வெள்ளி, 24 மார்ச், 2017

# ஆசை. #
ஆத்தங்கரையில் அந்த மரம்
அழகான புன்னை மரம்.
அடிமரத்து வேர்புடைப்பில்
ஆளுறங்கும் நந்தவனம்.
எமக்கென்று போட்ட பட்டா
மழை நாட்களில் மறுக்கப்படும்.
மற்றை நாள் நிலா இரவில்
எம் முனங்கல் போதுகளில் மட்டும்
மூச்சு விட்டு வாழ்ந்து கொள்ளும்.
நெகிழ்ந்த எம் உடைகளை
தென்றல் அனுப்பி திருத்திவிடும்.
பூ உதிர்த்தி வாழ்த்தி விடும்.
புன்னகைத்து வழியனுப்பும்.
அங்க தொட்டு இங்க தொட்டு
அடியாத்து மணலும் தொட்டதால்
அடிமரத்து வேர் செத்து
ஆளுறங்கும் அந்த நந்தவனம்
ஆள் புதைக்கும் குழியாச்சி.
இப்போதெல்லாம் அந்த
எங்களின்இளவயது ஊஞ்சலை
நான் கடக்கும் போதெல்லாம்
என்னுடைய தனங்களை
எவனோ பிசைவது போல
எரிச்சல் வருகிறது.
இல்லாத தனங்களுக்கு
இறுக்கமான உள்ளாடை அணியும்
இந்தக்கால பருவப் பெண்ணாய்
இலையுதிர்த்து நிற்கும்
அந்த ஆத்தங்கர புன்னமரம்
எங்கள் காதலை போல
என்றென்றும் வாழ
எனக்குண்டு ஓர் ஆசை.
என்ன செய்ய?
மணல் எடுத்தவன்
ஒரு வேசை.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக