வெள்ளி, 24 மார்ச், 2017

# இதுவும் நடக்கலாம். #
இதோ.
இந்த நாளின் எல்லா பொழுதுகளிலும்
ஏதோ ஒன்று எங்கோ ஓரிடத்தில்
நிகழ்ந்து கொண்டிருக்கலாம்.
இரைக்கு செல்லும் தாய்க்கு ஒரு
கிளிக்குஞ்சு விடை அளிக்கலாம்,
தூண்டிலுக்கு அருகில் வந்த மீனொன்று
பசியின்றி புழு மறுத்து விலகலாம்.
பெருமாளின் வடிவென்று இறுமாந்த
ஆமையொன்று தன் இறுதி மூச்சை விடலாம்.
நீருக்குள் வாழும் மீனின் பார்வைச் சூட்டில்
அதன் முட்டைகள் பொரிக்கலாம்.
பகல் பொழுதின் நீட்சியாக தொடர்ந்த
ஒரு முதலிரவு முடியலாம்.
தேவார பாராயணம், ஆழ்வார் பாசுரம்
மணியோசைக்குள் மறையலாம்.
ஏரிக்கரை மடை திறக்க உள்ளூர்
ஆட்கள் இருவர் அடித்துக் கொள்ளலாம்.
பாதசாரி ஒருவர் பேருந்து விபத்தில் தப்பி
மிதிவண்டி மோதி இறந்து போகலாம்.
என் வயதொத்த எவளோ ஒருத்தி உன் காதல் இழந்தமைக்காக குளியலறையில் அழலாம்.
சாராயநெடி மறுத்து விரட்டப்பட்ட ஒரு கணவன்
விலைமாது தேடி வீதியில் நடக்கலாம்.
அரசியல் மேடைகளுக்கு விளக்கு கம்பம் நடும்
ஆட்கள் வெயில் மறைக்க தொப்பி தேடலாம்.
ஒன்றுமில்லாதவன் சாவுக்கு ஊரே வந்து
தப்படிக்கு தப்பாமல் தாளத்துடன் ஆடலாம்.
பூட்டிய வீட்டுக்குள் ஒரு மனைவி கணவனை
கட்டிப் போட்டு கட்டையால் அடிக்கலாம்.
முத்தத்தின் சத்தத்தில் பிறவிகள் நிகழலாம்.
மொத்தத்தில் நிலவு சூரியனாய் மாறலாம்.
சாமிக்கு சார்த்த கட்டிய மாலைகளை
சில சடங்கள் சுமந்து திரியலாம்.
இந்த நாளின் எல்லா பொழுதுகளிலும்
ஏதோ ஒன்று எங்கோ ஓரிடத்தில்
நிகழ்ந்து கொண்டிருக்கலாம்.
அடேய் சரவணா .......
தலை கிள்ளப்பட்ட இந்த கரப்பான் பூச்சி
உயிர் பிரியும் நிமிடம் வேண்டி
இறந்து போன உன்னிடம்
என்றும் போல இன்றும்
வேண்டியும் கொண்டிருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக