செவ்வாய், 5 ஜூன், 2018

# மலையாளக் கரையோரம்..... #

பக்கத்து தெருதான், நடக்கிறேன்.
பனையமர்ந்த பச்சைக்கிளியிரண்டு
சாய்ந்த கழுத்துடன் அலகிணைத்து
இணைவதற்கு முன்பான இழைதலில்
துணையுடன் அழகாய் நிர்வாணத்தில்.
வேதங்களின் மூன்றாம் பாவம்
செய்யலாகாதென திரும்பி விட்டேன்.

பக்கத்து ஊருல அத்தைய பாத்தேன்.
அத்த வீட்டு இத்தி மரத்தில
மத்தத போலவே ஒத்த சோடி புறா.
வட்ட கண்ணில் வழிந்த காதலை
சின்ன உறுமலில் சிணுங்கி சொன்னன.
ஒற்றை காலில் ஒருக்களித்து உரசி
நிர்வாண அழகில் நிஜத்தில் கிடந்தன.
வேதங்களின் மூன்றாம் பாவம்
செய்யலாகாதென திரும்பி விட்டேன்.

அத்தானப்பாக்க அடுத்தூரு போனேன்.
முத்தமொண்ணு தருவான்னு
மூச்சு வாங்க நடந்து போனேன்.
பொசு பொசுன்னு ஒரு பொட்ட நாயி
மசுரு நெறஞ்ச மாப்பிள்ள நாயி
நிர்வாணமே அழகாக புணரும் பொழுதில்
வேதங்களின் மூன்றாம் பாவம்
செய்யலாகாதென திரும்பி விட்டேன்.

மலையாள பூமிக்கு மச்சான் போனான்னு
பொண்ணுங்க அழகுல
பொச கெட்டு போவான்னு
மீச வெச்ச எம்மச்சான்
ஆச தீக்க  நாம்போனேன்
பார்த்து தொலச்சிட்டேன்.
பதவிசா புணர்ந்த அந்த
பன்னிங்க கூட பருவத்துல
அழகாத்தான் இருந்தது.
வேதங்களின் மூன்றாம் பாவம்
செய்யலாகாதென திரும்பி விட்டேன்.

நாதன் துணையுடன் கூடும் நாளில்
கோபிகை என்றே மனைவி மார்பில்
மோகனம் பாடும் மோன வேளை
மலையாள மோகினி மயக்கி விடுவாளோ.
மனைவியங்கு மறையும் போதில்
மனிதமுமங்கு மறைந்து போமோ?
நிர்வாணத்தில் இரண்டும் அழகென்றால்
வகைக்கொன்றாய் வரிந்திடுவாயோ?

தலைப்புக்கு தடுமாறினால்
தாய் முடியை மழிப்பாயோ?
தலைப்பொன்று கிடைக்குதென்றால்
தாரத்தின் தாலி அறுப்பாயோ?
நிர்வாணத்தில் நிறமென்ன ?
நிஜத்தில் அதன் பொருளென்ன?
அழகென்ற பொருள் சொல்ல
உனக்கிந்த அவுசாரித்தனமென்ன?

நேசிக்கும் மனிதனுக்கு
தேசம் தாண்டியும் அழகுண்டு.
நாற்றத்தில் இருக்குமுனக்கு
நிலவிலும் அழுக்குண்டு.
நிர்வாணத்தில் அழகென்பது
ஆடை கட்டிய வெளிச்சம்
ஆடைகளில் அழகென்பது
நிர்வாணங்களின் சூன்யம்.

" நீயா ? நானா ? " வுக்கு கண்டனம்.
கவிதாயினி எழில்விழி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக