செவ்வாய், 5 ஜூன், 2018

இந்த சரவணக்கவிதை க்கு தலைப்பு தந்தமைக்கு என் இனிய தோழி Sulochana Karuppusamy  க்கு நன்றி.

# ஒற்றைப்பனை மரம் #

அது எப்படி?
நம் சந்திப்புக்காலைகளின்
சம்பிரதாய விசாரிப்புகளை எல்லாம்
என் உதடுகளில் இருந்தே
உன்னால் தொடங்க முடிகிறது?

காயப்படுத்துவதற்கு என்றே
காதலிக்கிறாய் போலும்.
அதற்காக இப்படியா ?
இதழ்களிலும் இடுப்பிலுமா
கடித்து வைப்பது?

உன் மெளனங்களுக்கு
ஒலிகொடுத்தால் ''இச்" சென்ற
சப்தமே முப்போதும் கேட்கிறது.
உம் என்ற என்  மொழி கூட
ஊமையாகித்தான் கிடக்கிறது.

என் கால்களால் நீ நடப்பதாக
ஊருக்குள் பீற்றித்திரிகிறாய்.
உன் நிழலில் நான் நடப்பதை
ஊருக்குள் யாரிடம் போய்
நான் பீற்றிக்கொள்வது?

என் முத்த தாக்குதல்களுக்கு
கேடயமாக உன் உதடுகளை நீ
உபயோகப்படுத்துவதுதான்
இந்த உலகில் "கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் "ன்
உச்சபட்ச விஞ்ஞான  கண்டுபிடிப்பு,

எட்டிக்காயோ? பாவக்காயோ?
மென்று வந்து நீ தரும்
முத்தம் இனிப்பதாய் சொல்வது
நான் மட்டும்தானா?
இல்லை
வேறெவளுக்காவது இனிப்பதாக நீ
கேள்வியாவது பட்டிருக்கிறாயா?

உன் மௌன விசாரிப்புகளில்
என் உடல் நலம் பெற்றதும்
இருட்டுப் பொழுதுகளில்
நானுன் நிழலானதும்
இயல்பாய் நிற்கும் இந்த
ஒற்றைப்பனை மர அடியில் தானே
அரங்கேறியது.

இத்தனைக்கும் சாட்சியான
இந்த ஒற்றைப்பனை மரம்
எப்போதும் போல இப்போதும்
இரண்டு நிமிடத்திற்கு மேல்
யாருக்கும் நிழல் தர மறுக்கிறது.
நம்மைத்தவிர.
நான் தனியாக வரும் போதும்
என்னிடம் அன்பு மறுப்பதில்லை.

அடேய் சரவணா ..........

பங்காளி உறவும்
பனைமர நிழலும்
உன்னுடைய காதலும்
ஒன்று தானோ சரவணா.!!!

கவிதாயினி எழில்விழி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக