வெள்ளி, 24 மார்ச், 2017

# தேவதைக்கும் பத்து மாதம் #
அடேய் சரவணா,
எடை இயந்திரத்தை கேட்காதே.
என்னைக் கேள்.
நாற்பது நாளில்
ஒரு கிலோ முன்னூறு கிராம்
அதிகமாகித்தான் விட்டாய்.
கவலைப்படாதே.
அவ்வளவு கனக்கவில்லை எனக்கு.
நானும் கூட அதே அளவுக்கு
இரட்டிப்பாக கூடி விட்டேன்
ஆமாம்.
எனக்கு இது ஆறாம் மாதம்.
ஞாயிற்றுக்கிமை. ஆனால்
உனக்கு ஏது விடுமுறை?
காப்பியுடன் எழுப்பினால் குடிப்பேன்
குளியலறையில் முதுகு தருவேன்.
காய் மட்டும் தான் நறுக்குவேன்.
நீ ஊட்டினால் மட்டும் வாய் திறப்பேன்
பூக்கட்ட நார் மட்டுமே தருவேன். நீ
உலர்த்தும் துணி மட்டுமே மடிப்பேன்.
தருவேன், தினமும் தருவது போலவே இன்றிரவிலும் தருவேன்.
ஏழாம் மாதம்தானே, பயமில்லை.
மேடிட்ட வயிற்றை
தினமும் தடவுகிறாய்
உன் மகள் உறங்குகிறாள்.
அவள் உறங்கியதை
உறுதிப்படுத்தி விட்டு
அப்படியே என்
அடிவயிற்றையும் தடவி விடேன்
நானும் தூங்கிக்கொள்கிறேன்.
எட்டாம் மாதமும் நீ வேண்டும் எனக்கு.
இப்போதெல்லாம் நீ
எங்களுக்கு பிறகே தூங்குகிறாய்.
மூடிய என் விழிகளுக்குள்
நீ தடுமாறுவது தெரிகிறது.
திறந்திருக்கும் என் ரவிக்கை
கொக்கிகளை கோர்த்து விட்டு
உன் மகள்தான் அழகி என்று
முடிவு செய்த பிறகு - என்
மூடிய மார்பில் ஏன் முத்தமிடுகிறாய்?
ஒன்பதாம் மாதம் என்பது
உனக்கு தெரியாதா என்ன?
உனக்கு ஏன் அவசரம்?
உன்னிடம்தான் முதலில்
தரச்சொல்லி இருக்கிறேன்.
என் தங்க மகளை,
வாங்கிக் கொள் , ஏந்திக் கொள்.
ஆனால்
அந்த முதல் முத்தத்தை மட்டும்
எனக்கு கொடுத்து விடு.
ஆமாம்
உனக்கு ஒரு தேவதையையே
தந்திருக்கிறேனே.
கவிதாயினி எழில்விழி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக