செவ்வாய், 5 ஜூன், 2018

# அவன் ஒரு ஆண் ...... #

அப்பா,
பொறுமையாய் கற்றுக்கொள்ளுங்கள்.
பொருளாதார பாடமவன்.
பூக்களை மட்டுமே எண்ணிச்சொல்லும்
புள்ளியியல் பாடமவன்.

அப்பா,
வேசம் போட்டும் தன்னையே உழும்
வேளாண்மை பாடமவன்
சதுரங்களுக்குள் வட்டம் போடும்
சரித்திரப்பாடமவன்.

அப்பா,
மலைகளே மறித்தாலும் மாற்றி
சிலைகளாக்க தெரிந்தவன் - அவன்
கலவியில் பிறந்ததனால் - உங்கள்
கலைகளின் தாயவன்.

அப்பா,
பட்ட மரமும் பச்சை மரமும்
கலந்து கட்டிய கட்டுமரம்.
துடுப்பில் பாதி இடுப்பில் மீதி - உங்களை
இழுத்துச் செல்லும் குதிரை அவன்.

அப்பா,
கைப்பிடித்து கூட்டிச் செல்வதில்
கடிகார முட்கள் அவன்.
நொடிக்கொரு தரம் உன்னை
படியெடுத்துச்செல்லும் நொடி முள்ளுமவன்.

அப்பா,
புயற்காற்றில் நாணலாய் அவன்
பொழுதெல்லாம் அசைந்தாலும்
இரவுகளில் உன் தலை வருடி தன்னை
புயலுக்கு பின்னாகிக் கொள்பவன்.

அப்பா,
ஒதியம்தான் என்றாலும் உன்னை
உதிரம் ஊற்றியும் வளர்ப்பவன் - உன்
ஊதியத்தை மறைக்கும் போதும் உனக்கு
ஓதியதில் குறை சொல்லாதவன்.

அப்பா,
மறை பொருளே ஆனாலும்  ஒரு
குறையில்லா நிறைவவன். - முதியோர்
சிறை விடுத்துச்செல்லும் போதும் - சிறு
கறையுமின்றி சிரிப்பவன்.

அப்பா.
உருவத்திற்கு பின்னிருக்கும் - அவன்
உழைப்புக்கு வடிவம் எது?
உச்சந்தலை நெருப்பு தாங்கும்
ஊதுவத்தி புகைதானது.

அப்பா,
அனுபவங்களின் பாஷையவன்
அடிக்காத மணி ஓசையவன் - உன்
ஆசைகளுக்குத் தெரியாது - பல
அவமானங்களுக்கு வேசியவன்.

உலகில் பல அப்பாக்களின் நினைவில்
கவிதாயினி எழில் விழி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக