வெள்ளி, 24 மார்ச், 2017

# கவிதைகள் தினம் #
இன்று உலக கவிதை தினமாம்.
ஊருக்கென்ன தெரியும்.
நீ உயிர் வாழும் ஒரு கவிதை என்பது.
என் வேருக்கு மட்டுமே தெரியும்.
நான் நீ விதைத்த (க)விதை என்பது.
கொலுசுக்கு தெரிவதில்லை
மணிகளின் ஆதங்கம் .
என் தூக்கத்தின் அமைதியில்தான்
அந்த மணிகளின் கவிதைப்பிரவாகம்.
நீ போட்ட கொலுசுதானே?
கூந்தல் சிரிக்கிறது. என்னில் நீ
சிக்கெடுக்க சிரமப்படுவதாய்.
அதற்கு தெரியாது - அது நம்
கூடலில் என் கூந்தல் பிரிக்கும்
உன் கையெழுதும் கவிதை என்று.
வளையல்களின் சிணுங்கலில்
உன் கவிதைகளே வழிகிறது.
கழற்றப்படாத என் மெட்டிகளின்
கவிதை தாலாட்டில்
நீ போட்ட வளையல்கள் உடைந்து
வாசல் வரை தெறிக்கிறது.
பகல் பொழுதிலும் சரி
ஊடலுக்கு பின்னான
இரவுகளிலும் சரி.
உன் உழைப்பின் வியர்வை தொட்டு
என் மீது ஓராயிரம் கவிதை எழுதுகிறாய்.
உள்ளாடைகள் சிரித்தன.
மேலாடைகள் முறைத்தன.
நம் ஆடைகளுக்கும் தெரியாமல்
எல்லா ஆடைகளும் விடைபெற்ற
போதில் சொல்லாமல் வந்த
ஒரு சுகமான இருட்டு அன்று
நம்மில் நாம் எழுதிய
ஒரு மாபெரும் கவிதையை
முற்றுப்புள்ளியுடன் முடித்துவைத்தது.
அடேய் சரவணா ............
இன்றேனும் இறங்கி வந்து
இந்த இரங்கற்பாவினை
பிழை திருத்தித்தருவாயா?
பிரியங்களுடன் காத்திருக்கிறேன்.
என்றும் கவிதைகளுடன்
கவிதாயினி எழில்விழி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக