செவ்வாய், 5 ஜூன், 2018

நான் இதுவரை புகைப்படங்களுக்காக பதிவுகள் எழுதியதில்லை. ஆனால் எதேச்சையாக பார்க்க நேர்ந்த இந்த புகைப்படத்தின் நேர்த்தி பிரமிக்க வைத்தது. அதனால் முதல் முயற்சி.

#  வா, என் ராஜகுமாரா! #

நீ மோதி அல்ல
நீர் மோதி வலிக்கும்
என் பாதங்களுக்கு
உன் சூடான முத்தங்களால்
சுகமாக ஒத்தடம் கொடு.

ஆடைக்குள் மறைந்தாலும்
அனலாக கொதிக்கும் என்
அந்தரங்க பெருமூச்சுகளை
உன் பாதரசப்பார்வைகளால்
மேல் மூச்சு வாங்கச்செய்!

ஒப்புக்கு கட்டியிருக்கும்
என் மார்க்கச்சை முடிச்சுக்குள்
பால் கட்டிய மார் வலியை
வலிக்காமல் வாசம் செய்
என் வாழ்நாளை மோசம் செய்!

முக்காலும் கழன்று விட்ட
என் வளையல்கள்
முத்தத்தை விட சத்தமிடும்.
முழுவதும் கழற்றி விடு.
என் உயிர் மூச்சை சுழற்றி விடு!

புஜங்களுக்கு வலிக்காமல்
என் வங்கிகளை கழற்றி
உன் மன வங்கியில் அடகு வை.
முத்தக் கடனை மொத்தமாய் தருகிறேன்.
மீட்டு எனக்கு மீண்டும் மாட்டு!

எப்படி அணைப்பாயோ?
எனக்குத் தெரியாது.
என் பச்சையின் அச்சை
உன் மார்பில் பதிய வை!

நெடுங்கழுத்தும் நீள் நாசியும்
சிறு செவியும் செவ்வாயும்
கருங்கூந்தலும் கண்மணியும்
என் அப்பன் தந்தது!

ஜிமிக்கி கம்மலும் சிறு பூ மூக்குத்தியும்
கண்களுக்குள் காதலும்
கருந்தேகத்துக்குள் காமமும்
என் கண்ணாளனே நீ தந்தது!

அடேய் சரவணா .........
நான் தனிமரமாம்.
தோப்பாகி கொள் என
உன் நந்தவனமே பூ தந்தது.
ஒப்பந்தத்தை சொல்லிவிட்டாயோ?
தினம் ஒத்தை முழமே தருகிறது.

ஒத்த மொழம் பூவு கொடு
நான் ஒத்த புள்ள பெத்து தாரேன்.
பத்து மொழம் பூவெல்லாம்
நாஞ்சத்தியமா கேக்க மாட்டேன்.

கவிதாயினி எழில்விழி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக