செவ்வாய், 5 ஜூன், 2018

# பெண்ணடிமை போற்றுதும் .........#

விடுமுறை தினமொன்றின்
விடியல் வேளை.
அதிகார தொனியிலொரு
தேநீர் கேட்கிறாய்.
கண் சிவக்க எழுந்த
என்னெதிரே நீ
கையிலொரு குவளை தேநீருடன் .......

அடியே இவளே! போய்க்குளி
வெந்நீர் தயார்,
கையில் பையுடன்
அங்காடி கிளம்புகிறாய்.
எனக்கு தெரியும், நீயும்
வெந்நீர் குளியல்தான்,
போய் வா! சிற்றுண்டி
தயாரிக்கிறேன்.

பொருளாதார உலகத்தில்
பூக்களுக்கும் விலையுண்டு,
அதற்காக, சமையலுக்கான
பூக்களை மட்டுமா வாங்குவது?
முணுமுணுத்தபடியே
குளிர்பெட்டி திறக்கிறேன்.
சமையல் பூக்களிடையே
ஜாதி மல்லியும் இருக்கிறது!

பத்தாகும் போதிலொரு
சிற்றுறக்கம் வந்துவிடும்.
உறக்கம் கலைக்காமல்
துணி பிழிந்து உலர்த்துகிறாய்.
சமையலில் நளனென்று
சான்று தர முடியாது,
நீ சமைத்த உணவில் இன்று
உப்பு சற்று குறைவடா ....!

இருவருக்கும் வேலையில்லை
இன்று முழுதும் உன் தொல்லை.
ஓய்வெடுப்பது யாரென்று
இவருக்கும் எதிர் கவலை .
விவிலியத்தின் ஏழாம் நாளில் தான்
 கடவுளுக்கு கூட ஓய்வு,
வாரத்தின் ஏழாம் நாளில் உலகில்
எனக்கு மட்டுமே ஓய்வு!

எட்டு நாளும் உழைக்கும் கணவன்
கிடைப்பதொரு வரம்.
காதல் என்ற ஒன்றிருந்தால்
கணவன் கூட குழந்தைதான்.
காமம் அங்கு கூட வந்தால்
கணவன் ஒரு கடவுள்தான்.
அனுபவமே பதில் சொல்லும்,
என் பெண்ணடிமை பிழையல்ல.

கவிதாயினி எழில்விழி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக