செவ்வாய், 5 ஜூன், 2018

# மெளனம் #

மெளனம்.
மொழிகளால் சொல்ல இயலாத
ஆயிரம் வார்த்தைகளைக்கூட - உன்
விழிகளால் சொல்லி விடுகிறாய்.
விழிகளால் சொல்ல இயலாத
ஆயிரம் வார்த்தைகளையும் கூட – என்
மெளனத்தால் சொல்ல இயலவில்லை.

மெளனம்.
எழுத்தால் கோடிட்டு காட்ட முடியாத
சில நிர்வாணங்களை - நம்
மெளனங்களால் அர்த்தப்படுத்தி
கொண்டதைப்போல
எனக்கும் உனக்குமான புரிதல்களை
நம் மெளனங்களே கோடிட்டு காட்டுகிறது.

மௌனம்.
மெளனத்தில் மெய் மட்டுமே உண்டு
அதனால்தான் உயிர் இருப்பதில்லை.
என் மெளனம் உன் மெய்யைச்சுடும்.
உன்  மெளனமோ என் உயிரையே சுடும்.
இருவர் மெளனமும் உயிர்மெய் ஆகி
தமிழோடு சேர்ந்தால் கவிதையும் பாடும்.

மௌனம்.
என் மெளனம் சம்மதம்
என்பது உன் இன்பமொழி.
என் மெளனம் நம்பிக்கை
என்பது உன் நட்பு மொழி.
என் மெளனம் வெற்றி
என்பது உன் காதல் மொழி
உன் மெளனம் இழப்பு
என்பது என் இறுதி மொழி
அதன் பின் என் விழிகள்
படித்ததெல்லாமே இருளின் மொழி.

மெளனம்.
என் பொய்க்கோபங்கள் - உன்
மெளனத்திடம் தோற்றுப் போகின்றன.
உன் நிஜக்கோபங்கள் - என்
மெளனத்திடம் தோற்றுப் போகின்றன.
வெற்றியோ தோல்வியோ 
நம் மெளனங்கள்
நம்மைப் பற்றி பேசிக்கொண்டதில்லை.
நமக்குள் மட்டுமே பேசிக்கொண்டன.

மெளனம்.
நட்பை மெளனமாய் சொன்னாய்.
நல்லவர்கள் கேட்டுக்கொண்டனர்.
உறவை மெளனமாய் சொன்னாய்,
ஊர் முழுதும் கேட்டுக்கொண்டது.
பாசத்தை மெளனமாய் சொன்னாய்,
பகலோடு இரவும் கேட்டுக்கொண்டது.
காதலையும் மெளனமாக சொன்னாய்,
அது மட்டும் காலனுக்கும் கேட்டது போலும்.

அடேய் சரவணா ........!
அப்போதெல்லாம் உன் மெளனத்துக்கு
பின் ஒரு புன்சிரிப்பு எட்டிப்பார்க்கும்.
இப்போதெல்லாம் உன் புன்சிரிப்புக்கு
பின் மெளனமே,எட்டிப் பார்க்கிறது.
எப்போதும் ஒன்று மட்டும்
நிச்சயமாய் தெரிகிறது.
சட்டத்திற்கு பின்னால் உன் மெளனமும்
சட்டத்திற்கு முன்னால் உன் மாலையும்.

மெளனமாய் கவிதாயினி எழில்விழி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக