வெள்ளி, 24 மார்ச், 2017

# வெட்டியாள் #
இந்த என் கவிதை திருச்செங்கோடு ரோட்டரி சங்கத்தினரால் நடத்தப்படும் ' சாந்தி வன ' த்தில் மேற்பார்வையாளராக பணியாற்றும் சகோதரி கிருஷ்ணவேணி மற்றும் வெட்டியானாக பணியாற்றும் சகோதரி வனிதா ஆகியோருக்குக்கு 2013 மார்ச் 8 '' உலக மகளிர் தினத்’’தன்று சமர்ப்பணம் செய்யப்பட்டது. தற்போது என் பிறந்த நாளன்று மீள்பதிவாக.
வாழும் நாள் எல்லாம் 
வாளாவிருந்து விட்டு
 வானுலகம் போனவரையும்
வாவென்று வரவேற்கும்
தாய்மனம் உன்னது!
அதற்கும் தன்மானம் உள்ளது.
வானுலகம் போனவனை
தான் சுமந்து வந்தோருக்கு
ஆயிரம் கண்ணிருக்கும்.
அத்தனையும் உனைப்பார்க்கும்.
அதனை பார்வையிலும்
உன்னால் மட்டுமே
அதனை தாண்டியும்
பார்க்க முடியும்.
அதிலும் ஒருவனாவது
நினைப்பான்,
 ஒரு நாள் உன்னை
அடைந்து விடுவதாக!
உனக்கும் தெரியும்,
உதட்டுக்குள் சிரித்து கொள்வாய்!
முடிவில் அவனும்
உன்னை அடைவான் –
அன்று அவனை
பிடிசாம்பலாக்கும் வரை
பிரியமுடன் வேக வைப்பாய்!
நீ அழகுக்கு இலக்கணமல்ல -
செய்யும் தொழிலால் நீ
.அழகுக்கே இலக்கணமானாய்
சுடுநீரில் விரல் நனைப்பதற்கும்
எங்களுக்கு பயம்.
நெருப்புக்குள் கை நுழைக்கும்
உங்கள் தைரியம்.
தூக்கத்தில் என் குடும்பமும்
துக்கத்தில் என் உறவுகளும் -
துடிப்பதெல்லாம் வெறும் நடிப்பு
நான் தூங்கிய பின் ஏது விழிப்பு!
உலுக்கும் மரணம் உனக்கும்
சிலநேரம் வலிக்கும்.
ஒருபோதும் கண்ணீர்
வடிக்காத உன்
விழிகள் சில நேரம்
செந்நீரும் வடிக்கும்.
வந்து போவோருக்கு
நீ ஒரு பொருட்காட்சி!
போய் வருவோருக்கு
என்றும் நீதான் மனசாட்சி!
வாடிக்கையாய் நீ
 அடுக்கும் சிதை – பலருக்கு
வேடிக்கையாய் தெரியும்.
உன் துடிப்பு யாருக்கு புரியும்?
ஒளிந்திருந்து பார்த்தால்
ஊருக்கே தெரியும்.
தண்ணீரில் அழுதாலும்
உன் கண்ணீரில் உப்பிருக்கும்!
பனிநீரில் குளித்தாலும் உன்மனம் சிதைநெருப்பாய் தகித்திருக்கும்!
உன் கேள்விகளுக்கு நான் பதில்!
என் கேள்விகளுக்கு நீ பதில்!
பிறர் கேள்விகளுக்கு நாம் பதில்!
காலத்தின் கேள்விகளுக்கு கடவுளே பதில்!!
கண்டதெல்லாம் காட்சியாக,
கடவுளே மனசாட்சியாக,
வாழுமிந்த நாளில்
வரமொன்று கேட்பேன்!
தரவேண்டும் நீங்கள்!!
வந்தாரை வரவேற்கும் உன்னை
முடிவில் நான் வரவேற்க வேண்டும்.
ஒரு மகளாக அல்ல!
தாயே!
உனக்காக ஒரு வெட்டியானாக!!!!!!!
கவிதாயினி எழில்விழி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக