வெள்ளி, 24 மார்ச், 2017

# ஒரு முறை அழையேன் #
அடேய் சரவணா ..........
நினைவுகளின் அடுக்கில் 
நீக்கமற நிறைந்து
கனவுகளில் வாழும் என்
கவிதைகளின் நாயகனே,
கண்களை திறந்து ஒரு முறை என்னை
கண்ணம்மா வென அழையேன்.
கண்களைத் தவிர அனைத்தையும்
தணியாத காதலுடன் உனக்கு
ஒரு முறை திறந்து காட்டுகிறேன்.
செல்லும் இடமெல்லாம்
சிரிப்புப்பூ விரித்து
சிலிர்ப்பூட்டும் குரலில் என்
செவிமடல் கடித்து ஒரு முறை
செல்லம்மா வென அழையேன்.
சிலிர்த்துக் கொண்டு என்
செல்களுக்குள் எல்லாம் சில காலம்
சில்லென்ற பூத்து
சிறு நெருஞ்சி காடாகிக்கொள்கிறேன்.
தப்பென்று தெரிந்தும் - என்
தாவணி இழுத்தவனே
தாங்காமல் கேட்கிறேன்
தாவணியை தந்து விட்டு
தணியாத காதலுடன் ஒரு முறை என்னை
தங்கம்மா வென அழையேன்.
தடுக்கும் காவல் தாண்டி வந்தும்
மறுக்கும் உறவு துறந்து வந்தும்
ஒரு முறை உன்னை
உரசியாவது செல்கிறேன்.
ஈர்ப்பு விசை காட்டி யென்னை
ஈர்த்துக்கொண்டவனே,
வார்க்காமலே என்னை உனக்காய்
வனைந்து கொண்டவனே,
நோக்காமலே என்
நோக்கம் அறிந்தவனே,
சுவாசிக்காமலே என்
வாசம் தெரிந்தவனே
ஒரு முறை என்னை
அன்னம்மா வென அழையேன்.
ஈர்ப்பு விசை கடந்து வந்து,
உன் இதழுரசி உயிர் கலந்து
உன்னோடு ஒன்றிக்கொள்கிறேன்.
அனைத்து பெயரிலும் அழைத்து
என்னை நீயாக்கி கொண்டாய்.
உயில்எழுதப்போகிறேன்.
உலகத்து காதலையெல்லாம் ஒன்றாக்கி
உன் ஆதாம் ஆப்பிள் அமுங்கிப் போக
ஒரு முறை
அம்மா வென அழையேன்
அன்று முதல்
இரவெல்லாம் நான் ஏவாளாகி
என் மார் சாய்த்து உன்னை என் மணவாளன் ஆக்கிக் கொள்கிறேன்.
பகலெல்லாம் என் மார் மறைத்து
மடி சாய்த்து உன்னையென்
மகனாக்கி கொஞ்சுகிறேன்.
# ஒரு முறை அழையேன் #
கவிதாயினி எழில்விழி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக