வெள்ளி, 24 மார்ச், 2017

# திருமண நாள் வாழ்த்துக்கள் #
மைக்கேலுக்கு ........
கடந்து போன இந்த நாட்கள்
இனி வருமா?
தெரியாது.
அதுவரைக்கும்
இருக்கும் நாள் எல்லாம்
இனிமையாய் கழியட்டும்.
உங்கள்
இரு மனதும் மகிழட்டும்.
கடவுளால் பெண்ணாக்கி
பிறகொரு தேவதையாக்கி
பிறப்பிக்கப்பட்ட பெண்மகளை,
கடவுளென நம்பியே
உன்னிடம் ஒப்படைத்தோம்.
காப்பாற்றி விட்டாய்
எங்கள் கடவுள் நம்பிக்கையை .
கடைசி வரை காப்பாற்று
கடவுள் துணையிருப்பார்.
பெண்ணின் அருமை
பெற்றவர்களுக்கு தெரியும்.
அவளின் பெருமை
உனக்கு மட்டுமே தெரியும்.
அவளின்றி உன் வாழ்வு
அணுவளவும் ருசிக்காது .
உன்னால் அவள் வருந்துவதானால்
உனக்கே அது ரசிக்காது .
வீணை அவள் - நீ
மீட்டாத நேரங்களில்
உன் பூஜையறையில்
வைத்து விடு.
ஆமாம்
பூஜையறையின் புனிதமவள்
பாதுகாப்பாய் பார்த்துக் கொள்.
அந்த பாரிஜாத பூவை.
சுதாராணிக்கு.........
பூக்களால் சண்டையிடு.
பூக்களுக்காக சண்டையிடாதே.
பொருளாதார உலகில்
பூக்களுக்கும் விலையுண்டு.
அவனோடு அன்பு செய்ய
உலகின் எல்லை வரை
உன் கைகள் நீட்டிக் கொள்.
ஆணென்றாலும் உன்னை
தாங்கும் ஒரு
தாயென்றே அவனை
உன் மனம் உணரட்டும்.
பூஜையறையில் உன்னை
வைத்திருப்பதால்
சில நேரம் மீட்ட மறந்திருந்தாலும்
அவன் ஒரு வித்தகன்.
வீணாக்கி விடாமல்
பாதுகாப்பாய் பார்த்துக்கொள்
அந்த பாரிஜாத மரத்தை .
இனி இருவருக்கும்.
ஒவ்வொரு விடியலிலும்
மழை தேக்கி காத்திருக்கும்
சூல் கொண்ட மேகக்கூட்டம்
மனதுக்குள் மறைந்திருப்பதை
படம்பிடித்து காட்டுங்கள்.
பிறகு
பொழிந்து விடும் அன்பு மழை.
ஒவ்வொரு இரவிலும்
கதவின் காதுகளை செவிடாக்கிவிட்டு,
வெளிச்சத்தின் கண்களை குருடாக்கிவிட்டு
நான்கு சுவர்களுக்குள்
நடத்துங்கள்
உங்கள் நலம் காக்கும் நாடகத்தை,
ஆமாம்
இல்லறமல்லது நல்லறமன்று.
பணிவது தவறல்ல - நல்ல
பண்பென்று உணருங்கள்.
துணையின் பாசத்தை - பெரும்
தூண் என்றே உணருங்கள்.
பூச்சரமே ஆனாலும்
தூரத்தான் எரியணும்.
புத்தாடையே ஆனாலும்
துவைக்கத்தான் செய்யணும்.
மத்தளம் தான் உங்கள் வாழ்க்கை .
ஆனாலும்
ஒருவர் மற்றவர் கையில்
உங்களையே ஒப்புக்கொடுங்கள்.
உங்கள் இருவரையும் நாங்கள்
கடவுளின் கையில்
ஒப்புக் கொடுத்திருக்கிறோம்.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
கவிதாயினி எழில்விழி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக