சனி, 25 மார்ச், 2017

# அறிமுகம் . #

நான் பிறக்கும் போது உன்  அறிமுகம்
எனக்கு தேவைப்பட்டிருக்கவில்லை.
காரணம்
எனக்கு அறிமுகமாக வேண்டி நீ
எனக்கு முன்பே பிறந்திருந்தாய்.

எனக்கான நிறங்களின் அறிமுகம்
நீ வானவில்லுடன் வந்த போது தான்
நிகழ்ந்தது.
என் பருவங்களுக்கான அறிமுகம்
உன் பார்வைகளில் நிகழ்ந்தது.

என் காதல் பசிக்கான அரிசியில்
உன் பெயர் எழுதியிருப்பதை
அறிமுகம் செய்ததே - நீ
எனக்கு செய்த ஆகச் சிறந்த அறிமுகம் .

ஆசிரியர் ஆகாயம் அறிமுகம் செய்தார்.
ஆனால் நீயோ நிலவு வரை
கூட்டிச்சென்றும் இடமில்லை என்று வந்து
இரவுச்சந்திப்புக்கென்று
இலந்தைக் காட்டை அறிமுகம் செய்தாய்.

யவனராணியை அறிமுகம் செய்த மறுநாள்
நான் கடல்புறா வாய் மாறியிருந்தேன்.
பொன்னியின் செல்வன் அறிமுகம் செய்தாய்.
குந்தவைக்கு வந்தியத்தேவனாய்
எனக்குள்ளே அறிமுகம் ஆனாய்.

வால்காவில் தள்ளி விட்டு நீச்சல்
அறிமுகம் செய்தாய்.
கங்கை வந்து சேரும் போது
வாரி எடுத்து கரை சேர்த்தாய்.
உமர்கயாமும், கலீல் ஜிப்ரானும்
உன்னிரு பக்கத்தில்
உதவிக்கு நின்றிருந்தார்கள்.
ஆமாம். உன் உதவியாளர்களாகத்தான்
அவர்கள் எனக்கு அறிமுகம் ஆனார்கள்.

ஒடிசியில் ஆரம்பித்து - உள்ளுர்
ஒப்பாரி வரை அறிமுகம் செய்தாய்.
இலியட் அறிமுகம் முடியுமுன்பே - உலக
இலக்கிய அறிமுகம் நிகழ்த்தி விட்டாய்.

உன் இத்தனை அறிமுகங்களிலும்
எனக்கு பிடித்ததை சொல்லட்டுமா?
உச்சி தொடங்கி பாதம் வரை
ஒவ்வொரு நாளும் இடும் முத்தத்திற்கு
தினம் ஒரு புதுப்பெயர் சொல்லி
அறிமுகம் செய்வாயே. அதுதான்.
இந்த அறிமுகத்திற்கு ஒரு போதும்
முற்றுப்புள்ளி நீ வைத்ததே இல்லை.

அடேய் சரவணா .........
இறப்பென்பது உயிர் துறப்பென்று
எனக்கு அறிமுகம் செய்ய பலருண்டு.
இறப்பென்பது இழப்பென்று எனக்கு
அறிமுகம் செய்ய
உன்னைத்தவிர யாருண்டு?

கவிதாயினி எழில்விழி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக