வெள்ளி, 24 மார்ச், 2017

# உலகப்பனும் ஒரு சேவலும் #
அலாரம் வைத்த கடிகாரம் வாங்க
பொருளாதாரம் இல்லாத
அந்த ஒரு நாளில்
பொரித்த என் வீட்டு கோழிக்குஞ்சுகளில்
சேவல் ஒன்றை தேர்ந்தெடுத்து
வளர்த்து வந்தேன்.
மிகுந்த பயிற்சிகளுக்கு பின்
முன்னிரவு பின்னிரவு
அமாவாசை பெளர்ணமி
தினங்களில் எல்லாம்
முறை வைத்து எழுப்பி விட
முறையாக சொல்லி தந்தேன்.
மூன்று நாள் மட்டும் மெளனமாய்
இருக்க தானாகவே கற்றுக்கொண்டது.
நேரத்திற்கு சரியாக சத்தம் போடும்.
கிளம்பி போகும் போது ஆலமர நிழல்
சரியாக இலந்தைக் காட்டை
தாண்டியிருக்கும்.
இருள் வந்து கவிந்திருக்கும்
இவன் விழியோ திறந்திருக்கும்.
எப்படிடா எனக்கு முன்னயே
இங்க வந்து காத்திருக்கே.?
சத்தியமாய் சொல்ல மாட்டான்.
முத்தங்களால் சத்தமிட்டாலும்
சத்தங்களால் முத்தமிட்டாலும்.
மொத்தமாய் மூடிக்கொள்வான்.
ஆலமர நிழல் அய்யனார் கோவில் வர
ஆகும் நேரம் அப்போதெல்லாம்
எனக்கு தெரியாது.
ஊர்க்காவல் உலகப்பனுக்கு
எப்படித்தான் தெரியுமோ
சரியாக பிகிலடிப்பான்.
பிடி தளர்த்தி பிரியும் போது
கடித்து வைப்பான் பின் முதுகில்
வலியை வலிந்து மறைத்து
வந்தவுடன் சேவல் கொஞ்சி அதன்
பின் கழுத்தில் செல்ல கடி கடித்து விட்டே
தூங்கச் செல்வேன்.
ரகசியம் உடைத்தேன்.
சேவலை செல்லமாய் கடிப்பேனென.
மறுநாள் உலகப்பன்
தோளில் பலத்த காயத்துடன்
என் சேவலிடம் பேசிக் கொண்டிருந்தான்.
சரவணன் கடித்து விட்டானென .
நேரத்துக்கு கூவினால்
சரவணனிடம் பிடித்துக் கொடுப்பேன்
எனவும் பின்னொரு நாளில் கூறினானாம்.
இப்போது என் சேவல்
என்னிடம் இல்லை.
சரவணன் சாவுக்கு காவு கொடுக்க
உலகப்பனிடம் ஒப்படைத்து விட்டேன்.
கவிதாயினி எழில்விழி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக