வெள்ளி, 24 மார்ச், 2017

# எந்த நிமிடம் #
யோசித்துப்பார்க்கிறேன்.
உன் மீதான என் காதலின்
ஆரம்பத்தை .
உன்னிடமும் கேட்கிறேன்.
எப்போதும் போல் சிரிக்கிறாய்.
வயசுக்கு வருவதற்கு முதல் நாள்
வரப்பில் வழுக்கி விழுந்தயென்னை
பார்வையில் பக்கம் வந்து
முட்டி தேய்த்து சொடுக்கெடுத்த அந்த
சொர்க்க நிமிடத்திலிருந்தா?
பச்சைஓலை குடிசைகட்ட
மச்சுவீட்டு மாமங்காரன்
சீரோட வந்தப்ப எங்கிட்ட
சீராடி மொகந் திருப்பி நீ
சிரிக்காம நின்ன - அந்த
சித்திர நிமிடத்திலிருந்தா?
குடிசைக்கூடு பிரித்து
முளைத்திருந்த சிறகுக்கு
தாவணி தடுப்பு போட்டு
தண்ணீ எடுக்க நான் வந்தப்ப
தடுப்பு தாண்டி நின்னு நீ தவிப்புடன்
பார்த்த அந்த தங்க நிமிடத்திலிருந்தா?
ஊர்தாண்டி ஊர்ந்து செல்லும்
அந்த ஒற்றையடிப் பாதை வழி
நெடுஞ்சாலை பேருந்துக்காய் நான்
வருவதற்கு முன் சென்று
இருக்கை துடைத்து வைத்த அந்த
இன்ப நிமிடத்திலிருந்தா?
பார்வை முடித்து சிரிப்பு முடித்து
மெளனம் உடைத்து பேசிய நாள் முடித்து
ஜரிகையிட்ட பேப்பர் சுற்றி
நீ கொடுத்த மூக்குத்திக்கு நான்
முத்தம் கொடுத்த அந்த
முத்தான நிமிடத்திலிருந்தா?
அந்த ஒரு அதிகாலைப்பொழுதில்
ஆத்தங்கரைபிள்ளையாருக்கு
நூற்றியெட்டு தோப்புக்கரணம்
போட்டு முடித்தது ஏனென்று கேட்டதற்கு
ஜோடி மெட்டி தந்து என் ஜோடி நீயென
சொல்லிச் சென்ற அந்த
சுகம் சொன்ன நிமிடத்திலிருந்தா?
எத்தனை யோசித்தும் ஆரம்பம்
எதுவென்று புரியாமல்
உன் முகம் பார்க்கிறேன்.
வெட்கமாய் இருக்கிறதென
விழிகளை மூடிய நிமிடத்தில்
இதழோடு இதழ் இணைத்து
முத்தமிட்டு விலகிய அந்த
முத்தான நிமிடத்தியிருந்தா?
ஆரம்பமே இல்லாத
நம் காதலின் ஆரம்பம் என்னவென்று
யோசித்த நாட்களில் எல்லாமே
ஆதாமும் ஏவாளும் நம் காதலை
யாசகம் கேட்பதாக நீ சொல்லிச் சிரித்த
அந்த நொடி தான் ஆரம்பம் என்பதாய்
நீ இல்லாத இந்த பொழுதுகள்
இன்று உணர்த்திச் செல்கிறது.

கவிதாயினி எழில்விழி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக