வெள்ளி, 24 மார்ச், 2017

# பண்ணாடியும் லட்சுமிகளும் #
பச்சக்குடை புடிச்சி பயிர் பாக்க வந்த
பண்ணாடிக்கு பின்னாடி வந்த
அவரோட இரண்டு லட்சுமிகளும்
அம்மணமாத்தான் வந்தாளுக.
ஒருத்தி தங்கலட்சுமி, மத்தவ முத்துலட்சுமி.
பண்ணாடி பரம்பரைக்கே பால் ஊத்துற
இரண்டு லட்சுமிங்களுக்கும்
மொத்தம் எட்டுக்காலு உண்டு.
பொழங்காத சாதிக்காரம்மூச்சு கூட தீட்டுதான்.
அடியே லட்சுமிங்களா, அங்கிட்டு மேயாதிக.
அடிக்கு பயந்தோ, அந்த காத்துக்கு பயந்தோ
லட்சுமிங்க கூட ஒதுங்கித்தான் போவாளுங்க.
களை பறிக்கும் கூட்டத்துல காமாட்சி மட்டும்
கலரா இருப்பா, கட்டயும் செமயா இருப்பா.
கொசுவம் நனையுதடி காமாட்சி
கொஞ்சம் தூக்கி கட்டிக்கடி காமாட்சி.
பின்னாடி நின்னு பண்ணாடி கத்துவாரு.
காமாட்சி தைரியசாலி தூக்கி க(ா)ட்டி விட்டு
" தூ" ன்னு துப்பிக்குவா. ராத்திரிக்கு
பண்ணாடி பாய்க்கு படுக்கவும் போயிக்குவா.
கஞ்சிக்கு காசுக்கு களை பறிக்க வந்த
நம்ம தைரியலட்சுமிக்கு பண்ணாடி
பின்னாடி வந்தா கால் நடுங்கும்.
தைரியலட்சுமிக்கு, பண்ணாடி கொசுவம்
பார்க்க மாட்டார். குனிந்து தான் பார்ப்பார்.
தைரியலட்சுமிய குனிஞ்சி பாக்க பண்ணாடிக்கு
வெறுப்பு வந்த அன்னிக்குத்தான்
குனிய வச்சி உள்ளாடைக்கு உள்ளேயும் தன்
ஜாதி சொல்லி சாகசம் செய்தார்.
எழுப்பி துரத்தப்பட்ட நம்ம தைரியலட்சுமி
தொழுவத்தில் முழிச்சிருந்த இரண்டு
லட்சுமியிடமும் விபரம் சொல்லிவிட்டு
அங்கேயே தொங்கி உசிரயும் விட்டாள்.
இப்போதும் இரண்டு லட்சுமிகளும்
பண்ணாடி பரம்பரைக்கே பால்
சொரிந்துதான் இருக்காளுக.
வருடம் தவறாமல் மேச்சலில் வீரனிடம் தான்
பிள்ளை வரம் வாங்கி வராளுங்க.
தவறியும் அடுத்தவனை தீண்டுவதில்லை
அந்த கற்புலட்சுமிங்க.
பண்ணாடிக்கு பாய் விரிச்சா
இருட்டுல கற்புக்கு இரண்டு ஜாதியுண்டு.
இரண்டு லட்சுமிங்களுக்கு மட்டுமே தெரியும்
தாம் சொரியும் பாலில் கூட தீட்டும் உண்டு.
தைரியலட்சுமி சத்தியம் வாங்கிட்டு தான்
செத்துப் போனாங்கற ரகசியம்
லட்சுமிங்களுக்கு மட்டுமல்ல
தைரியலட்சுமி காளை வீரனுக்கும்
தெரிந்துதான் இருக்கிறது.
யார் சொல்லியிருப்பா.
நீங்களா சொன்னீங்க ............
கவிதாயினி எழில்விழி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக