வெள்ளி, 24 மார்ச், 2017

# போகிப்பொங்கல் #
வாருங்கள்.
போகி இரவு முடியுமுன்னே
பொங்கலை கொண்டாடி
முடித்துக்கொள்வோம்.
நாளையும் தொடர்ந்து
நாம் நிறைய
பொங்க வேண்டும்.
நியாய விலை கடைகளில்
துண்டு கரும்பு இலவசத்திற்காக
கம்பு சுற்றிக்கொண்டே
காதல் பேச வேண்டும்.
இலவச வேட்டி சேலை வாங்க
தொழிலதிபர்கள் பின்னால்
வரிசையில் நின்றபடி
உலக இலக்கியங்கள் பேச வேண்டும்.
மாட்டுப்பொங்கல் முடிந்து கொடுப்பதாக
கூறி விலை பேசி விற்று விட்ட
மாடுகளின் கொம்புகளுக்கு
கண்ணீரில் வர்ணம் பூச வேண்டும்.
கரி நாளில் மாட்டுக்கறி
வாங்கி வந்து கொடுத்து விட்டு
ஜல்லிக்கட்டுக்கு எதிராக
பீட்டாவை பிரித்து மேய வேண்டும்.
பிடித்தம் செய்து கட்டி விட்ட
வருமான வரிக்கான
படிவம் 16 வாங்கிவிட்டு
வரி ஏய்ப்பு செய்த மகாபெரியவர்களின்
குண்டிகளை கழுவி விட வேண்டும்.
மரங்களை வெட்டி கொண்டே
மழை குறைந்து விட்டதென்று
வருண பகவானையும் கொஞ்சம்
வாயார திட்ட வேண்டும்.
பாரம்பரியம் அழித்து விட்டு
பழம் பெருமை பேச வேண்டும்.
சூளுரை உரைத்து விட்டு ஒரு
சூப் சாப்பிட்டு பிரிய வேண்டும்.
அடுத்த வருடமாவது
பொங்கலை போகியாக்கி
பொங்க வைப்போம்
வாருங்கள்.
கவிதாயினி எழில்விழி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக