வெள்ளி, 24 மார்ச், 2017

# எங்கள் நாடு ஏழை நாடு #
நாங்கள் இந்தியர்கள் .
வேற்றுமையில் ஒற்றுமை காண்பவர்கள்.
அதனால்
வீட்டுக்கு உள்ளே குறுக்குச்சுவர் எழுப்பி
குறுகி குனிந்து நடப்பதில்லை.
குபேர மூலையில் படித்துக்கொள்வோம்.
வாயு மூலையில் வடித்துக்கொள்வோம்.
அக்கினி மூலையில் படுத்துக்கொள்வோம்.
ஈசான்ய மூலையில் இருந்து தின்போம்.
அதனால்
வாஸ்து புருசனை வாசலிலேயே வைப்போம்.
தெருவை அடைத்து திருமணப்பந்தல்
ஊரே மெச்ச போட்டுக்கொள்வோம்.
அந்த ஒருநாள் மட்டும் இருவரைத்தவிர
மீதமெல்லாம் தெருவில் படுப்போம்.
எங்கள் வீட்டு சமையலறையில்
எல்லாவற்றுக்கும் கொள்கலன் உண்டு.
அஞ்சறைப்பெட்டியில் அறைகள்
மட்டுமே இருப்பதைப் போல
உப்பும் அரிசியும் கொஞ்சம் இருக்கும்.
எங்கள் வரவேற்பறைக்கு
எல்லைகள் கிடையாது.
எல்லைகள் போட்டு வரையறுப்பதென்றால்
தெருவின் எல்லை எதுவரை செல்லுமோ
அது வரை சென்றே திரும்ப வேண்டும்.
வருடத்தில் சில நாள் அய்யனார் அழைப்பார்.
வயிறார சோறு போட்டு
வாழ்த்தியும் விடுவார்.
மறு முறை அழைக்கும் வரை _ வயிற்றுக்கு
தினமும் அரை நாள் விடுமுறை விடுவார்.
எங்கள் காதலை சமூகக்கடவுள்
ஆரம்பித்து வைப்பார்.
சாதிச்சாத்தான் முடித்து வைப்பார்.
இடையில் உதவும் பூசாரிகளை
உள்ளுர் கடவுள் உதைத்து வைப்பார்.
உழைப்புக்கு இல்லா உத்தரவாதம்
கூலி குறைப்பில் ஏற்றுக் கொள்வோம்.
பிரசவம் கூட மருந்துகள் இன்றி
சின்ன கத்தியில் முடித்துக் கொள்வோம்.
இத்தனையும் இருந்தும் நிலாக்கால
இரவுகளில் சேர்ந்து சிரித்தே
வாழ்ந்து கொள்வோம்.
வந்தார்க்கு சோறிடுவோம்
உங்களைப் போல
வாசற்கதவு சாத்தமாட்டோம்.
கவிதாயினி எழில்விழி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக