வெள்ளி, 24 மார்ச், 2017

# கடைசி விருந்து #
மழைக்கால நாட்களில்
கால் புதைய சேறாகியும்
வெயில் நாட்களில்
காற்றுக்கே புழுதி கிளப்பும்
நம்மூர் வரும் வண்டிச்சாலை.
களை பறித்து திரும்பும்
என் இடுப்புச் சொருகல் சேலை
கீழே இறக்காத வரை
காரைச்சாலையாகி
அவனை போல
கண்களை மூடிக் கொண்டு
கண்ணியம் காக்கிறது.
அட சண்டாளா....
ஒரு முறை கண்ணை திறவேன்
இருப்புச்சொருகல் உருவப்போகிறேன்.
இருள் பிரியாத சிறு வெளிச்சத்தில்
திருத்தாத உடையுடன் தினம் - நான் போடும் திருத்தமான கோலம் பார்த்து
கடக்கிறாய் கோபம் கொண்டு
அட சண்டாளா.,,,,,,
கோலத்தை நான் பார்த்து கொள்கிறேன்.
என்னை நீ பார்த்து செல்வதானால் சொல்
வருடம் முழுதும் மார்கழி ஆக சம்மதம்.
ஆறடி நீரில் நீ ஒரு பக்கமும்
மீனொரு பக்கமும் - என்
கால் கடித்துப் போகாத நாட்களில்
ஆற்றுக்குளியலில் எனக்கு
அவ்வளவாய் மகிழ்ச்சி இல்லை.
ஏரிக்குளியலில் எப்போதும்
இனிப்பிருக்கும்.
கம்பீரமாய் நீ கழட்டிப்போட்டு
துணிகள் துவைக்கும் கல்லில்
அடுத்து முறை என் துணிகளுக்கல்லவா?
உங்கப்பனுக்கு உடல் நலமில்லை.
உன் வயல் உழவுக்கு
நீ கிளம்பி விட்டாய் என _ உன்
மாடு இரண்டும் - எனக்கு
மணியாட்டி சொல்லிச்செல்கிறது
இதோ
தாவணி அகற்றி விட்டு - தம்பியின்
மேல் பட்டன் இல்லாத சட்டை
போட்டுக்கொண்டு நான் நாற்றுப் பறிக்க
என் வயலுக்கு கிளம்புவது கண்டு
எங்காத்தாவுக்கே மயக்கம் வருதாம்.
அடேய் சரவணா......
உனக்கு என்னையும்
எனக்கு உன்னையும்
பிடித்துப்போனது எப்படியோ?
ஏரித்தாமரைக்கு தெரிஞ்சிபோச்சு.
இலவமர காட்டுக்கும் தெரிஞ்சு போச்சு.
மானத்து மழைக்கும் தெரிஞ்சது போல
மானூத்துல இருந்து வந்து பாத்த
மாப்பிள வூட்டுக்கும் தெரிஞ்சிபோச்சு.
பேசி முடிக்கணும் - ரவைக்கு
பேசாம வந்து சேரு
பெண்ணாத்து மூலைக்கி..........
கவிதாயினி எழில்விழி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக