வெள்ளி, 24 மார்ச், 2017

# நாளைக்கு என் வயது இருபது . #
மேலத்தெரு ஒத்தக் கண்ணன்
இப்பத்தான் சொல்லிப்போனான்.
மூணு மணிக்கு நீ வயலுக்கு வருவன்னு.
எங்கப்பஞ்சொத்துல
பொன்னி நெல் வெளஞ்சிருக்கு.
ஒங்கப்பஞ்சொத்துலயோ
சம்பா வெளஞ்சி சாஞ்சிருக்கு.
அப்பனுங்கள போலவே வரப்ப
வாய்க்கா ஒண்ண பிரிச்சிருக்கு.
என் வயலு வரப்பு மேல நானிருந்து
வாய்க்கா தண்ணில வண்ணாத்தி மீனுக்கு
வச்சிருந்த எங்காலு சூடாவே இருந்துச்சு.
சண்டாளன் நீ வந்ததுமே _ அந்த
தண்ணி கூட குளுந்துருச்சி .
அப்பனுங்க வரதுக்குள்ள
அங்ஙனயே பேசிக்கிட்டோம்.
"பொறந்த நாள் பரிசிருக்கு
பொழுதோட வந்து விடு"
"அது நாளைக்கு இப்ப என்னன்னேன்"
மடையடைக்கும் சாக்குல
மயங்கும் படி முத்தம் வச்சே .
அன்னிக்கு ஏன்தான் அந்த
அந்திமழை பெஞ்சதோ
நம்மூரு ஆத்து தண்ணி
பளிங்கு நிறம்மாறி பழுப்பாகி போச்சு.
குளிக்க நான்தான் மொதல்ல போனேன்.
ராசா நீயோ பின்னதான் வந்தே.
நெஞ்சளவு தண்ணியில நான்
கண்மூடி நின்னப்போ
கெண்ட மீனு கடிக்குதோன்னு
கால் உதறி துடிச்சப் போ
அட சண்டாளா,
எப்படா கொலுசு போட்ட?
காலில ஒண்ணும் கையில ஒண்ணுமா,
ஆச்சி. அது முடிஞ்சி வருசம் ஒண்ணு.
நாளை விடிஞ்சா எனக்கு வயசு இருவது.
மேலத்தெரு ஒத்தக்கண்ணன்
இப்பத்தான் சொல்லிப்போறான்.
மூணு மணிக்கு நீ வயலுக்கு வருவன்னு.
இன்னிக்கும் நீ மடை திறக்க
உனக்கு நான் மனம் திறந்தேன்.
"இந்த வருட பரிசு அதைவிட பெருசுடி.
ஆனா பாரு ஒண்ணுதான் கெடச்சது."
சொன்னதுமே புரிஞ்சிக்கிட்டேன்.
சண்டாளன் நீ என்ன
பெண்டாளும் முன்னால
எனக்கு ஒட்டியாணம் போட்டு
ஒத்திகை பாக்க போறேன்னு.
அடேய் சரவணா....
எனக்கும் ஆசதாண்டா.
மாரளவு தண்ணிக்குள்ள நீ
மறஞ்சபடி வந்து சேர....
ஊருக்கும் தெரியாம நான்
ஒட்டியாண அளவு காட்ட,......
அதுக்கு
பளிங்கு தண்ணி பழுப்பாக
எங்கப்பா சிவனே
பருவ மழைய அனுப்பி வைடா....
அன்னிக்கு பிறகு இன்னிக்கு வர
அந்தியில அந்த பருவ மழ
பெய்யவே இல்லயடா.
பிரியமான எம்புருசா.

கவிதாயினி எழில்விழி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக