வெள்ளி, 24 மார்ச், 2017

என் முகநூல் நண்பர் திரு. இளமாறன் தமிழ் அவர்கள் தலைப்பு தந்து கேட்டுக் கொண்டதற்கிணங்கி # யாதுமாகி # எனது பாணியில் இந்த கவிதை . தலைப்புக்கு நன்றி.
அப்போது நான்
வயசுக்கு வரவில்லை.
களத்து வீட்டு மருதை மவ
எழில் விழி நானும்
சந்து வீட்டு சண்முகம் மவன்
சரவணனும் தான் கூட்டாளிங்க,
புளிபறிக்க போனாலும்
புல்லறுக்க போனாலும்
ஒண்ணாக போறளவு
கண்ணான புள்ளைங்க.
பல்லி முட்ட காட்டுடா-ன்னா
பாம்பு முட்ட எடுத்தாருவான்.
வெட்டு கிளி ஒண்ணு கேட்டா -பத்து
பச்ச கிளி புடிச்சாருவான்.
அப்படிப்பட்ட சேக்காளி
ஆனாலும் நல்ல சோக்காளி...
ஊர விட்டு எறநூறடியில ஏரிக்கர.
ஏரிக்கர மேல ஏழுநூறடில குளிக்குந்தொர.
அத தாண்டி நூறடில ஆம்பளங்கதொர.
ஒதுக்கி விட்டிருக்கன் ஒத்த தாமர மொக்க .
வெடிக்கறது எப்பன்னு விரிவா நான் ஆராய ..
அதுக்குத் தான் கெளம்பிட்டேன் அதிகால நேரத்துல .
ஏரிக்கர பவளமல்லி எறச்சிபோட்ட பூமேலே
பாம்பு ரெண்டு பிணையறத
பாத்துட்டுதான் நாம்போனேன்.
அய்யனாரு கோயில் தாண்டி அவன் அரக்காலு டவுசர் ஒண்ணு அரளிச்செடி மேல
கெடடந்தததயும் நாம் பாத்தேன்.
எந்த குத்துச்செடிக்கு குண்டிய காட்டிட்டு
குத்த வச்சிருக்கானோ தெரியலியே.
குளிக்குந்தொர வந்தாச்சி. - தாமர
மொக்கயும் நாம்பாத்தாச்சி.
இன்னமும் வெடிக்கலன்னு
தெரிஞ்சதுந்தான் சிரிப்பாச்சி .
ஏரிக்குள்ள எறங்கியாச்சி
எந்நெஞ்சளவு நனைஞ்சாச்சி.
தாமரமொக்கயும் எங்கவனத்துக்குள்ள வச்சாச்சி.
அடி வானம் செவப்பாச்சி - அட
அவனுந்தா வந்தாச்சு.
மலதாண்டி அந்த மரந்தாண்டி அவன் கதிரு வர மணித்துளி ஒண்ணிருக்கு.
ஆம்பளத்தொரயிலருந்து என்னப்பாக்கற
அட இவங்கண்ணோ ரெண்டிருக்கு.
மொக்குக்கும் வெக்கம் வந்து
நுனி மூக்கு செவந்திருச்சி -
அட எனக்குங் கூட அடிவயித்து
மேட்டுமேல அட்டப்பூச்சி ஊந்திருச்சி .
அடியேய். இன்னிக்கு நீ வெடிக்கறத பாக்காம நான் வூட்டுக்கும் போறதில்ல.
மொக்குக்கும் கேக்காம மெளனமா
நா சொல்லியாச்சி.
மொக்கும் நானும் ஒன்னா கலந்து
உயிர் கலந்து ஊன் கலந்து
யாதுமாகி எல்லாமாகி நின்னாச்சி.
அட
வெளிச்சமும் வந்தாச்சி - இருந்த
வெக்கமும் வெலகியாச்சி.
மொக்கு நுனி வெளுத்தாச்சி
அட்ட பூச்சி ரெத்தம் குடிச்சாச்சி
இதோ
மெல்லிய சத்தத்தோட
இரண்டு மொக்கும் வெடிச்சாச்சி.
# சரவணனுக்குதான் முதல் செய்தி.
கவிதாயினி எழில்விழி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக