வெள்ளி, 24 மார்ச், 2017

# பாஞ்சாலி #
அய்யா துரோணரே |
உன் மாணவர்களில்
இவன் மட்டும் ஏன் இப்படி.?
இவன் விடும் அம்புகளின்
ஒற்றை இலக்கு எப்போதும்
என் உதடாக மட்டும் இருக்கிறது.
இலக்கு தவறி விட்டதாக
பொய் கூறி சில சமயம்
என் இடுப்பு உரசி செல்கிறது.
இவனுக்கு வித்தை சொன்னமைக்காக
உன் கட்டை விரலை - எனக்கு
காணிக்கையாக
தந்துவிடு.
அடேய் துச்சாதனா ..........
துகிலுரிவதற்காக சபை நடுவில்
துடித்துக் கொண்டு இருப்பதாக
பீற்றிக்கொள்ளாதே,
நீ தொட்டவுடன்
உரிந்து கொள்வதற்காக
என் சேலை எப்போதும்
நெகிழ்ந்தே இருக்கிறது.
அடேய் அர்ஜூனா ........
என்னை சிறையெடுக்க
காண்டீபம் கையேந்தி
கண்ணனுடன் வருகிறாய்.
எனக்கென்னவோ
நீ
பிருகன்னளை ஆகவே
தெரிகிறாய்.
சிரிப்பு தான் வருகிறது.
சிறை தாண்டி நானே
வந்து விடுகிறேன்.
அடேய் கர்ணா ..........
உலகம் எல்லாம் தானம் கொடுத்த
நீ
எனக்கு
காதலை மட்டுமே
தானமாக தந்தாய்.
சாபம் இடுகிறேன்.
காதலை தவிர உனக்கு
மற்றதெல்லாம் மறந்து போகட்டும்.
அடேய் சரவணா ........
நீ பாண்டவம் தாண்டி
கௌரவர் பெயர் கொண்டு
நூற்றொருவராக கூட
பிறந்து கொள்.
ஒவ்வொரு பிறவியிலும்
நான் - உனக்கு
பாஞ்சாலியாக பிறந்தே
இறக்கவும் சம்மதிக்கிறேன்.

கவிதாயினி எழில்விழி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக