ஞாயிறு, 26 மார்ச், 2017

# அபச்சாரமல்ல..... விபச்சாரம் #

கற்புக்கரசிகளின் பெயர்களால் கற்புக்கு
கால்காசும் பயனில்லை என்ற பிறகு தான்
அகலிகை போன்ற எங்கள் பெயர்களை
அழகுக்கரசிகள் ஆக்கிக் கொள்வோம்.
வியாபாரத்திற்கு மட்டுமல்ல,
விளம்பரத்துக்கும் பெயர் முக்கியமல்லவா?

எங்களின் இரவுகளில் உங்கள்
வியாபாரம் முடிந்த பிறகு
மகா தத்துவங்கள் சொல்லாதீர்கள்
மடையர்களே,
மனித தத்துவங்களில் நாங்கள்
மாஸ்டர் டிகிரி வாங்கியவர்கள்.

தாயாய் நினைத்து
மார்பில் கவிழ்ந்தவனும்
தாரமாய் நினைத்து
மார்பை பிசைந்தவனும்
விபச்சாரம் முடிந்த பின்பு
எங்கள் தொடுகை அபச்சாரம்
என்னும் போது உங்களை நினைத்தால்
அய்யோ ................... பாவம்.

எங்கள் அலங்காரம் கலைக்கும் முன்பே
உங்கள்அகங்காரம் கரைக்கத் தெரியும்.
நீங்கள் மண்புழுவா? மலைப்பாம்பா ?
என்பதில் இருக்குது அந்த சூத்திரம்.
அதை சொல்வதற்குள் ஏனிந்த ஆத்திரம்.?

வெளிச்சத்தில் சிரிப்பதால்
எங்களுக்கு நட்டமுமல்ல.
இருட்டில் அழுவதால்
உங்களுக்கு லாபமுமல்ல.
எப்படியும் விடிந்து விடும் - உயிர்
ஒழுகி விட்டால் முடிந்து விடும்.

தேவாரம் பாடும் வாய் கூட
அரிதார நேரத்து கலவியில்
ஆரவாரம் செய்யலாம் .
திருவாசகம் பாடும் வாயில்
தெருவாசகமும் பாடலாம்.
ஆமாம்.
மாணிக்க வாசகன் இருக்கும்
மனதின் மறுபுறம் வாத்ஸாயனனை
மறைத்து வைத்திருப்போம்.
இந்த இடத்தில் வந்தேறிகளுக்கு
வரவேற்பில்லை.

விலைவாசி உயர்ந்ததென்று
விலை உயர்த்தப்படக்கூடாத
பட்டியலில் இருந்து
விபச்சாரத்தை நீக்கி விடுங்கள்.
இங்கு முதல் என்பது எங்கள் உடல் .
முடிவென்பது எங்கள் உயிர்.
இடையில் இருப்பது மானம்.
அதற்காகவேனும் உயர வேணும்
எங்கள் வருமானம்.

முத்திரைத்திருடர்கள் நாங்கள்.
மூத்திரச்சந்திலும் முயங்க
தயாராய் நீங்கள்.
திருந்தத்தயாராய் நாங்கள்.
பொது வெளியில் கை குலுக்க
வேண்டாம்.
ஒரு சிநேகப்புன்னகையுடன்
கடந்து போக தயாரா நீங்கள்?

கவிதாயினி எழில்விழி.

சனி, 25 மார்ச், 2017

# அறிமுகம் . #

நான் பிறக்கும் போது உன்  அறிமுகம்
எனக்கு தேவைப்பட்டிருக்கவில்லை.
காரணம்
எனக்கு அறிமுகமாக வேண்டி நீ
எனக்கு முன்பே பிறந்திருந்தாய்.

எனக்கான நிறங்களின் அறிமுகம்
நீ வானவில்லுடன் வந்த போது தான்
நிகழ்ந்தது.
என் பருவங்களுக்கான அறிமுகம்
உன் பார்வைகளில் நிகழ்ந்தது.

என் காதல் பசிக்கான அரிசியில்
உன் பெயர் எழுதியிருப்பதை
அறிமுகம் செய்ததே - நீ
எனக்கு செய்த ஆகச் சிறந்த அறிமுகம் .

ஆசிரியர் ஆகாயம் அறிமுகம் செய்தார்.
ஆனால் நீயோ நிலவு வரை
கூட்டிச்சென்றும் இடமில்லை என்று வந்து
இரவுச்சந்திப்புக்கென்று
இலந்தைக் காட்டை அறிமுகம் செய்தாய்.

யவனராணியை அறிமுகம் செய்த மறுநாள்
நான் கடல்புறா வாய் மாறியிருந்தேன்.
பொன்னியின் செல்வன் அறிமுகம் செய்தாய்.
குந்தவைக்கு வந்தியத்தேவனாய்
எனக்குள்ளே அறிமுகம் ஆனாய்.

வால்காவில் தள்ளி விட்டு நீச்சல்
அறிமுகம் செய்தாய்.
கங்கை வந்து சேரும் போது
வாரி எடுத்து கரை சேர்த்தாய்.
உமர்கயாமும், கலீல் ஜிப்ரானும்
உன்னிரு பக்கத்தில்
உதவிக்கு நின்றிருந்தார்கள்.
ஆமாம். உன் உதவியாளர்களாகத்தான்
அவர்கள் எனக்கு அறிமுகம் ஆனார்கள்.

ஒடிசியில் ஆரம்பித்து - உள்ளுர்
ஒப்பாரி வரை அறிமுகம் செய்தாய்.
இலியட் அறிமுகம் முடியுமுன்பே - உலக
இலக்கிய அறிமுகம் நிகழ்த்தி விட்டாய்.

உன் இத்தனை அறிமுகங்களிலும்
எனக்கு பிடித்ததை சொல்லட்டுமா?
உச்சி தொடங்கி பாதம் வரை
ஒவ்வொரு நாளும் இடும் முத்தத்திற்கு
தினம் ஒரு புதுப்பெயர் சொல்லி
அறிமுகம் செய்வாயே. அதுதான்.
இந்த அறிமுகத்திற்கு ஒரு போதும்
முற்றுப்புள்ளி நீ வைத்ததே இல்லை.

அடேய் சரவணா .........

இறப்பென்பது உயிர் துறப்பென்று
எனக்கு அறிமுகம் செய்தவர் பலருண்டு.
இறப்பென்பது இழப்பென்று எனக்கு
அறிமுகம் செய்ததில் சிறந்தவர்
உன்னைத்தவிர யாருண்டு?

கவிதாயினி எழில்விழி.
# அறிமுகம் . #

நான் பிறக்கும் போது உன்  அறிமுகம்
எனக்கு தேவைப்பட்டிருக்கவில்லை.
காரணம்
எனக்கு அறிமுகமாக வேண்டி நீ
எனக்கு முன்பே பிறந்திருந்தாய்.

எனக்கான நிறங்களின் அறிமுகம்
நீ வானவில்லுடன் வந்த போது தான்
நிகழ்ந்தது.
என் பருவங்களுக்கான அறிமுகம்
உன் பார்வைகளில் நிகழ்ந்தது.

என் காதல் பசிக்கான அரிசியில்
உன் பெயர் எழுதியிருப்பதை
அறிமுகம் செய்ததே - நீ
எனக்கு செய்த ஆகச் சிறந்த அறிமுகம் .

ஆசிரியர் ஆகாயம் அறிமுகம் செய்தார்.
ஆனால் நீயோ நிலவு வரை
கூட்டிச்சென்றும் இடமில்லை என்று வந்து
இரவுச்சந்திப்புக்கென்று
இலந்தைக் காட்டை அறிமுகம் செய்தாய்.

யவனராணியை அறிமுகம் செய்த மறுநாள்
நான் கடல்புறா வாய் மாறியிருந்தேன்.
பொன்னியின் செல்வன் அறிமுகம் செய்தாய்.
குந்தவைக்கு வந்தியத்தேவனாய்
எனக்குள்ளே அறிமுகம் ஆனாய்.

வால்காவில் தள்ளி விட்டு நீச்சல்
அறிமுகம் செய்தாய்.
கங்கை வந்து சேரும் போது
வாரி எடுத்து கரை சேர்த்தாய்.
உமர்கயாமும், கலீல் ஜிப்ரானும்
உன்னிரு பக்கத்தில்
உதவிக்கு நின்றிருந்தார்கள்.
ஆமாம். உன் உதவியாளர்களாகத்தான்
அவர்கள் எனக்கு அறிமுகம் ஆனார்கள்.

ஒடிசியில் ஆரம்பித்து - உள்ளுர்
ஒப்பாரி வரை அறிமுகம் செய்தாய்.
இலியட் அறிமுகம் முடியுமுன்பே - உலக
இலக்கிய அறிமுகம் நிகழ்த்தி விட்டாய்.

உன் இத்தனை அறிமுகங்களிலும்
எனக்கு பிடித்ததை சொல்லட்டுமா?
உச்சி தொடங்கி பாதம் வரை
ஒவ்வொரு நாளும் இடும் முத்தத்திற்கு
தினம் ஒரு புதுப்பெயர் சொல்லி
அறிமுகம் செய்வாயே. அதுதான்.
இந்த அறிமுகத்திற்கு ஒரு போதும்
முற்றுப்புள்ளி நீ வைத்ததே இல்லை.

அடேய் சரவணா .........
இறப்பென்பது உயிர் துறப்பென்று
எனக்கு அறிமுகம் செய்ய பலருண்டு.
இறப்பென்பது இழப்பென்று எனக்கு
அறிமுகம் செய்ய
உன்னைத்தவிர யாருண்டு?

கவிதாயினி எழில்விழி.

வெள்ளி, 24 மார்ச், 2017

# அய்யனாரும் அருளாடியும் #
பத்து வருசத்துக்கு பின்னால
எல்லை காவல் அய்யனாருக்கு
பங்குனில கொடை எடுக்கணுமாம்.
தகவல் வந்திருக்கு
அய்யனாருக்கும் எனக்கும் இடையில
கணக்கு ஒண்ணு தீக்கணும் -அதுக்கு
கண்டிப்பா நான் போகணும்.
அய்யனாரு அருளாடி அங்கமுத்து
அண்ணன் மவ செல்லம்மாவும்
கீழத்தெரு அம்பட்டன் மவன்
அழகுராசாவும் காதலிக்கறதா
ஊருக்குள்ள அப்ப ஒரு பேச்சு உண்டு.
உண்மைதான்னு எனக்கும் தெரியும்.
செல்லம்மா எங்கிட்ட மறைக்க மாட்டா.
எலந்தக்காட்டு இருட்டுல இவங்க
பேசிட்டு இருந்தாங்க.
தூரத்து ரெயில் வெளிச்சத்துல
அங்கமுத்து பாத்துட்டதா
செல்லம்மா தான் எனக்கு சொன்னா,
இரண்டு பேரும் இணைஞ்சதா
ஊருக்கு சொன்னது இந்த
அய்யனாரு அருளாடிய அன்னிக்குத்தான்.
சனங்க இடம் கேட்டதுக்கு
அய்யனாரு சொன்னாரு,
மாட்டுத்தடம் வழி போனா
ஏரிக்கு நடுவுல உள்ள
ஆலமர மணல் திட்டுல ன்னு
அய்யனாரு பொய் சொன்னாரு.
அடுத்த நாள் இரண்டு பேரும்
அந்த ஆலமரத்துல
நாண்டுகிட்டு செத்துட்டாங்க.
அய்யனாரு உண்மை சொன்னதா
அருளாடி பீத்திக்கிட்டாரு.
அடுத்த வருடம் அதே இலந்தைக்காடு
அதே ரயில் வெளிச்சம்
அதே அங்கமுத்து
ஆனால்
நாங்க இணைஞ்சது மட்டும் நிசம்.
கொடை விழாவுல ஒரு ராணுவ ரகசியமா அய்யனாரு சொன்னதா
அருளாடிதான் சொன்னாரு.
அந்த ஆலமரம் தான் இதுக்கும் சாட்சியாம்.
அங்கதான் புடிச்சது அய்யனாருக்கு சனி
உண்மைய தெரிஞ்சிக்கணும்
ஊரு சனம் சாட்சி வேணும்.
கொண்டா மூணு கற்பூரம்
கைய நீட்டிக்குவோம்.
எழில் விழிக்கு ஒண்ணு.
சரவணனுக்கு ஒண்ணு
மன்னிச்சிக்க அய்யனாரே.
உன் அருளாடிக்கும் ஒண்ணுன்னேன்.
அடிடா மேளத்த, ஏத்துடா சூடத்த .......
அன்னிக்கு மலையேறுன அய்யனாரு
அதுக்கு பிறகு வரவேயில்ல.
இந்த பங்குனிக்கு போகணும்
அய்யனார மன்னிச்சிட்டேன்னு
அவருகிட்ட ரகசியமா சொல்லவும்
அய்யனாரே மன்னிச்சிடுன்னு
அவருகிட்ட பகிரங்கமா சொல்லவும்
கொடை விழாவுக்கு போகணும் .
யாரெல்லாம் வர்றீங்க.?
கவிதாயினி எழில் விழி.
# உனக்கொரு பிள்ளைத்தமிழ். #
அடேய் சரவணா. ........
எதுகை நான் எதற்கும் தயாராக . 
மோனை உன் மோகனப் பார்வையில்
அணிகள் இல்லாமல் ஆயத்தமாகி
இரட்டுற மொழியப்போகிறேன். _ அதற்கு ஒரு யாப்பிலக்கணம் எழுதலாம் வா.....
எழுவாயாய் என் வாய் ஏங்க
பயனிலையாய் உன் பார்வையில்
செயப்படு பொருளை இருவரும்
பயப்படாமல் எழுதலாம் பறந்தோடி வா.
தளை பிரிக்க நீ தயாராக இரு. நான்
அசை பிரித்து சற்று ஆசையுடன்
சொற்பொருள் பின்வரு நிலையணிக்காக
மற்போர் தொடர்வேன் மறுக்காமல் வா.
என்னழகிற்கு நீ வஞ்சப்புகழ்ச்சி செய்.
நான் உயர்வு நவிற்சி அணி தருவேன்.
இடக்கரடக்கல் செய்தாயானால் - எனக்கொரு
இரங்கற்பா மட்டும் எழுதவா.
இந்த பெண்பாவாய்க்காய் ஒரு
வெண்பா பாடு.
நான் ஆடை நெகிழ அகவற்பா தருவேன்.
கலிப்பா ஒன்று தமிழோடு நீ தந்தால்
வஞ்சி நானொரு வஞ்சிப்பா தருவேன் வா.
இருவரிணைந்து எழுதும் கலம்பகத்தால்
காமம் எரித்து காதல் வளர்ப்போம்.
நம் காதலைப்பாட தமிழுக்கு மட்டும்
ஆயுட்கால அனுமதி கொடுப்போம் வா.
கவிதாயினி எழில்விழி.
# எந்த நிமிடம் #
யோசித்துப்பார்க்கிறேன்.
உன் மீதான என் காதலின்
ஆரம்பத்தை .
உன்னிடமும் கேட்கிறேன்.
எப்போதும் போல் சிரிக்கிறாய்.
வயசுக்கு வருவதற்கு முதல் நாள்
வரப்பில் வழுக்கி விழுந்தயென்னை
பார்வையில் பக்கம் வந்து
முட்டி தேய்த்து சொடுக்கெடுத்த அந்த
சொர்க்க நிமிடத்திலிருந்தா?
பச்சைஓலை குடிசைகட்ட
மச்சுவீட்டு மாமங்காரன்
சீரோட வந்தப்ப எங்கிட்ட
சீராடி மொகந் திருப்பி நீ
சிரிக்காம நின்ன - அந்த
சித்திர நிமிடத்திலிருந்தா?
குடிசைக்கூடு பிரித்து
முளைத்திருந்த சிறகுக்கு
தாவணி தடுப்பு போட்டு
தண்ணீ எடுக்க நான் வந்தப்ப
தடுப்பு தாண்டி நின்னு நீ தவிப்புடன்
பார்த்த அந்த தங்க நிமிடத்திலிருந்தா?
ஊர்தாண்டி ஊர்ந்து செல்லும்
அந்த ஒற்றையடிப் பாதை வழி
நெடுஞ்சாலை பேருந்துக்காய் நான்
வருவதற்கு முன் சென்று
இருக்கை துடைத்து வைத்த அந்த
இன்ப நிமிடத்திலிருந்தா?
பார்வை முடித்து சிரிப்பு முடித்து
மெளனம் உடைத்து பேசிய நாள் முடித்து
ஜரிகையிட்ட பேப்பர் சுற்றி
நீ கொடுத்த மூக்குத்திக்கு நான்
முத்தம் கொடுத்த அந்த
முத்தான நிமிடத்திலிருந்தா?
அந்த ஒரு அதிகாலைப்பொழுதில்
ஆத்தங்கரைபிள்ளையாருக்கு
நூற்றியெட்டு தோப்புக்கரணம்
போட்டு முடித்தது ஏனென்று கேட்டதற்கு
ஜோடி மெட்டி தந்து என் ஜோடி நீயென
சொல்லிச் சென்ற அந்த
சுகம் சொன்ன நிமிடத்திலிருந்தா?
எத்தனை யோசித்தும் ஆரம்பம்
எதுவென்று புரியாமல்
உன் முகம் பார்க்கிறேன்.
வெட்கமாய் இருக்கிறதென
விழிகளை மூடிய நிமிடத்தில்
இதழோடு இதழ் இணைத்து
முத்தமிட்டு விலகிய அந்த
முத்தான நிமிடத்தியிருந்தா?
ஆரம்பமே இல்லாத
நம் காதலின் ஆரம்பம் என்னவென்று
யோசித்த நாட்களில் எல்லாமே
ஆதாமும் ஏவாளும் நம் காதலை
யாசகம் கேட்பதாக நீ சொல்லிச் சிரித்த
அந்த நொடி தான் ஆரம்பம் என்பதாய்
நீ இல்லாத இந்த பொழுதுகள்
இன்று உணர்த்திச் செல்கிறது.

கவிதாயினி எழில்விழி.
# நாளைக்கு என் வயது இருபது . #
மேலத்தெரு ஒத்தக் கண்ணன்
இப்பத்தான் சொல்லிப்போனான்.
மூணு மணிக்கு நீ வயலுக்கு வருவன்னு.
எங்கப்பஞ்சொத்துல
பொன்னி நெல் வெளஞ்சிருக்கு.
ஒங்கப்பஞ்சொத்துலயோ
சம்பா வெளஞ்சி சாஞ்சிருக்கு.
அப்பனுங்கள போலவே வரப்ப
வாய்க்கா ஒண்ண பிரிச்சிருக்கு.
என் வயலு வரப்பு மேல நானிருந்து
வாய்க்கா தண்ணில வண்ணாத்தி மீனுக்கு
வச்சிருந்த எங்காலு சூடாவே இருந்துச்சு.
சண்டாளன் நீ வந்ததுமே _ அந்த
தண்ணி கூட குளுந்துருச்சி .
அப்பனுங்க வரதுக்குள்ள
அங்ஙனயே பேசிக்கிட்டோம்.
"பொறந்த நாள் பரிசிருக்கு
பொழுதோட வந்து விடு"
"அது நாளைக்கு இப்ப என்னன்னேன்"
மடையடைக்கும் சாக்குல
மயங்கும் படி முத்தம் வச்சே .
அன்னிக்கு ஏன்தான் அந்த
அந்திமழை பெஞ்சதோ
நம்மூரு ஆத்து தண்ணி
பளிங்கு நிறம்மாறி பழுப்பாகி போச்சு.
குளிக்க நான்தான் மொதல்ல போனேன்.
ராசா நீயோ பின்னதான் வந்தே.
நெஞ்சளவு தண்ணியில நான்
கண்மூடி நின்னப்போ
கெண்ட மீனு கடிக்குதோன்னு
கால் உதறி துடிச்சப் போ
அட சண்டாளா,
எப்படா கொலுசு போட்ட?
காலில ஒண்ணும் கையில ஒண்ணுமா,
ஆச்சி. அது முடிஞ்சி வருசம் ஒண்ணு.
நாளை விடிஞ்சா எனக்கு வயசு இருவது.
மேலத்தெரு ஒத்தக்கண்ணன்
இப்பத்தான் சொல்லிப்போறான்.
மூணு மணிக்கு நீ வயலுக்கு வருவன்னு.
இன்னிக்கும் நீ மடை திறக்க
உனக்கு நான் மனம் திறந்தேன்.
"இந்த வருட பரிசு அதைவிட பெருசுடி.
ஆனா பாரு ஒண்ணுதான் கெடச்சது."
சொன்னதுமே புரிஞ்சிக்கிட்டேன்.
சண்டாளன் நீ என்ன
பெண்டாளும் முன்னால
எனக்கு ஒட்டியாணம் போட்டு
ஒத்திகை பாக்க போறேன்னு.
அடேய் சரவணா....
எனக்கும் ஆசதாண்டா.
மாரளவு தண்ணிக்குள்ள நீ
மறஞ்சபடி வந்து சேர....
ஊருக்கும் தெரியாம நான்
ஒட்டியாண அளவு காட்ட,......
அதுக்கு
பளிங்கு தண்ணி பழுப்பாக
எங்கப்பா சிவனே
பருவ மழைய அனுப்பி வைடா....
அன்னிக்கு பிறகு இன்னிக்கு வர
அந்தியில அந்த பருவ மழ
பெய்யவே இல்லயடா.
பிரியமான எம்புருசா.

கவிதாயினி எழில்விழி.

# ரெய்டு #
முகவரி சொல்லாமல் வந்தாலும்
எப்படியோ தெரிந்து கொள்கிறாய்.
எண்ணிச் சொன்ன
எண்ணிக்கைகளுக்கு இரட்டிப்பாய்
வரிதான் செலுத்தி விட்டேனே.
இப்போதென்ன " ரெய்டு "
ஆரம்பி, ஆரம்பித்து நடத்து
உன் தனி ஒருவன் ரெய்டை.
சாத்திக்கொண்ட கதவுகள்
சாட்சியங்களாகட்டும்.
மூடிக்கொண்ட என் கண்கள்
ஒவ்வொன்றையும்
திறந்து காட்டட்டும்.
சிரிக்காதே.
அறைகளை சொன்னேன்.
வரவேற்பு அறையில்
வரிகட்டாத வருமானம் இல்லையோ
தாண்டி செல்கிறாய்.
ஹாலில் பதுக்கி இருக்கலாம்.
சற்று நின்று சோதனை செய்யேன்.
பூஜையறையில் புகுந்து திரும்புகிறாய்.
சமையலறை செல்லாமல் தவிர்க்கிறாய்.
பயப்படாதே
பின்னால்தான் வருகிறேன்.
பதுக்கிய வரிகள் எல்லாம்
படுக்கையறையில்தான்
பதுங்கி இருக்கும் என்பது தான்
உங்களின் பாலபாடம் போலும்.
சோதனைச்சாலை முயல்போல
உன் கைப்பிடிக்குள் நான்.
போர்வை எடுத்தெறிகிறாய்.
மெத்தை பிய்க்கப்பார்க்கிறேன்.
வாசலில் ஆளரவம்.
ஆமாம்'
என்னைப்பெற்ற சோதனைக்காரன்.
தெரிந்தால்
இருவருக்குமே வரி கிடைக்கும்.
இப்போது கிளம்பு.
எப்பா, எம்புள்ளிராசா
பின் வாசல் திறந்துதான் இருக்கிறது.
உனக்கு செலுத்த வேண்டிய
வரிகளில் ஒன்றிரண்டு
விடுபட்டிருக்கலாம்.
இரவில் வருவேன்
இலந்தைக்காட்டுக்கு.
நீயும் வந்துவிடு.
செலுத்த வேண்டிய
மொத்த வரியையும்
முத்தமாகவே செலுத்தி விடுகிறேன்.

கவிதாயினி எழில்விழி.

# அந்த மூன்று நாட்கள். #
இறுக கரம் கோர்த்த - அந்த
முதல் நாள் இரவிலேயே
உதிரத்தின் முதல் சொட்டு - என் 
உடை நனைக்க
கோர்த்த கரம் கோர்த்தபடி - என்னை கோவிலுக்குள் தெய்வமாய்
தாங்கிக்கொண்ட - என்
கோமகனே நீ எங்கே?
அந்த மூன்று நாள் தவிர மீத
இரவுகளில் நீ என்னை
இம்சித்தாய், சுகமாக இருந்தது.
அந்த மூன்று நாள் மட்டும்
நான் உன்னை இம்சித்தேன்.
அப்போதும்
சுமை தாங்கியாய் என்னை
தாங்கிக்கொண்ட - என்
சுந்தரனே நீ எங்கே?
இரவுகளில் நானுன்னை
இடுப்பில் கிள்ளுவதையும்
இயல்பாகி நீயென்னை
இன்பத்தில் தள்ளுவதையும்
மூன்று நாள் மட்டும்
முழுதாய் நிறுத்தியவனே
என்னை முதுகிலும் சுமந்தவனே - என்
முதல் குழந்தையே நீ எங்கே?
மீத இரவுகளை இருட்டில் இருந்து
எடுத்துக் கொண்டு - அந்த
மூன்று இரவுகளை மட்டும்
வெளிச்சத்துக்கு விட்டுக்கொடுத்த
வீம்புக்கு பொறந்தவனே - என்
உடல் ஆய்ந்த விஞ்ஞானியே நீ எங்கே?
அடிவயிற்று வலி குறைக்க
அழுத்திப்பிடிக்க சொன்னால்
அந்த இடம் வலி குறைப்பாய்.
அடுத்த இடம் வலிக்க வைப்பாய்.
அழுக்குப் புடிச்சவனே, அப்புறம் போ
என்றவுடன் அழகாக சிரிப்பாயே - என்
அற்புதனே நீ எங்கே?
கொடுத்த வைத்த வாழ்வென்று
அன்னையிடம் சொல்ல வைத்தாய் .
கொடுப்பினை தந்தாய் என்று
கடவுளுக்கு தந்தி தந்தேன்.
அடுப்பங்கரை வாழ்வை
அந்த மூன்று நாள் உனக்கென
ஒதுக்கி வைத்தேன்.
இன்று குவிந்து கிடக்கிறதடா - என்
குல விளக்கே நீ எங்கே?
மாதவிடாய் முதிர்ச்சி வந்து
என் மாபாவம் தீரும் வரை - அந்த
மூன்று நாள் மட்டுமாவது - என்
ஆண் தேவதையை
அனுப்பி வைப்பாயா
ஆண்டவனே ?
# ரெம்ப வலிக்குதடா... #
கவிதாயினி எழில்விழி.
என் முகநூல் நண்பர் திரு. இளமாறன் தமிழ் அவர்கள் தலைப்பு தந்து கேட்டுக் கொண்டதற்கிணங்கி # யாதுமாகி # எனது பாணியில் இந்த கவிதை . தலைப்புக்கு நன்றி.
அப்போது நான்
வயசுக்கு வரவில்லை.
களத்து வீட்டு மருதை மவ
எழில் விழி நானும்
சந்து வீட்டு சண்முகம் மவன்
சரவணனும் தான் கூட்டாளிங்க,
புளிபறிக்க போனாலும்
புல்லறுக்க போனாலும்
ஒண்ணாக போறளவு
கண்ணான புள்ளைங்க.
பல்லி முட்ட காட்டுடா-ன்னா
பாம்பு முட்ட எடுத்தாருவான்.
வெட்டு கிளி ஒண்ணு கேட்டா -பத்து
பச்ச கிளி புடிச்சாருவான்.
அப்படிப்பட்ட சேக்காளி
ஆனாலும் நல்ல சோக்காளி...
ஊர விட்டு எறநூறடியில ஏரிக்கர.
ஏரிக்கர மேல ஏழுநூறடில குளிக்குந்தொர.
அத தாண்டி நூறடில ஆம்பளங்கதொர.
ஒதுக்கி விட்டிருக்கன் ஒத்த தாமர மொக்க .
வெடிக்கறது எப்பன்னு விரிவா நான் ஆராய ..
அதுக்குத் தான் கெளம்பிட்டேன் அதிகால நேரத்துல .
ஏரிக்கர பவளமல்லி எறச்சிபோட்ட பூமேலே
பாம்பு ரெண்டு பிணையறத
பாத்துட்டுதான் நாம்போனேன்.
அய்யனாரு கோயில் தாண்டி அவன் அரக்காலு டவுசர் ஒண்ணு அரளிச்செடி மேல
கெடடந்தததயும் நாம் பாத்தேன்.
எந்த குத்துச்செடிக்கு குண்டிய காட்டிட்டு
குத்த வச்சிருக்கானோ தெரியலியே.
குளிக்குந்தொர வந்தாச்சி. - தாமர
மொக்கயும் நாம்பாத்தாச்சி.
இன்னமும் வெடிக்கலன்னு
தெரிஞ்சதுந்தான் சிரிப்பாச்சி .
ஏரிக்குள்ள எறங்கியாச்சி
எந்நெஞ்சளவு நனைஞ்சாச்சி.
தாமரமொக்கயும் எங்கவனத்துக்குள்ள வச்சாச்சி.
அடி வானம் செவப்பாச்சி - அட
அவனுந்தா வந்தாச்சு.
மலதாண்டி அந்த மரந்தாண்டி அவன் கதிரு வர மணித்துளி ஒண்ணிருக்கு.
ஆம்பளத்தொரயிலருந்து என்னப்பாக்கற
அட இவங்கண்ணோ ரெண்டிருக்கு.
மொக்குக்கும் வெக்கம் வந்து
நுனி மூக்கு செவந்திருச்சி -
அட எனக்குங் கூட அடிவயித்து
மேட்டுமேல அட்டப்பூச்சி ஊந்திருச்சி .
அடியேய். இன்னிக்கு நீ வெடிக்கறத பாக்காம நான் வூட்டுக்கும் போறதில்ல.
மொக்குக்கும் கேக்காம மெளனமா
நா சொல்லியாச்சி.
மொக்கும் நானும் ஒன்னா கலந்து
உயிர் கலந்து ஊன் கலந்து
யாதுமாகி எல்லாமாகி நின்னாச்சி.
அட
வெளிச்சமும் வந்தாச்சி - இருந்த
வெக்கமும் வெலகியாச்சி.
மொக்கு நுனி வெளுத்தாச்சி
அட்ட பூச்சி ரெத்தம் குடிச்சாச்சி
இதோ
மெல்லிய சத்தத்தோட
இரண்டு மொக்கும் வெடிச்சாச்சி.
# சரவணனுக்குதான் முதல் செய்தி.
கவிதாயினி எழில்விழி.
# அரணா கொடியும் அரை மூடியும் #
கருகமணி கட்டிவிட்டு - அது
உரசும் இடம் பற்றி
காமம் பேச தெரிந்த நீ
கண்களில் மட்டும் காதல் காட்டுகிறாய்.
உனக்கு தேவை காதலா? காமமா?
எனக்கா? இரண்டும்தான் வேண்டும்.
பாசிமணி வாங்கிதந்து _ அதில்பாதி நானென்று சொன்னாலும் சொன்னாய்,
போடுவதா? வேண்டாமா?
வெட்கத்தில் நான்,
உரச மாட்டேன் என்று சொல்லேன்.
உரிமையோடு போட்டுக்கறேன்.
"இந்தாடி மஞ்சத் துண்டு - பூசிக்குளி "
"மஞ்சளுக்குள் நானிருக்கேன் "
கொடுத்து செல்கிறாய்.
பூசுனத காட்டுடின்னு
விடியலுக்கு முன்ன பாக்க வருவே
வர மாட்டேன்னு சொல்லி விடு - நான்
உடல் முழுக்க பூசிக்கறேன்.
கங்கணம் கட்டிக்கொண்டு ' நீ -
வாங்கிதந்த பட்டியலில்
சின்ன மணிபர்ஸ் தொடங்கி
உள்ளாடை வரை அடக்கம்.
அட. அடங்காதவனே,
அறைக்குள்ள அதுகளோடதான்
அன்னாடம் வாழ்ந்துக்கறேன்.
அடேய் சரவணா .......
இதுவரைக்கும் நீ தந்ததெல்லாம்
காலப்போக்கில் உருமாறி உருமாறி
காதலுக்கும் காமத்துக்கும் எனக்கு
அர்த்தம் சொல்லி,
காணாமலும் போயிருச்சி .
இருவது வயசுல நீ குடுத்த
இடுப்பு ஒட்டியாணம் மட்டும்.
காலப்போக்கில் உருமாறி
இடுப்புக்கொடியாகி என்னோடு
நம்ம காதல் பேசுது
ஒம்மவளுக்கு அரை மூடியாகி
நம்ம காமம் பேசுது.

கவிதாயினி எழில்விழி.
# பாஞ்சாலி #
அய்யா துரோணரே |
உன் மாணவர்களில்
இவன் மட்டும் ஏன் இப்படி.?
இவன் விடும் அம்புகளின்
ஒற்றை இலக்கு எப்போதும்
என் உதடாக மட்டும் இருக்கிறது.
இலக்கு தவறி விட்டதாக
பொய் கூறி சில சமயம்
என் இடுப்பு உரசி செல்கிறது.
இவனுக்கு வித்தை சொன்னமைக்காக
உன் கட்டை விரலை - எனக்கு
காணிக்கையாக
தந்துவிடு.
அடேய் துச்சாதனா ..........
துகிலுரிவதற்காக சபை நடுவில்
துடித்துக் கொண்டு இருப்பதாக
பீற்றிக்கொள்ளாதே,
நீ தொட்டவுடன்
உரிந்து கொள்வதற்காக
என் சேலை எப்போதும்
நெகிழ்ந்தே இருக்கிறது.
அடேய் அர்ஜூனா ........
என்னை சிறையெடுக்க
காண்டீபம் கையேந்தி
கண்ணனுடன் வருகிறாய்.
எனக்கென்னவோ
நீ
பிருகன்னளை ஆகவே
தெரிகிறாய்.
சிரிப்பு தான் வருகிறது.
சிறை தாண்டி நானே
வந்து விடுகிறேன்.
அடேய் கர்ணா ..........
உலகம் எல்லாம் தானம் கொடுத்த
நீ
எனக்கு
காதலை மட்டுமே
தானமாக தந்தாய்.
சாபம் இடுகிறேன்.
காதலை தவிர உனக்கு
மற்றதெல்லாம் மறந்து போகட்டும்.
அடேய் சரவணா ........
நீ பாண்டவம் தாண்டி
கௌரவர் பெயர் கொண்டு
நூற்றொருவராக கூட
பிறந்து கொள்.
ஒவ்வொரு பிறவியிலும்
நான் - உனக்கு
பாஞ்சாலியாக பிறந்தே
இறக்கவும் சம்மதிக்கிறேன்.

கவிதாயினி எழில்விழி.
# அன்பளிப்பு #
மாங்குளத்து கிளிக்கண்ணி
மேக்காட்டு கீரிப்பிள்ள எனக்கு
வாக்கப்பட்டு வந்த போது
போட்டிருந்த தோட்டோட - ரெண்டு
பொட்ட ஆடும் கொண்டாந்தா,
கட்டி வந்த இவ எனக்கு
ஒத்த குட்டி பெத்து தரு முன்னால
அவ ஓட்டி வந்த _ அந்த
ரெண்டு பொட்ட ஆடும் மொத்தம்
எட்டு குட்டி போட்டிருச்சி
பொண்ணு பொறந்துட்டா இனி
பொழப்ப பாரு ன்னா
கீத்து மறப்பெடுத்து
சிமென்டு சுவர் வச்சி
அட்டையாவது போட்டு ஒரு
வீடு கட்டி குடுன்னா
அதுக்குள்ள இந்த
பத்தாடும் பத்தாச்சி
எண்ணிப்பாத்தப்ப
இருபதுன்னு தெரிஞ்சாச்சி.
கீரிப்பிள்ளைக்கு இப்பத்தான்
இன்னமும் சிரிப்பாச்சி .
பத்தாட்ட பிரிச்சி வச்சி
ஓலைச்சுவர பிரிச்சி போட்டேன்.
சந்தைக்கு ஓட்டிப் போனேன்.
சிமெண்டும் செங்கலுமா
மாத்திட்டு வந்து சேந்தேன்.
மணல் நாளைக்கு
வந்து சேந்துருமாம்.
விடியுமுன்னால என் வீட்டுக்கு
பஞ்சாயத்து கிளார்க்கு வந்து
வீட்டுக்கு அப்ரூவல் வாங்கச்சொன்னான்.
அப்ரூவல் னா என்னன்னேன்?
அனுமதி ன்னு அர்த்தம் சொன்னான்.
அஸ்திவாரமே இல்லாத வீட்டுக்கு
அனுமதி தர ஒரு ஆடும்
அன்பளிப்பா ரெண்டு ஆடும்
அப்பவே ஓட்டிட்டு போனான்.
முக்கா வீட்டுக்கு மேல
மூடாக்கு அட்ட போட
மூணாடு செலவாச்சி
கொத்தனாரும் சித்தாளும்
சோடியா ஆனதுல
அவங்க கூலிக்கு
மிச்சமிருந்ததுல ரெண்டாடு
மிச்சமில்லாம போயிருச்சி .
மிச்சமிருக்குது ரெண்டாடு.
கரண்டு வாங்கி கொண்டாடு.
கரண்டு வாங்குமுன்னால
ஒத்த ஆடு கரண்டு படிச்சி
செத்துபோச்சு.
பிரியாணிக்கு ஆகுமுன்னு
தூக்கிட்டு போனப்புறம் தான்
தெரிஞ்சது.
கரண்டும் அவங்க கரண்டு தான்னு.
லைட்டு எரியறன்னிக்கு
லைன் மேனு வந்தாரு.
ஒத்த ஆட்ட வித்து குடு
சுண்ணாம்புக்கு வெத்தல போல
ஊறுகாக்கு சாராயம் வாங்கி குடுன்னாரு.
மொத்த ஆடும் இப்ப
முழுசா செத்து போச்சு.
அன்பளிப்பு வாங்குன
அரசாங்க ஆபீசரு மாரே.
பொழப்புக்கு வழியில்ல.
ஒங்கூட்டுல பொண்ணுருந்தா
ஒண்ணு எனக்கு கட்டி குடு.
நெறஞ்ச வயிரோட
ரெண்டு வெள்ளாடும் குடுத்து விடு.
கவிதாயினி எழில்விழி.
# அங்கேயும் காதல் #
எதிர் வீட்டு எசக்கி மவ செல்லி
எனக்கு இரண்டு வருசம் முந்தியே
வயசுக்கு வந்திருந்தா.
அவ வீட்டு கிழக்கு மூலைல
அந்த நாளுக்கான குடிசைல
இப்போதெல்லாம்
எப்போதாவது சில மாசம்
எனக்கும் இடம் கிடைக்கும்.
வயசுப் பொண்ணுங்க
வலி மறக்க வம்பளப்போம்.
சுவத்துக்கும் கேக்காம
வலி மறந்து குதுகலிப்போம்.
எல்லாமும் சொன்ன செல்லி அந்த
எழவெடுத்த காதல மட்டும்
எங்கிட்ட சொன்னதில்ல.
அதுக்கெல்லாம் இவ சரிப்பட்டு
வர மாட்டானு நெனச்சிட்டா போல.
கத்திரிக்கா முத்திச்சு - ஒரு நாளு
கடைத்தெருவுக்கும் வந்திச்சு.
செல்வத்துக்கு ராத்திரியும்
செல்லிக்கு பகல்லயும்
வெட்டு விமுந்துச்சி.
சொந்தம் பதறிச்சு - எழவு கூட
சொல்லியும் விட்டிருச்சி.
அன்னிக்கு தான் சரவணன்
ஊருக்கு வந்திருந்தான்.
அள்ளிப் போட்டு கொண்டு போய்
ஆஸ்பத்திரில பொழைக்க வச்சான்.
ஊருக்குள்ள நியாயம் வச்சான்.
ஒண்ணொன்னா சொல்லி வச்சான்.
சாதி மட்டும் வேறன்னா
சாவணுமானும் கேட்டு வச்சான்.
வேணான்டா மாப்ள - எங்கயாச்சும்
ஓடிப்போய் பொழச்சுக்க சொல்லு.
விசயத்த சொல்லி விரல் மோதிரம்
கழட்டி குடுத்து இரண்டு மணி
இரயிலு வண்டி ஏத்திவிட்டு
திரும்பி வந்தான்.
மூணு மணிக்கு இரண்டு பேரும்
சேலையில முடிச்சிட்டு
அய்யனாரு ஆலமரத்துல
தொங்கிட்டு செத்தாங்க.
அட அய்யனாரே.
இந்த எழவெடுத்த சாதிய
என்னிக்குத் தான் தூக்கி பொதைக்கப் போறே.
இப்போதெல்லாம் எனக்கும் சரவணனுக்கும்
பத்திக்கிட்ட நெருப்ப அந்த ஆலமர
காத்து தான் அப்பப்ப அணைக்குது.
ஆனாலும் ரயில் வெளிச்சம் எங்கள
யாருன்னு தெரியாம
ஊருக்கு வெளிச்சம் போடுது.
இந்த கத்திரிக்காவும் முத்திச்சு.
கடைத்தெருவுக்கு கொண்டு வர
ரகசிய தீர்மானம் ராத்திரில முடிஞ்சது.
மைனர் தலைமைல ராத்திரி
புடிக்க போறாங்களாம்.
எங்களுக்குத்தான் கண்ணில்லையே.
எப்பவும் போல ஆலமரக்காத்துல
அணைஞ்சி கிடந்தோம்.
பிரியறப்ப திரும்பி பார்த்தோம்.
இளவட்டங்க எங்களப் பாத்ததும்
ஊரப்பாத்து ஓடுனாங்க.
ஒண்ணுமே தெரியாம ஊருக்குள்ள
வந்துட்டோம்.
மறுநாள் காலைல மைனரு
ரத்தம் கக்கி செத்துட்டாரு.
காரணம் என்னன்னு
ஊரே சொல்லிச்சு.
செல்வமும் செல்லியும் ராத்திரி
ஊருக்கு வந்தாங்களாம்.
நீங்க யாராச்சும் பாத்தீங்களா?
கவிதாயினி எழில்விழி.
# ஆசை. #
ஆத்தங்கரையில் அந்த மரம்
அழகான புன்னை மரம்.
அடிமரத்து வேர்புடைப்பில்
ஆளுறங்கும் நந்தவனம்.
எமக்கென்று போட்ட பட்டா
மழை நாட்களில் மறுக்கப்படும்.
மற்றை நாள் நிலா இரவில்
எம் முனங்கல் போதுகளில் மட்டும்
மூச்சு விட்டு வாழ்ந்து கொள்ளும்.
நெகிழ்ந்த எம் உடைகளை
தென்றல் அனுப்பி திருத்திவிடும்.
பூ உதிர்த்தி வாழ்த்தி விடும்.
புன்னகைத்து வழியனுப்பும்.
அங்க தொட்டு இங்க தொட்டு
அடியாத்து மணலும் தொட்டதால்
அடிமரத்து வேர் செத்து
ஆளுறங்கும் அந்த நந்தவனம்
ஆள் புதைக்கும் குழியாச்சி.
இப்போதெல்லாம் அந்த
எங்களின்இளவயது ஊஞ்சலை
நான் கடக்கும் போதெல்லாம்
என்னுடைய தனங்களை
எவனோ பிசைவது போல
எரிச்சல் வருகிறது.
இல்லாத தனங்களுக்கு
இறுக்கமான உள்ளாடை அணியும்
இந்தக்கால பருவப் பெண்ணாய்
இலையுதிர்த்து நிற்கும்
அந்த ஆத்தங்கர புன்னமரம்
எங்கள் காதலை போல
என்றென்றும் வாழ
எனக்குண்டு ஓர் ஆசை.
என்ன செய்ய?
மணல் எடுத்தவன்
ஒரு வேசை.....
# பழகிப்பார் #
ஊமைச்சிரிப்பு உள்ள வெச்சி,
உள்ளம் கொள்ளா காதல் வெச்சி,
ஊர்மறைச்சி வாழுறா,
உப்பு கொறச்சி சாப்புடறா,
என் ஒன்னு விட்ட தங்கச்சி.
அவளோட ஒரு நாளு
அன்போட பழகிப் பாரு ............
பாட்டு வாத்தி பெரிய மவ
பட்டுடுத்தி வளந்த மவ
பார்வையில காந்தம் வெச்சி
பாத்திருக்கா பாவிமவ
பாட்டு பாடும் சாக்கு வெச்சி
அவளோட ஒரு நாளு
பாசம் வெச்சி பழகிப்பாரு........
கீழத்தெரு செல்லாயி
கிறுக்கி மவ ராசாத்தி
ஆவாத ஆச வெச்சி
அழுதிருக்கா பாதகத்தி
கருப்பா இருந்தாலும்
களையான கருவாச்சி
அவளோட ஒரு நாளு
காதல் வெச்சி பழகிப்பாரு........
வாய்க்காரி வம்புக்காரி
வடக்கு வீட்டு வாத்திச்சி.
ஓலக்கூர பிரிச்சி வெச்சி ஒன்ன
ஒளிஞ்சி பாக்கும் பாசக்காரி
பால் போல மனசுக்காரி
பாசத்துல அடிமைக்காரி
அவளோட ஒரு நாளு
அழகாக பழகிப்பாரு..........
ஆத்தோர குடிசக்காரி,
ஆங்காரி குடிகாரி,
திமிரெடுத்த காளைக்கெல்லாம்
தினவு தீர்க்கும் ரோசக்காரி
அவசரத்துக்கு அவுசாரி - ஒம் மேல
அன்பு வச்ச வீம்புக்காரி
அவளோட ஒரு நாளு
உரிம வெச்சி பழகிப்பாரு. ........
உலகத்து அழகியெல்லாம்
ஓரணியில் வந்தாலும்
உலகத்தில் எல்லை சென்றும்
உனக்காக காத்திருப்பேன்.
உயிர் மூச்சு உனக்கென்று
உயில் எழுதி பாத்திருப்பேன்.
அடேய் சரவணா .......
பாதையில புல் முளைக்கும்
பருவ காலம் முடியும் முன்னே
என்னோடயும் ஒரு நாளு
நான் எரியுமுன்னே பழகிப்பாரு.........
கவிதாயினி எழில்விழி
# கடைசி விருந்து #
மழைக்கால நாட்களில்
கால் புதைய சேறாகியும்
வெயில் நாட்களில்
காற்றுக்கே புழுதி கிளப்பும்
நம்மூர் வரும் வண்டிச்சாலை.
களை பறித்து திரும்பும்
என் இடுப்புச் சொருகல் சேலை
கீழே இறக்காத வரை
காரைச்சாலையாகி
அவனை போல
கண்களை மூடிக் கொண்டு
கண்ணியம் காக்கிறது.
அட சண்டாளா....
ஒரு முறை கண்ணை திறவேன்
இருப்புச்சொருகல் உருவப்போகிறேன்.
இருள் பிரியாத சிறு வெளிச்சத்தில்
திருத்தாத உடையுடன் தினம் - நான் போடும் திருத்தமான கோலம் பார்த்து
கடக்கிறாய் கோபம் கொண்டு
அட சண்டாளா.,,,,,,
கோலத்தை நான் பார்த்து கொள்கிறேன்.
என்னை நீ பார்த்து செல்வதானால் சொல்
வருடம் முழுதும் மார்கழி ஆக சம்மதம்.
ஆறடி நீரில் நீ ஒரு பக்கமும்
மீனொரு பக்கமும் - என்
கால் கடித்துப் போகாத நாட்களில்
ஆற்றுக்குளியலில் எனக்கு
அவ்வளவாய் மகிழ்ச்சி இல்லை.
ஏரிக்குளியலில் எப்போதும்
இனிப்பிருக்கும்.
கம்பீரமாய் நீ கழட்டிப்போட்டு
துணிகள் துவைக்கும் கல்லில்
அடுத்து முறை என் துணிகளுக்கல்லவா?
உங்கப்பனுக்கு உடல் நலமில்லை.
உன் வயல் உழவுக்கு
நீ கிளம்பி விட்டாய் என _ உன்
மாடு இரண்டும் - எனக்கு
மணியாட்டி சொல்லிச்செல்கிறது
இதோ
தாவணி அகற்றி விட்டு - தம்பியின்
மேல் பட்டன் இல்லாத சட்டை
போட்டுக்கொண்டு நான் நாற்றுப் பறிக்க
என் வயலுக்கு கிளம்புவது கண்டு
எங்காத்தாவுக்கே மயக்கம் வருதாம்.
அடேய் சரவணா......
உனக்கு என்னையும்
எனக்கு உன்னையும்
பிடித்துப்போனது எப்படியோ?
ஏரித்தாமரைக்கு தெரிஞ்சிபோச்சு.
இலவமர காட்டுக்கும் தெரிஞ்சு போச்சு.
மானத்து மழைக்கும் தெரிஞ்சது போல
மானூத்துல இருந்து வந்து பாத்த
மாப்பிள வூட்டுக்கும் தெரிஞ்சிபோச்சு.
பேசி முடிக்கணும் - ரவைக்கு
பேசாம வந்து சேரு
பெண்ணாத்து மூலைக்கி..........
கவிதாயினி எழில்விழி.
# இசைக்கலைஞன் #
அடேய் சரவணா ..........
ஒரு தேர்ந்த இசைக்கலைஞனாய் நீ
என்னை கையாள்கிறாய்
என்னில் இத்தனை இசைக்கருவிகள்
இருப்பதை உனக்கு யார் சொன்னது?
என்னை தோல் கருவியாக்கி
தீம்தரிகிட செய்கிறாய்
துளை கருவிகளில் விரல் பொருத்தி
துள்ளியோட வைக்கிறாய்.
கவிதைகளில் களையெடுப்பதாய்
தலையில் குட்டுகிறாய்.
செண்டை மேளமா இதுவென்று
சண்டை போடுகிறேன்.
ஆனாலும் அந்த கண நாதத்தில்
கலந்து நான் கரைகிறேன்.
உன்னை பார்க்காதது போல்
தாண்டிச்செல்கிறேன்.
பின்னிடை பிட்டத்தில்
மத்தளம் வாசித்து
மறைந்து கொள்கிறாய்.
திருவிழா கூட்டத்தில்
மூச்சு உரசும் தூரத்தில்
நெரிசலில் தொடுவதாய்
புஜங்களில்மிருதங்கம் வாசித்து
மிருதுவாய் வருடுகிறாய்.
எதிரில் வருகிறேன். நீ
முன்னழகை முறைப்பதில்
என்னுள் தபேலா வாசித்து
என்னை தடுமாற வைக்கிறாய்.
வெளஞ்சநெல்லு வரப்புக்குள்ளே
வீணையாய் என்னை மடியமர்த்தி
நெகிழ்ந்த தாவணி சீர்திருத்தி
என் தந்திகளை முறுக்குகிறாய்
நான் காம்போதியில் கரைகிறேன்.
மற்றொரு நாள் அதேயிடத்தில்
என் இதழ்கடித்து உறிஞ்சுகிறாய்.
நாதஸ்வர சீவாளியாய் நாக்கால்
ஒரு நர்த்தனம் ஆடுகிறாய்.
செவிமடல் கடிக்கும் போதே
மறு செவியில் துளையடைக்கிறாய்.
புல்லாங்குழலில் ஒரு
புன்னாகவராளி கேட்கிறது.
என் மூக்குத்துளையில் உன்
மூச்சுக்காற்று நுழைகிறது.
மகுடிதுளை நுழைந்த காற்றில்
காதல் நாகம் படமெடுத்து ஆடுகிறது.
அடேய் சரவணா .............
எத்தனை ஸ்வரங்களில் நீ
என்னை இசைத்தாலும் என்னால்
என்ன செய்து விட முடியும்.?
உனக்கு
ஒத்து ஊதுவதைத் தவிர.
கவிதாயினி எழில்விழி
# நர்த்தனம். #
இதோ,
திரை விலகிற்று.
உறுத்தாத அலங்காரத்தில்
பறக்காத மயிலொன்று
அரங்கத்தில்
கால் பாவிற்று.
ஜதிகளுக்குள்
சிறைப்பட்ட
இந்த
நவீன நடனத்தின்
அரங்கேற்றத்திற்காக .
நட்டுவனார் இயல்பாக
தகிட தகிட தத் திரிகிட
ஆரம்பிக்க
மிருதங்கம் தொடர்ந்து
வழிமொழிய
ஆரம்பமாகியது
அடவுகளுக்குள்
அடைபட்டு
அந்த முதல்
குரு வணக்கம்.
உற்றுக் கவனியுங்கள்,
அவள் வலக்கை அபிநயம்
ஒரு சமர்ப்பணம் சொல்லும்.
இடக்கை அபிநயம்
ஒரு அஞ்சலி சொல்லும்.
சமர்ப்பணம்,
சுயம் தொலைத்த
தன் தகப்பன் - அந்த
பொம்மலாட்ட கலைஞனுக்கு,
அஞ்சலி,
அவன் கை விரலில் இருந்து
நழுவி காணாமல் போன - அந்த
பொம்மலாட்ட கலைக்கு ......
கவிதாயினி எழில்விழி.
# ஒரு நாள் #
எனக்கென ஒரு நாள் ஒதுக்கு.
அன்று என் தனிமைக்குள்
உன்னை நுழைக்காதே.
நாமாக இருந்த நமக்கான
மாலை நேர கடற்கரைக்கு ,
நான் மட்டும் போய் வருகிறேன்.
ஆமாம், நேற்று திருடிய
உன் உள்ளாடை அணிந்து தான்.
நீயில்லாத தனிமையில்
எனக்கேது இனிப்பு ?
கடற்கரை போகிறேன்.
ஆமாம்
உன் உள்ளாடைக்கு மேல்
என் சேலை அணிந்தபடி தான்.
மணலாக எங்கும் நீதான்
நிரம்பியிருக்கிறாய்.
என் கால்கள் கூசுகிறது.
காரணம்
நான் உள்ளாடையின்றி
உன்னில் நடக்கிறேன்.
உட்கார்ந்து கொள்கிறேன்.
கால்களை மறைத்தபடி.
காற்றில் விலகும்
என் இடுப்புத்துணியின்
இடைவெளி அழகை
அதோ
ஆடிக்கொண்டிருக்கும்
கட்டுமரத்தில் இருந்து
கண்காணிக்கிறாய்.
இதோ
மற்றை நாளுக்கு மாறுதலாய்
நான் உன்னை இழுத்து போர்த்திக்கொள்கிறேன்.
அலைகளிடம்
கொடுத்தனுப்பி இருக்கிறாய்
உன் காதலை.
திரும்பிச்செல்லும் போது
என் காதலை கொடுத்து அனுப்புகிறேன்.
யுகம் யுகமாய் நிற்காமல்
காதல் தூது செல்லும்
இந்த அலைகளுக்கு
நீ ஏன் ஓய்வு அளிப்பதில்லை?
நான் அளிக்கட்டுமா?
எப்படியா ?
என்னில் இருக்கும்
உன் உள்ளாடை விலக்கித்தான்.
அதன் பிறகு நின்றே விடாதா என்ன?
அசந்த ஒரு சிறு பொழுதில்
அலை தாண்டி பார்க்கிறேன்.
கட்டுமர நுனியமர்ந்த அந்த
கடற் காகம் சிறகு விரிக்கிறது.
மடி மீது தலை சாய்த்திருந்த
என் பார்வை விலக்கி
நீ
காக்கைச்சிறகினிலே நந்தலாலா
பாடியதன் லயிப்பில்
இன்று பாரதி இல்லை.
நீ மட்டும் தான் இருக்கிறாய்.
இல்லை.
கண்டிப்பாக உன் உள்ளாடை
கழற்றத்தான் போகிறேன்.
நீ நீயாக இருப்பதில் தான்
என் ஆத்மா உயிர் வாழ்கிறது.
ஆமாம் என்று
இதோ
மாதா கோவில் மணி ஒலிக்கிறது.
மயங்கித்தான் போய் விட்டேன்.
உள்ளாடைக்கே இத்தனை
சுகமென்றால்
என்
மொத்த ஆடையும் நீயாகும் நாளில்
நானென்ற ஒன்றை
நானிழந்து விடுவேனோ?
கவிதாயினி எழில்விழி.
# இசைப் பயணம் #
அடேய் சரவணா ...........
உன்னுடனான என் மீச்சிறு
பயணங்களை கூட நான்
கவிதையுடன் கடந்த போது
பயணங்களை பாடலாகவே எனக்குள்
அறிமுகம் செய்வித்தாய்.
உன் வாசல் கடக்கிறேன்
" இந்த புன்னகை என்ன விலை " என்கிறாய்.
என் சிரிப்பு உனக்கெப்படி தெரிந்தது.?
" உன் இதயம் சொன்ன விலை " தான்.
உன் வாசல் கடக்கிறேன்.
" ஏரிக்கரையின் மேலே " என்று
ஆரம்பிக்கிறாய்.
ஏரிக்குக்தானே? வந்து விடுகிறேன்
எத்தனை மணிக்கு என்பதை
உடல் மொழியால் உணர்த்துகிறாய்.
"தாமரை கன்னங்கள்
தேன் மலர் கிண்ணங்கள் "
உன் பாடலின் லயிப்பில்
நான் பறித்த தாமரையும்
என்னை கடித்திருந்த அட்டைப்பூச்சியும்
மயங்கித்தான் கிடக்கிறது.
என்னைக் கடக்கிறாய்
உன் உதடுகளை கண்ணாக்கி
"பட்டத்து ராணி பார்க்கும் பார்வை"
என்னை பார்க்கச்சொல்கிறாய்.
மாலையில் வரும் போது
"வெற்றி மீது வெற்றி வந்து "
உன்னைச் சேர்ந்ததாக
உரக்கச் சொல்கிறாய்.
உன்னுடனான என்
மீச்சிறு பயணங்களையும் என்
" விழியே கதை எழுது " என்றேன்.
கவிதைதான் எழுதியது.
எழுதிய ஒவ்வொரு கவிதையின் கீழும்
" காவியமா? நெஞ்சின் ஓவியமா?"
என்றுதான் கையெழுத்திடுகிறாய்.
"கல்யாண நாள் பார்க்க " சொன்னாய்
என்னுள் கடலலை அளவு ஆசை.
" கையோடு கை சேர்க்கும் காலங்களே "
இப்போதல்லாம் என்னிதழில் வழிகிறது.
ஆற்றுக்குளியலில் எனக்கு பின்னால் நீ
" தண்ணீர் சுடுவதென்ன ?" என்கிறாய்.
" நீராடும் கண்கள் இங்கே " பாடி
உன்னையும் துணைக்கு அழைக்கிறேன்.
உனக்கு பயந்து குளியறைக்குள்
குளித்துக் கொள்கிறேன்.
என் உதடு கூட துரோகியாய் விடுகிறது.
" நீராடும் அழகெல்லாம் நீ மட்டும்
பார்க்க வா " என்றுன்னை
ரகசியமாய் அழைக்கிறது.
இப்போதெல்லாம் என்னிடமுள்ள
இசைத்தட்டுகளின்
எல்லாப் பக்கங்களிலும்
எல் ஆர் ஈஸ்வரியே இழைகிறார்.
" இது மாலை நேரத்து மயக்கம் "
என்று கிசுகிசுத்துப் போகிறார்.
உன் மீதான காதலின் உரமறிந்து
அப்பன் கைச்சாட்டை என்
அடிவயிற்றில் அடித்த அன்று
" உன் கண்ணில் நீர் வழிந்தால் "
உன்னிதழில் இழைந்ததே ........
அந்த நொடி முதல் இந்த நொடி வரை
நான் அழுததே இல்லை.
ஆமாம்
உன் இறப்பிலும் கூட..
கவிதாயினி எழில்விழி.
# அவனதிகாரம். #
என்னால் வெகு நேரம்
மெளனமாய்
இருக்க முடியாது.
உடனே வா .
உன்னைத் தவிர
எல்லோராலும்
எப்போதுமே
தவறாகவே
மொழிபெயர்க்கப்படுகிறது,
என் மெளனம்.
வெகு நேரம் நான்
கோபத்தில்
இருக்கிறேன்
உடனே வா.
என் கோபம்
வரும் வழி
எல்லோருக்கும்
தெரிகிறது.
தீர்க்கும் வழி
உன் உதடுகளுக்கு மட்டுமே
தெரிந்திருக்கிறது.
எனக்கு தூக்கம்
வருகிறது.
உடனே வா .
நான்
நேராக படுத்தால்
மெத்தையாகவும்
குறுக்காக படுத்தால்
தலையணையாகவும்
மாறும் வித்தை
உனக்கு மட்டுமே
சாத்தியம்.
ஆடை விலகிய
என் உடலில்
அங்கங்கே
கொசு கடிக்கிறது
உடனே வா,
மழிக்காத உன்
முகத்தால்தான்
சொறிந்து
கொள்ள வேண்டும்.
மறந்தே விட்டது.
இன்று முதல் நாள்
வயிற்று வலியுடன்
குளியலறை
போகிறேன்.
உடனே வா .
நேற்று பார்த்த போது
தீர்ந்திருந்ததது.
வேண்டாம்,
நீ வர வேண்டாம்.
இருக்கிறது.
எனக்கு தெரியாமல்
எப்போது
வாங்கி வைத்தாய் ?
பத்து மணிக்கு மேல்
உதிரும் பூக்களை
ஒரு நாளாவது என்னை
சேகரிக்க விடு.
மொத்த பூக்களையும்
என் காலடியில் இருந்தே
தினமும் எடுத்து
சலித்துப் போய்விட்டது
எனக்கு.
எப்போது எழுந்து
சேகரிக்கிறாய்?
அட சிவனே.
அவனை
யாரிடமும்
கொடுத்து விடாதே.
அவனோடு
வாழ்வது
இன்னமும்
சலிக்கவில்லை
எனக்கு.
கவிதாயினி எழில்விழி.
# ஒரு முறை அழையேன் #
அடேய் சரவணா ..........
நினைவுகளின் அடுக்கில் 
நீக்கமற நிறைந்து
கனவுகளில் வாழும் என்
கவிதைகளின் நாயகனே,
கண்களை திறந்து ஒரு முறை என்னை
கண்ணம்மா வென அழையேன்.
கண்களைத் தவிர அனைத்தையும்
தணியாத காதலுடன் உனக்கு
ஒரு முறை திறந்து காட்டுகிறேன்.
செல்லும் இடமெல்லாம்
சிரிப்புப்பூ விரித்து
சிலிர்ப்பூட்டும் குரலில் என்
செவிமடல் கடித்து ஒரு முறை
செல்லம்மா வென அழையேன்.
சிலிர்த்துக் கொண்டு என்
செல்களுக்குள் எல்லாம் சில காலம்
சில்லென்ற பூத்து
சிறு நெருஞ்சி காடாகிக்கொள்கிறேன்.
தப்பென்று தெரிந்தும் - என்
தாவணி இழுத்தவனே
தாங்காமல் கேட்கிறேன்
தாவணியை தந்து விட்டு
தணியாத காதலுடன் ஒரு முறை என்னை
தங்கம்மா வென அழையேன்.
தடுக்கும் காவல் தாண்டி வந்தும்
மறுக்கும் உறவு துறந்து வந்தும்
ஒரு முறை உன்னை
உரசியாவது செல்கிறேன்.
ஈர்ப்பு விசை காட்டி யென்னை
ஈர்த்துக்கொண்டவனே,
வார்க்காமலே என்னை உனக்காய்
வனைந்து கொண்டவனே,
நோக்காமலே என்
நோக்கம் அறிந்தவனே,
சுவாசிக்காமலே என்
வாசம் தெரிந்தவனே
ஒரு முறை என்னை
அன்னம்மா வென அழையேன்.
ஈர்ப்பு விசை கடந்து வந்து,
உன் இதழுரசி உயிர் கலந்து
உன்னோடு ஒன்றிக்கொள்கிறேன்.
அனைத்து பெயரிலும் அழைத்து
என்னை நீயாக்கி கொண்டாய்.
உயில்எழுதப்போகிறேன்.
உலகத்து காதலையெல்லாம் ஒன்றாக்கி
உன் ஆதாம் ஆப்பிள் அமுங்கிப் போக
ஒரு முறை
அம்மா வென அழையேன்
அன்று முதல்
இரவெல்லாம் நான் ஏவாளாகி
என் மார் சாய்த்து உன்னை என் மணவாளன் ஆக்கிக் கொள்கிறேன்.
பகலெல்லாம் என் மார் மறைத்து
மடி சாய்த்து உன்னையென்
மகனாக்கி கொஞ்சுகிறேன்.
# ஒரு முறை அழையேன் #
கவிதாயினி எழில்விழி.
# வலி #
அடேய் சரவணா .......
வார்த்தைகளுக்குள் அடங்க
மறுக்கும் என் அழகான திமிரே!
அந்தியிலே வருவாயா?
அய்யனார் கோவிலுக்கு,
என்னது?
முந்தி விரிக்கணுமா?
ஏன்?
சந்தி சிரிச்சாத்தான்
தாலி கட்டுவீகளோ?
வார்த்தைகளுக்குள் அடங்க
மறுக்கும் என் வசீகர திமிரே!
ஒற்றை உள்ளாடையுடன்
ஆற்றில் குளிப்பது உன் உரிமை.
அதை தடுப்பது என் கடமை.
அட, அசிங்கம் புடிச்சவனே.
என் ஒண்ணு விட்ட தங்கச்சியும்
ஒன்னையே பாக்குறாடா....
வார்த்தைகளுக்குள் அடங்க
மறுக்கும் என் வாலிப திமிரே!
நிச்சயம் தான் முடிஞ்சதேன்னு
மச்சு வூட்டுக்காரி மயக்கி போட்டானா
அவள கடிச்சி துப்பிருவேன்
கால் காசுக்கும் ஆகாம - ஒன்ன
கண்ட துண்டமாக்கிருவேன்.
வார்த்தைகளுக்குள் அடங்க மறுக்கும்
என் மாப்பிள்ளை திமிரே!
இறுக்கிப் பிடிக்காதே இப்போது .
இது பகல் தானே
கை மட்டுமே வலிக்கும்.
இதே இறுக்கத்தை இரவில் காட்டு.
இருப்பவை எல்லாம்
இனிப்புடன் வலிக்கும்.
வார்த்தைகளுக்குள் அடங்க
மறுக்கும் என் வாழ்நாள் திமிரே!
இதுவரை உன்னால்
உண்டாக்கப்பட்டவை
விடிந்ததும் மறைகின்ற
விசித்திர வலிகள்.
இப்போது உண்டானதோ - நல்ல
சித்திரத்தின் வலிகள்.
புரியவில்லையா?
அடேயப்பா சரவணா
இது பிரசவ வலிடா......
# நீ அப்பாடா #
கவிதாயினி எழில்விழி.
ஒற்றை பெண் மகளை பெற்ற அப்பாக்களுக்கு சமர்ப்பணம்.
# மகளதிகாரம் #
அவளதிகாரம் என்னை
அதிகமாகவே ஆட்சி செய்தது.
அவளதிகாரம்.
பிறந்த சில மாதங்களிலேயே
தூக்கிப் பிடித்தேன் என்பதற்காக
என் முகத்தில் அடித்த
மூத்திரத்தில் ஆரம்பித்து
இன்று அவள் நாற்பதாவது வயதிலும்
என்னிடம் இனிதே ஆட்சி செய்கிறது.
ஒற்றைப்பெண் என்ற சூட்சுமம் தொட்டு ...
அவளதிகாரம் .
நிலா காட்டிய ஓரிரவில், மறுத்து
சூரியனை வரச்சொன்னவள்.
படிப்புக்கான பள்ளி முதல்
பாவாடையா, சுடிதாரா?
என்பது வரை தொடர்ந்த போது
ஆனந்தமாய் இருந்தது.
அவளதிகாரம்
இருபது வயதில் இழந்த தாய்க்கு
அழாமல் என் அழுகைக்கு
அதட்டிய போதும் தொடர்ந்தது.
எனக்கு அச்சமாய் இருந்தது.
அனிச்சையாய் கூடவா
ஒரு அதிகாரம் இருக்க முடியும்?
அவளதிகாரம்.
இருபத்து ஐந்தில் இவன் தான்
என அவனோடு வந்து நின்ற போதும்
அதிகாரத்துக்கு பயந்து
ஆமாம் சாமியானேன்.
நம் வார்ப்பு இல்லையோ?
அல்லது
வளர்ப்பில் தப்போ?
விடையேதுமின்றி இருபதாண்டுகள் .
இதோ, என் வீட்டு குளியலறையின்
தரைக்கும் என் இடுப்புக்கும் நடந்த
தகராறில் சில நாட்களாக படுக்கை .
தனிமை. ஏகாந்தத்தோடு
அனிச்சையாய் கண்களில் பயம்.
பின் கட்டில் சுடுதண்ணீர் அடுப்படியிலும்
அவளதிகாரத்தின் ஆட்சி நீள்கிறது.
வருகிறது.
அவளதிகாரம் இரு கையோடு...
அப்படியே என்னை அள்ளிச்சென்று
குழந்தையாய் ஆக்கி
என் ஆடை அவிழ்த்து
அழுக்கு தேய்த்த வரை தொடர்ந்த
அந்த அதிகாரத்தை
என் கண்ணீரும் அனுபவித்தது.
அவள் சிரித்தபடி சொன்னாள்
அப்பா,
உங்களுக்கு வேண்டுமானால்
நான் " அவளதிகாரம் " ஆக
இருந்திருக்கலாம்.
ஆனால் இது தான்
உண்மையான உங்கள்
" மகளதிகாரம் "
கவிதாயினி எழில்விழி.
# நீ எங்கே? #
அடேய் சரவணா .........
எனக்குத் தெரியும் 
நீ
மாதமொரு உள்ளாடை
வாங்கி விடுகிறாய்.
எனக்கும் சேர்த்து .
குளிக்கும் துறை கல்லுக்குள்
வைத்து விட்டு செல்கிறாய்.
எனக்கு உன்னை விட்டு
பிரிய மனமில்லை.
துவைத்து வைத்த உன்
துணிகளில் இருந்து உன்
ஒற்றை உள்ளாடை
திருடிச் செல்கிறேன்.
இப்போதெல்லாம் நீ
ஒற்றை உள்ளாடையும் துறந்து
இடுப்புத்துண்டோடு
குளமிறங்குகிறாய்,
அதையும் களவாட முடிவு கொண்டு
மூடிய கண்களுடன் நான்
களமிறங்குகிறேன்.
விலகுவதாய் நடித்து
ஆழத்திற்கு இட்டு செல்கிறாய்
அசரவில்லை நான்.
கடித்தேனும் பிடுங்கி விடுவேன்.
பயந்து கழற்றியே
கொடுத்து விட்டாய்.
ஜெயித்து விட்டேன்.
வெற்றிக் களிப்போடு
நெற்றியில் சுற்றிக் கொண்டு
கரையேறி செல்கிறேன்.
நான் கட்டியிருந்த
தாவணியை காணவில்லை.
அடேய், சரவணா .......
திரும்பி பார்க்கிறேன்
உன்னையும் காணவில்லை.
கவிதாயினி எழில்விழி
# வீடு #
பின் குறிப்பு : சின்னவீடு அல்ல.
இதோ வந்துவிட்டது
எழில் விழி சரவணன் வீடு.
இந்தவீடு
வாழ்ந்த கதையை சொல்லவா?
இந்த வீட்டில்
"வாழ்ந்த " கதையை சொல்லவா?
செங்கலும் சிமெண்டும் கலவை செய்து
சிறுக சிறுக வளர்ந்ததை சொல்லவா?
இரத்தத்தோடு சதையும் இணைத்தபடி
இரவுகளை கடத்திய இவர்களை சொல்லவா?
வாசல்
என்னில் பால் கவரும், தினசரி யும்
எட்டு மணிக்கும் எடுக்கப்படாமல் கிடந்தால்
என் வீட்டு முதலாளிகளிகள் இன்ப வலி
இரவு முடிந்தும் தொடர்வதை சொல்வேன்.
சுற்றுச்சுவர் .
ஆறடிக்கும் மேலாக வளர்த்தியென்னை
அழகு பார்த்த என் வீட்டு முதலாளிகள்
ஒரு சில முத்தங்கள் என் மீது சாய்ந்தும்
இட்டுக் கொண்டதை இன்றும் சொல்வேன்.
வரவேற்பரை
பனிரெண்டுக்கு பதினாறு என் பரப்பு - நான்
பார்த்த கதை சொல்வது என் சிறப்பு.
தினமும் பணிஏகி சரவணன் சென்ற பின்பு
உதடு துடைத்து திரும்பும் எழில்விழி அழகு.
சாப்பாட்டு அறை
உணவு வேளை முடியும் போது
ஜன்னல் காற்று என் வழி வந்து
சமையல் கட்டு கடப்பதற்குள்
முத்தச்சத்தம் கேட்டதென்றால்
சரவண சாகசம் நடந்த கதை
சத்தியமாய் எனக்கு தெரிந்திருக்கும்.
சமையலறை .
விடுமுறை நாளென்றால் - எனக்கு
எப்போதும் கொண்டாட்டம் - அன்று
எழில்விழிக்கு சரவணன் - இங்கே
வந்து விட்டால் திண்டாட்டம்.
துலக்கும் போது கூந்தல் அளைந்து
சமைக்கும் போது இடுப்பு தடவி
காப்பிக்கு உப்பை போடுவேன் என்று அவள்
சத்தம் போட்டாலும் முத்தம் கொடுப்பான்.
ஸ்டோர் ரூம்.
இருட்டாக வைத்திருக்கும் என்னிடம் மட்டும்
எப்போதாவது அவள் வருவாள் தனியாக.
பேசிக் கொண்டிருப்போம்.
கெடுப்பகென்றே அவன் வருவான்.
அந்த ஒற்றை முத்தச் சத்தத்தை
என்னால் கேட்க மட்டுமே முடியும்.
பார்க்க முடிந்ததில்லை.
 படுபாவிகள் இருவரும்
என் விளக்கு சுவிட்சை தொட்டதே இல்லை.
படிப்பறை.
பெயர் தான் எனக்கு படிப்பறை.
படிப்பை விட என்னில் அவன்
ஆராய்ச்சி செய்ததே அதிகம்.
ஆராய்ச்சியின் பெயரோ
" சத்தம் இல்லாத முத்தம் "
ஆராய்ச்சிக்கு பயந்து அவள்
இங்கு வருவதேயில்லை.
குளியலறை .
இதை சொல்லித்தான் தீர வேண்டும்.
என்னில் இருந்து ஒன்றை உள்ளாடையுடன்
வெளியேறும் அவன் முதுகோ மார்போ
மற்ற நாளில் பாவம் செய்து
அவள் வீட்டிலிருக்கும் நாட்களில்
முத்தம் பெற்றே புண்ணியம் முடிக்கும்.
பூஜையறை
ஆளரவமில்லா பொழுதுகளில்
அத்தனை அறைகளும்
என்னுடன் பேசும்.
கதைகளை கேட்டு என்
காது புளிக்கும்.
புனிதம் கருதியே
என்னை விலக்கிய கதை
நியாயம் என்பதை
ஒரு நாள்
மூட மறந்த என் கதவு
வெளிச்சம் போட்டு காட்டியதில்
வெட்கத்தில் நான் தான்
விழிகளை மூடிக்கொண்டேன்.
இனி படுக்ககையறை .
இந்த வீட்டில் நான் தான் பெரும் பாவி
எல்லா அறைகளிலும் வெளிச்சம் போட்டு
விளையாடியதை
என்னிடம் மட்டும் விளக்கணைத்து
விளையாடுவான்.
குடும்பப் பெண்ணாம் குடும்பப்பெண்
ஒருநாளாவது விடிய விடிய என்னை
விளக்கெரிக்க விட்டதில்லை.
ஆனாலும் ரகசியம் காப்பேன்.
சத்தியம் செய்து கொடுத்திருக்கிறேன்.
வீடு.
வீடென்பது கூடென்று
வீணே அடைந்து விடாதீர்கள்.
ஒவ்வொரு அறைக்கும்
உயிர் கொடுங்கள்.
மூச்சோடு ஒற்றை முத்தமும் கொடுங்கள்.
அதை
காற்றோடு தெரிவித்து கவிதையும் பாடுங்கள்.
கவிதாயினி எழில்விழி.
# வாழலாம் வந்து விடு #
அடியேய் அழகுக் கண்ணு......
வானம் தாண்டிச்செல்ல 
ஆசை எனக்கு,
வயல்வெளி தாண்ட
மனமில்லை உனக்கு.
வயலும் வானமும்
வாழ்வுக்கும் தேவைதான்.
வாழ்ந்தே விடுவோம்
வந்துவிடு எழில்விழி .........
கடல் எனக்கு கடலளவு பிடிக்கிறது.
ஆறே உனக்கு
போதுமானதாக இருக்கிறது.
ஆறும் கடலும்
அனைவருக்கும் தேவைதான்.
அதனையும் தாண்டி சென்றோமானால்
ஒரு வாழ்வங்கே காத்திருக்கு.
வாழ்ந்தே விடுவோம்.
வந்துவிடு எழில்விழி.........
ஊரில் பெய்யும் மழையில்
உற்சாகம் எனக்கு.
வாசல் மழையே
போதும் உனக்கு,
ஊருக்கும் உனக்கும்
ஒரே மழைதான்.
வாசல் தாண்டியும்
பெய்யும் மழை நனைந்து
வாழ்ந்தே விடலாம்
வந்துவிடு எழில் விழி........
,அத்தனை முத்தங்களிலும்
ஆசை எனக்கு.
உதட்டு முத்தமே
போதும் உனக்கு.
முத்தங்களால் முற்றுப்பெறாத
வாழ்க்கை இனி தேவையில்லை.
வாழ்ந்தே விடலாம்.
வந்துவிடு எழில்விழி........
காமமும் தாண்டும்
உணர்வெனக்கு நீ
காதல் தாண்டா
உணர்வுனக்கு நான்.
காதலும் தாண்டி
காமமும் தாண்டி
கரையேறிச்சென்று
கடந்தே விடுவோம்.
அந்த வாழ்வையும்
வாழ்ந்தே விடுவோம்
வந்துவிடு எழில்விழி. ...........
கவிதாயினி நாயகன் சரவணன்.
# தேவதைக்கும் பத்து மாதம் #
அடேய் சரவணா,
எடை இயந்திரத்தை கேட்காதே.
என்னைக் கேள்.
நாற்பது நாளில்
ஒரு கிலோ முன்னூறு கிராம்
அதிகமாகித்தான் விட்டாய்.
கவலைப்படாதே.
அவ்வளவு கனக்கவில்லை எனக்கு.
நானும் கூட அதே அளவுக்கு
இரட்டிப்பாக கூடி விட்டேன்
ஆமாம்.
எனக்கு இது ஆறாம் மாதம்.
ஞாயிற்றுக்கிமை. ஆனால்
உனக்கு ஏது விடுமுறை?
காப்பியுடன் எழுப்பினால் குடிப்பேன்
குளியலறையில் முதுகு தருவேன்.
காய் மட்டும் தான் நறுக்குவேன்.
நீ ஊட்டினால் மட்டும் வாய் திறப்பேன்
பூக்கட்ட நார் மட்டுமே தருவேன். நீ
உலர்த்தும் துணி மட்டுமே மடிப்பேன்.
தருவேன், தினமும் தருவது போலவே இன்றிரவிலும் தருவேன்.
ஏழாம் மாதம்தானே, பயமில்லை.
மேடிட்ட வயிற்றை
தினமும் தடவுகிறாய்
உன் மகள் உறங்குகிறாள்.
அவள் உறங்கியதை
உறுதிப்படுத்தி விட்டு
அப்படியே என்
அடிவயிற்றையும் தடவி விடேன்
நானும் தூங்கிக்கொள்கிறேன்.
எட்டாம் மாதமும் நீ வேண்டும் எனக்கு.
இப்போதெல்லாம் நீ
எங்களுக்கு பிறகே தூங்குகிறாய்.
மூடிய என் விழிகளுக்குள்
நீ தடுமாறுவது தெரிகிறது.
திறந்திருக்கும் என் ரவிக்கை
கொக்கிகளை கோர்த்து விட்டு
உன் மகள்தான் அழகி என்று
முடிவு செய்த பிறகு - என்
மூடிய மார்பில் ஏன் முத்தமிடுகிறாய்?
ஒன்பதாம் மாதம் என்பது
உனக்கு தெரியாதா என்ன?
உனக்கு ஏன் அவசரம்?
உன்னிடம்தான் முதலில்
தரச்சொல்லி இருக்கிறேன்.
என் தங்க மகளை,
வாங்கிக் கொள் , ஏந்திக் கொள்.
ஆனால்
அந்த முதல் முத்தத்தை மட்டும்
எனக்கு கொடுத்து விடு.
ஆமாம்
உனக்கு ஒரு தேவதையையே
தந்திருக்கிறேனே.
கவிதாயினி எழில்விழி.


# நங்கைகளல்ல, என் தங்கைகள் #
இந்த என் சிறுகவிதை உலக திருநங்கைகளுக்கு சமர்ப்பணம்.
இதோ....
நாங்கள் ஆடிக்கொண்டிருக்கும்
சமூக தெருக்கூத்தில்
அரவான் களபலிக்கு
ஆளின்றி தவிக்கிறோம்!
அப்படியே வந்து விடு.
ஆணுமல்ல, பெண்ணுமல்ல,
அலியுமல்ல...
என்று சொல்லி
அழகாக கொன்றிடுவோம்
அப்படியே செத்துவிடு!
ஏனென்றால்
சிகண்டியை முன்னிறுத்தி
பீஷ்மரை சாய்த்த
பெரு வரலாறு ஒன்று
எங்களுக்கு உண்டு!
ஆணே பெண்ணாகி
ஆணை புணர்ந்து
அய்யப்பனை பெற்ற
அசிங்கமும் உண்டு.
கூவாக குருக்களால்
குல மங்கை ஆக்கப்பட்டு
கூடி முடிப்பதாய் நடித்து
கூந்தல் அவிழ்ப்பதுமுண்டு.
அலிகள் கையால்
அள்ளித்தந்தால்
ஆதாயம் உண்டென்று
பிச்சை கொடுத்து
பாதி பிடுங்கும்
பெரிய மனிதர்களும் இங்குண்டு.
குழந்தைகளே ஆனாலும் கூட
உங்கள் கொங்கைகள் மீது எங்கள்
தூமை பார்வைகள்.
பருவமே வராமலும் கூட
எங்கள் குழந்தைகள் மீதோ உங்கள்
தாய்மை பார்வைகள்.
கூத்தை முடிப்போமா?
தெருக்கூத்து முடிப்பதற்கு
நான் தவசுக்கம்பமேறி
கருடன் வரவுக்காய்
கடின தவமிருப்பேன்.
கருடன் வருவானோ,
மாட்டானோ,
அந்த கடவுள் வருவான்.
எனக்கான உன்னை
உயிர்ப்பித்து தருவான்.
ஆணாண என்னை _ உன்
ஆளாக்கி அருள்வான்.
தவசு முடிந்து - நானும்
உயிர் பெற்று வருவேன்.
உந்தன்
உயிரோடு கலப்பேன்....
கவிதாயினி எழில்விழி
# " மைக்கேல் பார்ரடே " மனைவிக்கு சமர்ப்பணம். #
ஒரு நாள் இரவு,
எனக்கு துணையாய் இருட்டு .
என்னோடு இணையாய் தனிமை.
இரண்டுக்கும் பகையாய்
அவன் ஆய்வுக்கு நான்
உதவவில்லை என்ற
ஆதாரமில்லா வெறுமை.
எங்களுக்குள் ஊடல்.
ஆனாலும் அன்றிரவு
என்னை அருமையாய் சுகித்தான்.
கேட்டேன் - ஆராய்ச்சி?
சொன்னான் - முடிந்தது.
சிரித்தபடி விலகிப்படுத்தான்.
ஆராய்ச்சியில் வெற்றி .
வெள்ளோட்டத்தில் பெரு விலை .
அரங்கத்தில் கரவொலி
அன்பளிப்பாய் பூமாலை .
அதற்கும் மேலே பணமழை்
அன்றிரவு என்னை
அளவுக்கதிகமாய் புணர்ந்தான்.
முடித்துவிட்டு விலகிப் படுக்கவில்லை.
இப்போதும்
கேட்டேன்.- ஆராய்ச்சி?
சொன்னான் - முடித்துவிட்டேன்.
கேட்டேன் - எப்படி?
நீ என்னை கைகளால்
மட்டுமல்ல
கால்களாலும்
அணைத்துக் கொண்டாயல்லவா?
ஆமாம்.
அது தான்
காப்பிடப்பட்ட கம்பிச்சுருள் ..
ம். அப்புறம்.?
உன் ஆலிங்கனத்துக்குள்
சுழன்று கொண்டிருந்தேனல்லவா?
ஆமாம்'
நான் தான்
"தேனிரும்பு" துண்டு.
கம்பிச்சுருளில் நான்
காதலை செலுத்தினேன்.
ஸ்லோ ஸ்பீடு பார்முலா வந்தது.
காமத்தை செலுத்தினேன்.
ஹை ஸ்பீடு பார்முலா வந்தது.
சிரித்தபடி சொன்னேன்.
உன் சாரம் என் சாரம்.
என்னில்
தேன் குடித்தபடி சொன்னான்.
ஆமாம்"
# சம்சாரம் அது மின்சாரம் #
கவிதாயினி எழில்விழி |
# விஷம் #
அவள் விழிகள் திறந்திருந்தால்
நான் தான் அவள் உலகம்.
அவள் விழிகள் மூடிக்கொண்டால்
அவள் மட்டுமே என் உலகம்.
அந்த உலகம் எனக்கு ரெம்ப பிடிக்கும்.
என் முத்தம் வேண்டியே
அந்த உலகம் அடிக்கடி
தன்னை மூடிக் கொள்ளும்.
எங்கள் ஊர்க்குளத்தின்
எல்லாமீன்களும்
சொல்லிக் கொண்டன.
அவளுக்கொரு
முத்தம் கொடுத்தால்
தனக்கு முக்தி உண்டு
ஒட்டுக் கேட்டருந்த
அந்த தண்ணிப்பாம்புக்கும்
ஆசை வந்து
அவள் முழுகும் போது
உதட்டில் முத்தம் கொடுத்து
பரம்பரைக்கே முக்தி பெற்றது.
கரையேறியவள் பாம்பு
உதட்டில் கடித்ததாய் கூறி
மடிதாங்க நானிருப்பதால்
மயங்கி சாய்ந்தாள்.
விசம் எடுக்க எங்களுக்கும் தெரியுமே.
கயிறாக கைக்கொண்டு
களுத்திறுக்கி கட்டிக்கொண்டு
விசம் எடுத்த வித்தியாசத்தில்
விழிகள் அன்றும் மூடியதுண்டு.
விசம் இறக்கிய கிறக்கத்தில்
விழிகள் திறந்து எழுந்து கொண்டு
"படுபாவி, படுபாவி "
"உனக்கு அந்தப்பாம்பே ஓரளவு தேவல "
சொல்லி விட்டு, சிரித்தபடி செல்கிறது
என்னிடம் மட்டும் சீறத்தெரியாத
அந்த என் பெண் நாகம்.
நான் அந்த செல்லப்பாம்பை
தேடிக் கொண்டு இருக்கிறேன்.
நீங்களாவது பார்த்தால் - அதற்கு
என் நன்றியை சொல்லுங்கள்.
கவிதாயினி நாயகன் சரவணன் .
# தரிசனம் #
அடேய் சரவணா ............
என் வலது பக்க மூக்குக்திக்கு
உன்னைப் பார்க்க ஆசையாம்.
நேற்று கோவிலில் கூட கேட்டது.
இன்று கல்லூரியில் கேட்கிறது.
நாளை ஆற்றிலும் கேட்குமாம்.
முக்குத்தி என்ன ?
வலப் பக்க தோடு தொடங்கி
கொலுசு வரை அத்தனையும்
எத்தனை நாளாய் கேட்கிறது?
ஒரு நாளாவது - என்
வலப்பக்கமாக வந்து பேசேன்.
வரமாட்டாயா?
பார்க்கலாம்.
நாளை தொடங்கி என் மூக்குத்தி
சொல்லும் நான் வரை
குளியல் தொடங்கி
இராச்சந்திப்பு வரை
தாவணி தவிர்த்து
நேற்றிரவு திருடிய
உன்சட்டைகளையே
அணியப்போகிறேன்.
கடிவாளம் போட்டுக்கொள்.
அல்லது கண்களை மூடிக்கொள்.
நீயென் இடப்பக்கம்
நடக்கும் போதெல்லாம்
என் இதயம் இடமாறுதல்
கேட்கிறது.
துப்பட்டா செய்த பாவம்
உன் தொடுதலில்
தொலையுமென்றால்
சொல்லி விடு
சுடிதாரே அணிகிறேன்.
அருகில் வா.
ஒரு ஆசை சொல்கிறேன்.
தாவணி நாட்களில் நீ என்
வலப்பக்கம் வர வேண்டாம்.
கவிதாயினி எழில்விழி.
# வெட்டியாள் #
இந்த என் கவிதை திருச்செங்கோடு ரோட்டரி சங்கத்தினரால் நடத்தப்படும் ' சாந்தி வன ' த்தில் மேற்பார்வையாளராக பணியாற்றும் சகோதரி கிருஷ்ணவேணி மற்றும் வெட்டியானாக பணியாற்றும் சகோதரி வனிதா ஆகியோருக்குக்கு 2013 மார்ச் 8 '' உலக மகளிர் தினத்’’தன்று சமர்ப்பணம் செய்யப்பட்டது. தற்போது என் பிறந்த நாளன்று மீள்பதிவாக.
வாழும் நாள் எல்லாம் 
வாளாவிருந்து விட்டு
 வானுலகம் போனவரையும்
வாவென்று வரவேற்கும்
தாய்மனம் உன்னது!
அதற்கும் தன்மானம் உள்ளது.
வானுலகம் போனவனை
தான் சுமந்து வந்தோருக்கு
ஆயிரம் கண்ணிருக்கும்.
அத்தனையும் உனைப்பார்க்கும்.
அதனை பார்வையிலும்
உன்னால் மட்டுமே
அதனை தாண்டியும்
பார்க்க முடியும்.
அதிலும் ஒருவனாவது
நினைப்பான்,
 ஒரு நாள் உன்னை
அடைந்து விடுவதாக!
உனக்கும் தெரியும்,
உதட்டுக்குள் சிரித்து கொள்வாய்!
முடிவில் அவனும்
உன்னை அடைவான் –
அன்று அவனை
பிடிசாம்பலாக்கும் வரை
பிரியமுடன் வேக வைப்பாய்!
நீ அழகுக்கு இலக்கணமல்ல -
செய்யும் தொழிலால் நீ
.அழகுக்கே இலக்கணமானாய்
சுடுநீரில் விரல் நனைப்பதற்கும்
எங்களுக்கு பயம்.
நெருப்புக்குள் கை நுழைக்கும்
உங்கள் தைரியம்.
தூக்கத்தில் என் குடும்பமும்
துக்கத்தில் என் உறவுகளும் -
துடிப்பதெல்லாம் வெறும் நடிப்பு
நான் தூங்கிய பின் ஏது விழிப்பு!
உலுக்கும் மரணம் உனக்கும்
சிலநேரம் வலிக்கும்.
ஒருபோதும் கண்ணீர்
வடிக்காத உன்
விழிகள் சில நேரம்
செந்நீரும் வடிக்கும்.
வந்து போவோருக்கு
நீ ஒரு பொருட்காட்சி!
போய் வருவோருக்கு
என்றும் நீதான் மனசாட்சி!
வாடிக்கையாய் நீ
 அடுக்கும் சிதை – பலருக்கு
வேடிக்கையாய் தெரியும்.
உன் துடிப்பு யாருக்கு புரியும்?
ஒளிந்திருந்து பார்த்தால்
ஊருக்கே தெரியும்.
தண்ணீரில் அழுதாலும்
உன் கண்ணீரில் உப்பிருக்கும்!
பனிநீரில் குளித்தாலும் உன்மனம் சிதைநெருப்பாய் தகித்திருக்கும்!
உன் கேள்விகளுக்கு நான் பதில்!
என் கேள்விகளுக்கு நீ பதில்!
பிறர் கேள்விகளுக்கு நாம் பதில்!
காலத்தின் கேள்விகளுக்கு கடவுளே பதில்!!
கண்டதெல்லாம் காட்சியாக,
கடவுளே மனசாட்சியாக,
வாழுமிந்த நாளில்
வரமொன்று கேட்பேன்!
தரவேண்டும் நீங்கள்!!
வந்தாரை வரவேற்கும் உன்னை
முடிவில் நான் வரவேற்க வேண்டும்.
ஒரு மகளாக அல்ல!
தாயே!
உனக்காக ஒரு வெட்டியானாக!!!!!!!
கவிதாயினி எழில்விழி.
# ஒரு குளமும் பல வானங்களும் #
எங்கள் ஊர் எல்லையில்
என் பார்வைக்கு மட்டும்
பாசி படர்ந்து
எப்போதும் நிரம்பி வழியும்
குளம் ஒன்று இருக்கிறது.
அதில் என்னைப் போல
பக்கத் துடுப்புகள் இன்றி
நீந்தும் சில மீன்களும்...
என்னை போல உயிர்
நீண்டு வாழும்
சில ஆமைகளும் உண்டு.
கத்தி கத்தியே தன்
சாவுக்கு அச்சாரம்
போட்ட பல தவளைகள்
இருக்கின்றன.
பார்வையில் அழகான
என் போல் சில பாம்புகளும்
கூட இருக்கின்றன....
நிலவுக்கே மலர்ந்து
விடும் என்போல்
இதழ்கள் அற்ற
பல தாமரைகள் உண்டு
இத்தனைக்கும் மேலாக
என்னைப்போல வாடிய
 அல்லிகளும் சற்று
நிறையவே உண்டு.
குளம் வற்றும்,
கொத்திவிடலாம் என்றே
சில கழுகுகளும்
ஒற்றைக் கால் தவத்தில்
சில கொக்குகளும் கூட
காத்திருக்கிறது.
இவற்றிற்கு மத்தியில்
வற்றாமல் நிரம்பியிருக்கும்
 மனக்குளத்திற்குள் விழுந்து
கிடக்கிறது என் வானம்.
நீருக்குள் மட்டுமே
வாழ்கிறது அது பாவம்.
பிம்பங்களில்
வாழ்ந்து கொள்ளும்
என்மனக்குளத்தை
ஒரு முறை
தூர் வாரிக் கொள்கிறேன்.
பளிங்கு தண்ணீர் விட்டு
சில பாவங்களை
கழுவிக் கொள்கிறேன்.
அடேய் சரவணா.......
உன் நினைவுக்கல்லெறிந்து
என்னில் அலையாக
ஆர்ப்பரியேன்.
அத்தனையும் அடங்கட்டும்.
கவிதாயினி எழில்விழி.
# போகிப்பொங்கல் #
வாருங்கள்.
போகி இரவு முடியுமுன்னே
பொங்கலை கொண்டாடி
முடித்துக்கொள்வோம்.
நாளையும் தொடர்ந்து
நாம் நிறைய
பொங்க வேண்டும்.
நியாய விலை கடைகளில்
துண்டு கரும்பு இலவசத்திற்காக
கம்பு சுற்றிக்கொண்டே
காதல் பேச வேண்டும்.
இலவச வேட்டி சேலை வாங்க
தொழிலதிபர்கள் பின்னால்
வரிசையில் நின்றபடி
உலக இலக்கியங்கள் பேச வேண்டும்.
மாட்டுப்பொங்கல் முடிந்து கொடுப்பதாக
கூறி விலை பேசி விற்று விட்ட
மாடுகளின் கொம்புகளுக்கு
கண்ணீரில் வர்ணம் பூச வேண்டும்.
கரி நாளில் மாட்டுக்கறி
வாங்கி வந்து கொடுத்து விட்டு
ஜல்லிக்கட்டுக்கு எதிராக
பீட்டாவை பிரித்து மேய வேண்டும்.
பிடித்தம் செய்து கட்டி விட்ட
வருமான வரிக்கான
படிவம் 16 வாங்கிவிட்டு
வரி ஏய்ப்பு செய்த மகாபெரியவர்களின்
குண்டிகளை கழுவி விட வேண்டும்.
மரங்களை வெட்டி கொண்டே
மழை குறைந்து விட்டதென்று
வருண பகவானையும் கொஞ்சம்
வாயார திட்ட வேண்டும்.
பாரம்பரியம் அழித்து விட்டு
பழம் பெருமை பேச வேண்டும்.
சூளுரை உரைத்து விட்டு ஒரு
சூப் சாப்பிட்டு பிரிய வேண்டும்.
அடுத்த வருடமாவது
பொங்கலை போகியாக்கி
பொங்க வைப்போம்
வாருங்கள்.
கவிதாயினி எழில்விழி.