கொள் என
உன் நந்தவனமே பூ தந்தது.
ஒப்பந்தத்தை சொல்லிவிட்டாயோ?
தினம் ஒத்தை முழமே தருகிறது.

ஒத்த மொழம் பூவு கொடு
நான் ஒத்த புள்ள பெத்து தாரேன்.
பத்து மொழம் பூவெல்லாம்
நாஞ்சத்தியமா கேக்க மாட்டேன்.

கவிதாயினி எழில்விழி
இந்த சரவணக்கவிதை க்கு தலைப்பு தந்தமைக்கு என் இனிய தோழி Sulochana Karuppusamy  க்கு நன்றி.

# ஒற்றைப்பனை மரம் #

அது எப்படி?
நம் சந்திப்புக்காலைகளின்
சம்பிரதாய விசாரிப்புகளை எல்லாம்
என் உதடுகளில் இருந்தே
உன்னால் தொடங்க முடிகிறது?

காயப்படுத்துவதற்கு என்றே
காதலிக்கிறாய் போலும்.
அதற்காக இப்படியா ?
இதழ்களிலும் இடுப்பிலுமா
கடித்து வைப்பது?

உன் மெளனங்களுக்கு
ஒலிகொடுத்தால் ''இச்" சென்ற
சப்தமே முப்போதும் கேட்கிறது.
உம் என்ற என்  மொழி கூட
ஊமையாகித்தான் கிடக்கிறது.

என் கால்களால் நீ நடப்பதாக
ஊருக்குள் பீற்றித்திரிகிறாய்.
உன் நிழலில் நான் நடப்பதை
ஊருக்குள் யாரிடம் போய்
நான் பீற்றிக்கொள்வது?

என் முத்த தாக்குதல்களுக்கு
கேடயமாக உன் உதடுகளை நீ
உபயோகப்படுத்துவதுதான்
இந்த உலகில் "கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் "ன்
உச்சபட்ச விஞ்ஞான  கண்டுபிடிப்பு,

எட்டிக்காயோ? பாவக்காயோ?
மென்று வந்து நீ தரும்
முத்தம் இனிப்பதாய் சொல்வது
நான் மட்டும்தானா?
இல்லை
வேறெவளுக்காவது இனிப்பதாக நீ
கேள்வியாவது பட்டிருக்கிறாயா?

உன் மௌன விசாரிப்புகளில்
என் உடல் நலம் பெற்றதும்
இருட்டுப் பொழுதுகளில்
நானுன் நிழலானதும்
இயல்பாய் நிற்கும் இந்த
ஒற்றைப்பனை மர அடியில் தானே
அரங்கேறியது.

இத்தனைக்கும் சாட்சியான
இந்த ஒற்றைப்பனை மரம்
எப்போதும் போல இப்போதும்
இரண்டு நிமிடத்திற்கு மேல்
யாருக்கும் நிழல் தர மறுக்கிறது.
நம்மைத்தவிர.
நான் தனியாக வரும் போதும்
என்னிடம் அன்பு மறுப்பதில்லை.

அடேய் சரவணா ..........

பங்காளி உறவும்
பனைமர நிழலும்
உன்னுடைய காதலும்
ஒன்று தானோ சரவணா.!!!

கவிதாயினி எழில்விழி.
# மெளனம் #

மெளனம்.
மொழிகளால் சொல்ல இயலாத
ஆயிரம் வார்த்தைகளைக்கூட - உன்
விழிகளால் சொல்லி விடுகிறாய்.
விழிகளால் சொல்ல இயலாத
ஆயிரம் வார்த்தைகளையும் கூட – என்
மெளனத்தால் சொல்ல இயலவில்லை.

மெளனம்.
எழுத்தால் கோடிட்டு காட்ட முடியாத
சில நிர்வாணங்களை - நம்
மெளனங்களால் அர்த்தப்படுத்தி
கொண்டதைப்போல
எனக்கும் உனக்குமான புரிதல்களை
நம் மெளனங்களே கோடிட்டு காட்டுகிறது.

மௌனம்.
மெளனத்தில் மெய் மட்டுமே உண்டு
அதனால்தான் உயிர் இருப்பதில்லை.
என் மெளனம் உன் மெய்யைச்சுடும்.
உன்  மெளனமோ என் உயிரையே சுடும்.
இருவர் மெளனமும் உயிர்மெய் ஆகி
தமிழோடு சேர்ந்தால் கவிதையும் பாடும்.

மௌனம்.
என் மெளனம் சம்மதம்
என்பது உன் இன்பமொழி.
என் மெளனம் நம்பிக்கை
என்பது உன் நட்பு மொழி.
என் மெளனம் வெற்றி
என்பது உன் காதல் மொழி
உன் மெளனம் இழப்பு
என்பது என் இறுதி மொழி
அதன் பின் என் விழிகள்
படித்ததெல்லாமே இருளின் மொழி.

மெளனம்.
என் பொய்க்கோபங்கள் - உன்
மெளனத்திடம் தோற்றுப் போகின்றன.
உன் நிஜக்கோபங்கள் - என்
மெளனத்திடம் தோற்றுப் போகின்றன.
வெற்றியோ தோல்வியோ 
நம் மெளனங்கள்
நம்மைப் பற்றி பேசிக்கொண்டதில்லை.
நமக்குள் மட்டுமே பேசிக்கொண்டன.

மெளனம்.
நட்பை மெளனமாய் சொன்னாய்.
நல்லவர்கள் கேட்டுக்கொண்டனர்.
உறவை மெளனமாய் சொன்னாய்,
ஊர் முழுதும் கேட்டுக்கொண்டது.
பாசத்தை மெளனமாய் சொன்னாய்,
பகலோடு இரவும் கேட்டுக்கொண்டது.
காதலையும் மெளனமாக சொன்னாய்,
அது மட்டும் காலனுக்கும் கேட்டது போலும்.

அடேய் சரவணா ........!
அப்போதெல்லாம் உன் மெளனத்துக்கு
பின் ஒரு புன்சிரிப்பு எட்டிப்பார்க்கும்.
இப்போதெல்லாம் உன் புன்சிரிப்புக்கு
பின் மெளனமே,எட்டிப் பார்க்கிறது.
எப்போதும் ஒன்று மட்டும்
நிச்சயமாய் தெரிகிறது.
சட்டத்திற்கு பின்னால் உன் மெளனமும்
சட்டத்திற்கு முன்னால் உன் மாலையும்.

மெளனமாய் கவிதாயினி எழில்விழி.
என் முகநூல் பக்கம் தவிர்த்து முதன்முதலாக நிலாச்சோறு அமைப்பில் எழுதி சான்றிதழ் பெற்றுத் தந்தது இந்த

# ஒற்றைத்தாமரை #

ஏரித்தாமரை விரிஞ்சிருச்சி,
எளங்காத்து அடிச்சிருச்சி,
வாடிக்கெடந்த வரிக்கமுகு
வாசம் வீசி வெடிச்சிருச்சி!

உன் வீட்டு வெள்ளாடு
என் வேலி தாண்டிருச்சி,
என் வீட்டு கருப்பாடும்
எளஞ்சூட்டில் கருகிருச்சி!

போன மாசம் நீ போகயிலே. - நான்
வானம் பாத்த பூமியானேன்.
மானம் வச்சி பாத்திருக்கேன் - நான்
கானம் பாடி சிரிச்சிருக்கேன்!

ஓலக்கதவு திறந்து வெச்சேன் - நான்
ஓலப்பாயும் விரிச்சி வெச்சேன்.
மாலைப்பொழுது மயங்கிருச்சி - மனம்
மாமன் ஒன்ன நெனச்சிருச்சி!

செல்லச்சண்டை போடப்போறேன் - நீ
மெல்லக்கட்டி அணைக்கப்போறே,
வெல்லமா நான் இனிக்கிறேனு - என்ன
கொல்லாம கொல்லப் போறே!

ஊருக்கெல்லாம் வெண்தாமரை - நான்
உனக்கு மட்டும் செந்தாமரை.
காத்திருக்குது சிறு தாமரை - உனக்காய்
பூத்திருக்குது இந்த ஒத்தைத்தாமரை!

கவிதாயினி எழில்விழி.
# அவன் ஒரு ஆண் ...... #

அப்பா,
பொறுமையாய் கற்றுக்கொள்ளுங்கள்.
பொருளாதார பாடமவன்.
பூக்களை மட்டுமே எண்ணிச்சொல்லும்
புள்ளியியல் பாடமவன்.

அப்பா,
வேசம் போட்டும் தன்னையே உழும்
வேளாண்மை பாடமவன்
சதுரங்களுக்குள் வட்டம் போடும்
சரித்திரப்பாடமவன்.

அப்பா,
மலைகளே மறித்தாலும் மாற்றி
சிலைகளாக்க தெரிந்தவன் - அவன்
கலவியில் பிறந்ததனால் - உங்கள்
கலைகளின் தாயவன்.

அப்பா,
பட்ட மரமும் பச்சை மரமும்
கலந்து கட்டிய கட்டுமரம்.
துடுப்பில் பாதி இடுப்பில் மீதி - உங்களை
இழுத்துச் செல்லும் குதிரை அவன்.

அப்பா,
கைப்பிடித்து கூட்டிச் செல்வதில்
கடிகார முட்கள் அவன்.
நொடிக்கொரு தரம் உன்னை
படியெடுத்துச்செல்லும் நொடி முள்ளுமவன்.

அப்பா,
புயற்காற்றில் நாணலாய் அவன்
பொழுதெல்லாம் அசைந்தாலும்
இரவுகளில் உன் தலை வருடி தன்னை
புயலுக்கு பின்னாகிக் கொள்பவன்.

அப்பா,
ஒதியம்தான் என்றாலும் உன்னை
உதிரம் ஊற்றியும் வளர்ப்பவன் - உன்
ஊதியத்தை மறைக்கும் போதும் உனக்கு
ஓதியதில் குறை சொல்லாதவன்.

அப்பா,
மறை பொருளே ஆனாலும்  ஒரு
குறையில்லா நிறைவவன். - முதியோர்
சிறை விடுத்துச்செல்லும் போதும் - சிறு
கறையுமின்றி சிரிப்பவன்.

அப்பா.
உருவத்திற்கு பின்னிருக்கும் - அவன்
உழைப்புக்கு வடிவம் எது?
உச்சந்தலை நெருப்பு தாங்கும்
ஊதுவத்தி புகைதானது.

அப்பா,
அனுபவங்களின் பாஷையவன்
அடிக்காத மணி ஓசையவன் - உன்
ஆசைகளுக்குத் தெரியாது - பல
அவமானங்களுக்கு வேசியவன்.

உலகில் பல அப்பாக்களின் நினைவில்
கவிதாயினி எழில் விழி.